இந்திய கலாச்சாரம் சார்ந்த புத்தகப் படைப்புகள் அதிகம் வெளியிடப்பட வேண்டும் – பேராசிரியர்.

Admin

கெபுன் பூங்கா – ‘‘Tiffin – An Untold Story’ எனும் புத்தகம் பிரகாஸ், 41 மற்றும் அவர்தம் துணைவியார் புனிதா,40 தம்பதியரால் எழுதப்பட்டு அண்மையில் பினாங்கு இந்து அறப்பணி வாரிய வளாகத்தில் இனிதே வெளியீடுக் கண்டது. இப்புத்தகம் பினாங்கு மாநில இரண்டாம் துணை முதல்வரும் இந்து அறப்பணி வாரியத் தலைவருமான பேராசிரியர் ப.இராமசாமி தலைமையில் வெளியீடுக் கண்டது.

இப்புத்தக எழுத்தாளர் புனிதா முத்துச் செய்திகள் நாளிதழுக்கு அளித்த பேட்டியில் 2014-ஆம் ஆண்டு 185 விதமான உணவு கொள்கலன்கள் (tiffin carriers) சேமித்ததில் மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றதன் காரணமாக இப்புத்தகம் எழுத தூண்டுகோலாக அமைந்தது என்றார். இதுவரை, 200 உணவு கொள்கலன்கள் வாங்க ரிம200,000 செலவிட்டுள்ளதாகவும் இவை அனைத்தும் மலேசியா, சிசிகோசோலாவியா, ஜெர்மனி, ஹங்கரி, அஸ்ட்ரியா, சீனா, மியன்மார், ஹொலன் மற்றும் துர்கி போன்ற நாடுகளில் இருந்து வாங்கியதாக மேலும் புனிதா விவரித்தார். இந்த உணவு கொள்கலன் இந்தியர்களால் ‘தூக்கு சட்டி’ என்று அழைக்கப்படும்.

“இம்மாதிரியானப் புத்தகங்கள் எழுத இன்னும் அதிகமான எழுத்தாளர்கள் முன்வர வேண்டும்; இந்நூல் எழுத்தாளர்கள் உணவு கொள்கலன்களைச் சிரமமின்றி சேகரித்துள்ளனர். இந்த வகையான பொருட்களைச் சேகரிக்க முடியும் என்று நான் ஒருபோதும் நினைத்திருக்கவில்லை. இது ஒரு கலாச்சாம் மிக்க செயலாகும்”, என பேராசிரியர் ப.இராமசாமி தமது தொகுப்புரையில் இவ்வாறு குறிப்பிட்டார்.

“பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் சார்பாக ரிம10,000 மானியம் வழங்குவதாகவும்; கலை மற்றும் கலாச்சாரத்தில் ஆர்வமுள்ளவர்களால் இம்மாதிரியான புத்தகம் பாராட்டப்படும்”, என அவர் மேலும் சூளுரைத்தார்.

‘Tiffin – An Untold Story’ இப்புத்தகம் ரிம75 விலையில் நான்கு மொழிகளிலும் எழுதப்பட்டுள்ளது. இந்த புத்தகம் வருகின்ற 25 ஏப்ரல் அன்று அனைத்துலக ரீதியில் ‘இந்தான் பெரானாகான்’ பொருட்காட்சியகத்தில் வெளியீடுக் காணவுள்ளது.