ஜார்ச்டவுன் – பினாங்கு வாழ் இந்தியச் சமூகத்தின் ஆதரவு மற்றும் முன்னேற்றத்தை வலுப்படுத்த பினாங்கு இந்து அறப்பணி வாரியத்திற்கு (PHEB) கூடுதல் ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும்.
பாடாங் கோத்தா லாமா, மாநில சட்டமன்றக் கட்டிடத்தில் நடைபெற்ற சட்டமன்ற அமர்வின் போது பத்து உபான் சட்டமன்ற உறுப்பினர் அ.குமரேசன் இதனைப் பகிர்ந்து கொண்டார்.
இந்த ஒதுக்கீட்டை அதிகரிப்பதன் மூலம், பினாங்கில் உள்ள இந்தியச் சமூகத்தின் பல்வேறு தேவைகளைப் பூர்த்திச் செய்ய அதிக உதவிகளை வழங்க வழிவகுக்கும் என்றும் அவர் கூறினார்.
பினாங்கு மாநில அரசாங்கத்தின் கீழ் செயல்படும் பினாங்கு இந்து அறப்பணி வாரியம், கோவில்களை மட்டும் கவனித்துக் கொள்ளாமல், மாணவர்களுக்குக் கல்வி நிதியுதவி, போன்ற இதர சமூக நல உதவிகளும் நல்கி வருகின்றது.
“அண்மையில், பினாங்கு இந்து அறப்பணி வாரியம் ஒரு டயாலிசிஸ் மையத்தை நிறுவ இணக்கம் பூண்டுள்ளது.
“எனவே, பினாங்கு இந்து அறப்பணி வாரியம் இந்தியச் சமூகத்திற்கு கூடுதல் உதவிகளை வழங்க ரிம2 மில்லியன் வருடாந்திர நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்பட வேண்டும்,” என குமரேசன் நம்பிக்கை தெரிவித்தார்.
அதுமட்டுமின்றி, கடந்த ஆண்டு நடந்த மாநில சட்டமன்ற கூட்டத்தின் போது எழுப்பிய பினாங்கு-சென்னை நேரடி விமான சேவையின் நிலைப்பாட்டினை குறித்தும் குமரேசன் கேள்வி எழுப்பினார்.
பினாங்கு அனைத்துலக விமான நிலையத்தின் (PIA) விரிவாக்கம் குறித்த புதிய அறிவிப்புடன், மாநில அரசு இந்தியாவிற்கான நேரடி விமானங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்க வேண்டும் என்று குமரேசன் வலியுறுத்தினார்.
“கடந்த முறை பினாங்கில் இருந்து சென்னைக்கு நேரடி விமான சேவை வழங்கப்பட்டது. ஆனால் சில காரணங்களால் அது நிறுத்தப்பட்டது.
“இதனிடையே, பினாங்கு பிரதிநிதிகள் இந்த விஷயத்தைப் பற்றி விவாதிக்க இந்தியாவிற்குச் சென்றதை நான் அறிவேன். ஆகவே, அந்த சந்திப்பின் நிலைப்பாட்டினை அறிய விரும்புகிறேன்.
“இந்தியாவின் தென் பகுதியிலும், வடக்குப் பகுதியிலும் வணிகம், சுற்றுலா என பல வாய்ப்புகள் இடம்பெறுகிறது,” என்று குமரேசன் விவரித்தார்.