ஜார்ச்டவுன் – பினாங்கு மாநிலத்தின் தென்மேற்கு மாவட்டத்தில், குறிப்பாக சுங்கை ஆராவில் வசிக்கும் இந்தியச் சமூகத்தினருக்காக ஈமச்சடங்கு மண்டப மேம்பாட்டுத் திட்டம் நிர்மாணிக்கப்படுகிறது. இத்திட்டம் இறந்த ஆன்மாக்களுக்கு கண்ணியத்துடனும் அமைதியுடனும் இறுதிச் சடங்குகளைச் செய்ய துணைபுரிகிறது.
தென்மேற்கு மாவட்டத்தில் இந்தியர்கள் இறுதிச் சடங்கு மேற்கொள்ள முறையான வசதிகள் இல்லாததைத் தொடர்ந்து, அதற்கான அவசரத் தேவையை அறிந்து இத்திட்டம் மேற்கொள்ளப்படுகிறது என்று மாநில வீட்டுவசதி மற்றும் சுற்றுச்சூழல் ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ ஸ்ரீ சுந்தரராஜூ சோமு கூறினார்.
அண்மையில் டிக்டோக்கில் அவர் பதிவிட்ட ஒரு காணொளியில், சுங்கை ஆராவில் உள்ள ஸ்ரீ சுப்பிரமணியர் கோயில் நிர்வாகம் சுங்கை ஆரா இராணுவ முகாமிற்கு எதிரே உள்ள கோயிலுக்குச் சொந்தமான நிலத்தில் ஒரு ஈமச்சடங்கு மண்டபம் நிர்மாணிக்க தன்னை அணுகியதாக அவர் பகிர்ந்து கொண்டார்.
“இந்தத் திட்டத்தை நான் மதிப்பாய்வு செய்தப் பிறகும், அங்குள்ள உள்ளூர் இந்தியச் சமூகம் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் சிரமங்களைப் புரிந்துகொண்டு, இத்திட்டம் செயல்படுத்த இணக்கம் கொண்டுள்ளேன்.
“இந்தியச் சமூகம் தங்கள் அன்புக்குரியவர்களை கௌரவிக்கவும், துயரமான தருணங்களை அமையுடனும் கண்ணியத்துடனும் கடந்து செல்லவும் நன்கு பொருத்தப்பட்ட, மரியாதைக்குரிய இடத்தைப் பெற வேண்டும்,” என்று அவர் கூறினார்.
இந்த முன்முயற்சி திட்டம் நீண்ட கால அடிப்படையில் மக்களுக்கு பயனளிக்கும் என்பதால், அதற்கு முழுமையாக நிதியளிக்கும் வகையில் டத்தோ ஸ்ரீ சுந்தரராஜூ அவரது சொந்த நிதியில் ரிம150,000-ஐ வழங்கியதாக அறியப்படுகிறது.
இந்த ஆண்டு ஜூன் மாதம் கட்டி முடிக்க திட்டமிடப்பட்டுள்ள இந்த ஈமச்சடங்கு மண்டபத்தில், ஒரே நேரத்தில் இரண்டு ஈமச் சடங்குகள் நடத்த முடியும். இதில், மீளா துயரத்தில் இருக்கும் குடும்பங்களின் வசதிக்காக குளியலறை மற்றும் பிற அத்தியாவசிய வசதிகள் போன்ற அம்சங்களும் இடம்பெறும்.
ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ ஸ்ரீ சுந்தராஜு, கடந்த ஏப்ரல்,3 ஆம் தேதி நேரில் இக்கட்டுமானப் பணிகளின் முன்னேற்றத்தை நேரில் சென்று பார்வையிட்டார்.
ஒரு பரந்த கண்ணோட்டத்தில், மாநிலம் முழுவதும் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தது ஒரு ஈமச்சடங்கு மண்டபம் மற்றும் ‘கிரிகை’ தளத்தைக் கட்டுவதற்கு சுந்தரராஜூ உறுதிபூண்டுள்ளார்.