ஆயிர் ஈத்தாம் சமூக மையம் பொது மக்களின் சமூகநல மையமாக செயல்படும்- முதல்வர் 

Admin

ஜார்ச்டவுன்- மாநில முதல்வர் மேதகு சாவ் கொன் யாவ் ஆயிர் ஈத்தாம் சட்டமன்ற மற்றும் புக்கிட் குளுகோர் நாடாளுமன்ற சமூக மையத்தை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைத்தார்.

“சட்டமன்ற, நாடாளுமன்ற சேவை மையத்திற்கு அடுத்த நிலையில் சமூக மையம் அவ்வட்டார பொது மக்களின் சமூகநல மையமாகத் திகழும்,” என முதல்வர் கூறினார்.

சட்டமன்ற உறுப்பினர் ஜோசப் எங், நாடாளுமன்ற உறுப்பினர் ராம் கர்பால், எம்.பி.கே.கே உறுப்பினர்கள் ஆகிய தரப்பினர் ஒத்துழைப்பில் இந்த கொள்கலன்(Kontena) மறுசுழற்சி செய்யப்பட்டு சமூக மையமாக உருமாற்றம் கண்டதற்கு பாராட்டு தெரிவித்தார். 

பொது மக்கள் இந்த சமூக மையத்தை தங்கள்  எதிர்நோக்கும் பிரச்சினைகளை நேரடியாக கொண்டு செல்லும் ஒரு தீர்வு மையமாக பயன்படுத்தலாம். மேலும்,  மக்கள் பிரதிநிதிகளான சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர் மட்டுமின்றி கவுன்சிலர்கள், எம்.பி.கே.கே உறுப்பினர்கள் ஆகியோரும் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு தீர்வுகாண முற்பட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

பினாங்கு2030 இலக்கின் அடிப்படையில் குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது. பினாங்கு மாநில மக்கள் தொகையில் மூத்த குடிமக்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் அவர்களின் சமூக நலன் காக்கும் மையமாகவும் இது திகழும், என்றார்.  

பினாங்கு, அட்வென்சிஸ் மருத்துவமனையின்  பெருநிறுவன சமூக திட்டத்தின் (சி.எஸ்.ஆர்) கீழ் முதல் பதிவு செய்யும் 100 மூத்த குடிமக்களுக்கு Influenza தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும்.

இந்நிகழ்ச்சியில் புக்கிட் குளுகோர் நாடாளுமன்ற உறுப்பினர் ராம் கர்பால் சிங்; ஆயிர் ஈத்தாம் சட்டமன்ற உறுப்பினர் ஜோசப் எங் சூன் சியாங்; செனட்டர் லிம் உய் இங்; அட்வென்சிஸ் மருத்துவமனை தலைமை நிர்வாக இயக்குநர் ரோனால்டு கோ மற்றும் பிரமுகர்கள் கலந்து கொண்டனர். 

பொது மக்களின் நன்மைக்காக மக்கள் பிரதிநிதிகள் இன்னும் கூடுதலான சமூக மையம் அமைக்குமாறு வலியுறுத்தினார்.

செய்தியாளர் சந்திப்புக் கூட்டத்தில் பேசிய மாநில முதல்வர், தேசிய தடுப்பூசி திட்ட இரண்டாம் கட்டத்தின் கீழ் பொருளாதார முன் வரிசை பணியாளர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும், என்றார்.

அறிவியல், தொழில்நுட்பம், புத்தாக்க அமைச்சரும் தேசிய தடுப்பூசி திட்ட ஒருங்கிணைப்பாளருமான கைரி ஜமாலுடின் உடனான சந்திப்புக் கூட்டத்தில் தற்போது பினாங்கு மாநிலத்தில் உற்பத்தி துறையைச் சேர்ந்த கோவிட்-19 வழக்குகள் அதிகப் பதிவு செய்யப்படுவதால் அத்தரப்பினருக்கு இந்த இரண்டாம் கட்ட தடுப்பூசி திட்டத்தில் முன்னுரிமை வழங்க ஒப்புதல் வழங்கப்பட்டது. 

பொது, தனியார் துறை ஒத்துழைப்பில் கூடிய விரைவில் பொருளாதார முன் வரிசை பணியாளர்களுக்கு தடுப்பூசி வழங்கப்படும். 

எனவே, அதிகமான தொழிலாளர்கள் கொண்ட தொழிற்சாலைகளுக்கு சம்பந்தப்பட்ட பொது, தனியார் மருத்துவமனையில் இருந்து நேரடியாக வந்து தடுப்பூசி வழங்க இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தடுப்பூசிகள் இலவசமாக வழங்கப்பட்டாலும்  அதற்கான சேவை கட்டணங்களை அதன் நிறுவனம் தான் ஏற்க வேண்டும். மேலும், தொழிற்சாலை  பணியாளர்கள் தடுப்பூசி பெற விண்ணப்பம் செய்வதை அதன் நிறுவனம் உறுதி செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.