ஆயிர் ஈத்தாமில் பொது மக்கள் நலனுக்காக ஈமச்சடங்கு மண்டபம் நிர்மாணிப்பு – இராமசாமி

Admin

ஆயிர் ஈத்தாம் – பினாங்கு மாநில இரண்டாம் துணை முதலமைச்சர் பேராசியர் ப.இராமசாமியின் மீண்டும் ஒரு மையக்கல் சாதனையான குளீர்சாதன ஈமச்சடங்கு மண்டபம் ஆயிர் ஈத்தாம் பகுதியில் திறப்புவிழாக் கண்டது.

“பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் மேற்பார்வையில் பொது மக்களின் வசதிக்காக இந்து ஈமச் சடங்கு மண்டபம் உருவாக்கப்பட்டது. இந்திய சமூகத்தின் மேம்பாட்டுக்கு பினாங்கு இந்து அறப்பணி வாரியம் ஆற்றும் சேவையின் வெற்றிச் சின்னமாக இந்த மண்டபம் திகழ்கிறது,” என பேராசிரியர் இராமசாமி அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்து இவ்வாறு கூறினார்.

இந்து ஈமச் சடங்கு மண்டபம் பினாங்கு, ஆயிர் ஈத்தாம், ஜாலான் பாடாங் தெம்பாக், அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் உருவாக்கப்பட்டுள்ளது.
கடந்த டிசம்பர் மாதத்தில் மாநில முதலமைச்சர் மேதகு சாவ் கொன் இயோ ஈமச் சடங்கு மண்டபத்திற்கு அடிக்கல் நாட்டினார்.

பிறை மாநில சட்டமன்ற உறுப்பினரும், இந்து அறப்பணி வாரியத் தலைவருமான இராமசாமி, 1,873 சதுர அடி நிலத்தில், தற்காலிக உரிமம் (TOL) ஆக்கிரமிப்பு அனுமதியுடன் அனைத்து வசதிகளுடன் நான்கு மாதத்திலே கிட்டத்தட்ட ரிம302,000 நிதிச்செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.

ஈமச் சடங்கு மண்டபம் நிர்மாணிப்பதற்கு மாநில அரசாங்கம் தற்காலிக உரிமம் வழங்கியுள்ளதுடன் நிலத்துக்கான குறைந்த ஆண்டு வாடகையுடன் இந்து அறப்பணி வாரியத்திற்கு வழங்கி ஆதரவளித்த பினாங்கு மாநில அரசாங்கத்திற்கு நன்றித் தெரிவிப்பதாக மேலும் பேராசிரியர் இராமசாமி தெரிவித்தார்.
பினாங்கு இந்து அறப்பணி வாரியம், மாநில அரசாங்கம் மற்றும் பினாங்கு மாநகர் கழகத்தின் ஆதரவில் இந்த ஈமச் சடங்கு மண்டபம் நிர்மாணிக்கப்பட்டுள்ளதைப் பேராசிரியர் ப.இராமசாமி சுட்டிக்காட்டினார்.

இம்மாதிரியான ஈமச் சடங்கு மண்டபம் பெருநிலத்தில் வாழும் மக்களுக்கு உதவும் வகையில் நிர்மாணிப்பதற்கு பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் சத்தீஸ் உத்தேசிக்க வேண்டும் என இராமசாமி கேட்டுக் கொண்டார்.
பி40 மக்களுக்காக இந்த ஈமச் சடங்கு மண்டபத்தில் உள்ள அறைகள் குறைந்த விலையில் வாடகைக்கு விடப்படும் என்பதுடன் முஸ்லிம் அல்லாத மற்ற இனங்களும் இந்த ஈமச் சடங்கு மண்டப வசதியைப் பயன்படுத்திக் கொள்ளலாம், என்றார்.

ஈமச் சடங்கு மண்டபம் நிர்மாணிப்பு வேலைகளைச் சுமுகமாக நடைபெற ஒத்துழைப்பு வழங்கிய பினாங்கு மாநகர் கழக கவுன்சிலர் காளியப்பன்; பினாங்கு மேயர் டத்தோ இராஜேந்திரன்; இந்து அறப்பணி வாரிய ஆணையர்கள் மற்றும் மேம்பாட்டு நிறுவனத்துக்கும் நன்றித் தெரிவிப்பதாகப் பேராசிரியர் ப.இராமசாமி கூறினார்.
இதனிடையே, புக்கிட் பெண்டேரா நாடாளுமன்ற உறுப்பினர் ஷார்லீனா முகமட் ரசீட் இந்த ஈமச் சடங்கு மண்டபத்துக்கு ரிங்கிட் 50,000 நிதி ஒதுக்கீடு வழங்குவதாக தமது உரையில் தெரிவித்தார்.

இந்து அறப்பணி வாரியத்தின் இந்த ஈமச் சடங்கு மண்டபம் மிகவும் அவசியமானது. இதன் மூலம் இப்பகுதியில் இறப்பு ஏற்பட்டால் இறந்தவர் பிரேதத்தைப் பத்திரமாகவும், சுகாதாதரா முறையில் பாதுகாப்பாக வைத்திருக்கவும் இறுதிச் சடங்குகள் செய்யவும் இந்த மண்டபம் இருப்பதைக் குறிப்பிட்டார்.

இந்த ஈமச் சடங்கு மண்டப திறப்பு விழாவில் பினாங்கு மேயர் டத்தோ இராஜேந்திரன், பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் சத்தீஸ் முனியாண்டி, செயலாளர் அர்வின் பூபாலன், இந்து அறப்பணி வாரிய ஆணையர்கள் தனபாலன், சாந்தா, காளியப்பன், இந்து அறப்பணி வாரிய நிர்வாகப் பொறுப்பாளர்கள், அரசு சாரா இயக்க தலைவர்கள் மற்றும் பிரமுகர்கள் இந்த ஈமச் சடங்கு மண்டப திறப்பு விழாவில் கலந்து கொண்டார்கள்.