ஆட்சிக்குழு உறுப்பினர் சுந்தராஜுவின் கடமை மற்றும் அர்ப்பணிப்புக்குப் பாராட்டு – முதலமைச்சர்

Admin

பிறை – டத்தோஸ்ரீ சுந்தராஜூ சோமு மாநில ஆட்சிக்குழு உறுப்பினராக பதவியேற்று மூன்று மாதங்களே ஆனாலும் இதுவரை அவரது பங்களிப்பும் அர்ப்பணிப்பும் மாநிலத்திற்கு நம்பிக்கையளிக்கிறது என்று முதலமைச்சர் சாவ் கொன் இயோவ் கூறினார்.

பிறை சட்டமன்ற உறுப்பினருமான சுந்தராஜு, வீடமைப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆட்சிக்குழு உறுப்பினராக அவரது சேவையை செவ்வனே ஆற்றுகிறார்.

முன்பு சுற்றுச்சூழல் சார்ந்த மேம்பாட்டாளராக வலம் வந்த சுந்தராஜு, தற்போது மாநில ஆட்சிக்குழு உறுப்பினராக கடந்த கால அனுபவங்கள் கொண்டு சிறந்த சேவையை ஆற்றி வருகிறார் என்று சாவ் கூறினார்.

“வீடமைப்புத் துறை சரியான பாதையில் நோக்கி முன்னோக்கிச் செல்வதை உறுதி செய்வதற்கான அவரது யோசனைகள் மற்றும் பரிந்துரைகள் நிலையான வளர்ச்சியை கொண்டு வருகிறது. இது பினாங்கு மக்களுக்கு வாழக்கூடிய சூழலை உருவாக்கும் வகையில் கொள்கைகள் பின்பற்றுதல் அல்லது புதியவற்றை உருவாக்குவதற்கு வரவேற்கப்படுகிறது.

“பினாங்கு மாநில வீடமைப்பு மேம்பாட்டிற்காக அதன் வளங்களை கொண்டு மாநில அரசாங்கம் எவ்வாறு மூலதனமாக்குவது என்று அடிக்கடி பரிந்துரை செய்வார்,” என்று பிறை சட்டமன்ற ஏற்பாட்டில் நடைபெற்ற தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பில் கலந்து கொண்டு இவ்வாறு தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், பிறை தொகுதியில் வசிக்கும் நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். மேலும், அவர்கள் அனைவருக்கும் பல விதமான உணவு வகைகள் மற்றும் பலகாரங்கள் பரிமாறப்பட்டது. இந்தியப் பாரம்பரிய ஆடல் பாடல் என கண் கவர் கலைநிகழ்ச்சி நடைபெற்றது.

கம்போங் மானீஸ் மறு மேம்பாட்டுத் திட்டத்தை குடியிருப்பாளர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கான தனது முன்னுரிமைத் திட்டங்களில் ஒன்றாகச் செய்து, தனது தேர்தல் அறிக்கையை நிறைவேற்றும் பணியில் தற்போது சுந்தராஜு இருப்பதாகவும் சாவ் கூறினார்.

“பிறை சட்டமன்ற உறுப்பினராக
மாபெரும் வெற்றியை பெற உதவிய உங்கள் அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் உங்கள் ஆதரவிற்கும் அன்பிற்கும் தலை வணங்க விரும்புகிறேன்.

இந்நிகழ்ச்சியில், பாகான் நாடாளுமன்ற உறுப்பினர் லிம் குவான் எங், பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் குமரன் கிருஷ்ணன், சுங்கை புயூ சட்டமன்ற உறுப்பினர் பீ சின் டிசே மற்றும் புக்கிட் தெங்கா சட்டமன்ற உறுப்பினர் கூய் சியோ-லியுங் ஆகியோரும் கலந்து கொண்டனர்.