ஷான் குழந்தை பராமரிப்பு இல்ல ஏற்பாட்டில் நடைபெற்ற ” இந்திய பாரம்பரிய விருந்தோம்பல் நிதி திரட்டு விழாவை” அதிகாரப்பூர்வமாகத் துவக்கி வைத்தார் மாநில இரண்டாம் துணை முதல்வரும் ஷான் பராமரிப்பு இல்ல புரவலராகவும் திகழும் பேராசிரியர் ப.இராமசாமி .
“பினாங்கு இந்து அறப்பணி வாரியம் ஒரு கட்டிடம் அல்லது சொத்து வாங்கி குழந்தை காப்பகம் அமைக்க திட்டமிட்டுள்ளது” என பேராசிரிரியர் பட்டர்வொர்த் மாரியம்மன் அரங்கத்தில் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு வரவேற்புரையில் தெரிவித்தார்.
தற்போது அதிகமான குழுந்தைகள் குடும்ப சிதைவினால் பாதிக்கப்பட்டு புறக்கணிக்கப்படுகின்றனர். எனவே, பாதிக்கப்பட்ட குழந்தைகளை எவ்வித இனம் மதம் பேதமின்றி அறப்பணி வாரியம் எடுத்து அவர்களை பாதுகாக்க ஆயுத்தம் கொண்டுள்ளதாகத் தெரிவித்தார். இந்தக் குழந்தை பராமரிப்பு காப்பக தோற்றத்தின் பிரதான நோக்கமாக மாணவர்களுக்கு உரிய கல்வி பயில வாய்ப்பு வழங்குவதே ஆகும் என மேலும் தெரிவித்தார்.
ஷான் ஆதரவற்ற குழந்தை பராமரிப்பு இல்லத்திற்கு தொடக்கத்தில் ரிம5,000 ரொக்கமாகவும் இன்று கூடுதலாக ரிம5,000 பொருட்கள் வாங்குவதற்கு கொடுப்பதாக அறிவித்தார் பேராசிரியர். இந்நிகழ்வில் திரட்டப்படும் நிதியம் ஷான் ஆதரவற்ற குழந்தை பராமரிப்பு இல்ல பொது வசதிகளை மேம்படுத்தவும் குழந்தைகளுக்கு ஏற்ற சூழலை உருவாக்கவும் பயன்படுத்தப்படும் என ஷான் இல்லத்தின் தலைவர் டத்தோ பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
2007-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த இல்லத்தில் 20 குழந்தைகள் இருப்பதாகவும் 5 முதல் 17 வயதுக்கு உட்பட்டவர்கள் எனக் கூறினார். இந்த இல்லத்தை நடத்த ஒவ்வொரு மாதத்திற்கும் ஏறக்குறைய ரிம11,000 செலவிடப்படும். எனவே, பொது மக்கள் நிதியுதவி வழங்க வரவேற்கப்படுகின்றனர். அதோடு, குழந்தைகள் தத்தெடுத்து அவர்களின் கல்வி செலவுகளை ஏற்றுக் கொள்ளவும் கேட்டுக்கொண்டனர்.
இந்நிகழ்வில் ஏற்பாட்டு குழுத் தலைவர் திரு குருநாதன், செபராங் பிறை நகராண்மைக் கழக உறுப்பினர்களான திரு டேவிட் மார்ஷல் மற்றும் திரு சத்திஸ் கலந்து கொண்டனர்