பட்டர்வொர்த் – கணவர் இறந்த பிறகு வீடு வாசல் இல்லாத நிலையில் உறவினர் வீட்டில் ஒட்டு குடித்தனத்தில், உடல் பேறு குறைந்த மகனை வைத்துக்கொண்டு, எந்த வருமானமும் இன்றி கண்ணீரில் ஒரு குடும்பம் பட்டர்வொர்த் வட்டாரத்தில் வாழ்ந்து வருகின்றனர்.
“கடந்த ஒரு மாதத்திற்கு முன் தனது கணவர் இராமு த/பெ இராமசாமி ( வயது 46 ) எதிர்பாராத வகையில் இறந்து விட்டார். இதற்கு முன் தன் தந்தை கிருஷ்ணனும் இறந்து விட்டார். எனக்கு மனநலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் தொடர்ந்து மருந்து எடுத்து வருகிறேன், என் இளைய மகன் லோகேந்திரன் த/பெ இராமு ( வயது 11 ) முற்றிலும் மூளையில் வளர்ச்சி குறைந்து உடல் பேறு குன்றியவர். என் மூத்த மகன் சந்தோஷ் த/பெ இராமு ( வயது 13 ) மாக் மண்டின் இடைநிலைப் பள்ளியில் ஒன்றாம் படிவம் பயின்று வருகிறார்”, என்று கி.வசந்தி, 42 கண்ணீர் மல்க தனது கதையை விவரித்தார்.
இந்த எதிர்பாராத சூழ்நிலையில் தனது உறவினர் வீட்டில் ஆதரவு தேடி தற்சமயம் ஒட்டு குடித்தனத்தில் வாழ்ந்து வருகின்றனர். இந்த வீட்டில் நிரந்தரமாக தங்க வாய்ப்பு இல்லை என்பதால், தமக்கு யாராவது அவசரமாக ஒரு வீடு பெற்றுக் கொடுத்து, வாழ்வாதாரத்திற்கு உதவிட வசந்தி மலேசிய இந்துதர்ம மாமன்ற பினாங்கு அருள்நிலைய தலைவர் ந.தனபாலன் அக்குடும்பத்தை நேரில் சென்று பார்வையிட்ட போது உருக்கமாகக் கேட்டுக்கொண்டார்.
அவரின் கண்ணீர் கதையை கேட்ட பின்னர் மலேசிய இந்துதர்ம மாமன்ற அருள் நிலைய தலைவர் ந.தனபாலன் சிறு நிதியுதவி வழங்கினார். மேலும்,அவருக்கு புதிய வீடு கிடைத்த பின்னர் அக்குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுப்பதாக நம்பிக்கை தெரிவித்தார்.
“படுத்த படுக்கையில் உள்ள உடல் பேறு குறைந்த மகனை அருகிலிருந்து பார்த்துக்கொள்ள வேண்டிய சூழ்நிலையால் வேலைக்கு செல்ல முடியவில்லை. என் இளைய மகனுக்கு (உடல் பேறு குறைந்தவருக்கு) மாதந்தோறும் சமூக நல இயக்கத்தின் உதவித்தொகை கிடைக்கும். அதை வைத்துக் கொண்டு, வாழ்ந்து வருகிறோம் என்று வசந்தி தனது சோகத்தை விவரித்தார்.
வீட்டில் சம்பாதிக்க கூடிய அளவிற்கு யாரும் இல்லை என்ற சூழலில், எங்களைப் பாதுகாக்க யாரும் இல்லாத நிலையில் நாங்கள் எங்கள் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு வாழ்ந்து வருகிறோம் என்றார்.
எங்கள் வாழ்வாதாரத்திற்கும், என் மகளின் மருத்துவ செலவினத்திற்கும் உதவ விரும்பும் கருணை உள்ளங்கள் K.VASANTHY A/P KRISHNAN, CIMB 7068458894 என்ற வங்கி கணக்கில் தங்களின் உதவித்தொகையை செலுத்தலாம் என்று சோகத்தில் ஆழ்ந்த வசந்தி கேட்டுக்கொண்டார். மேல் விபரங்களுக்கு 010-4651385 என்ற எண்களில் வசந்தியை தொடர்பு கொள்ளலாம்.
இவரின் சூழ்நிலையை அறிந்த நல்லுள்ளம் கொண்ட மாஸ்டர் இராஜேந்திரன் இராஜு வாழ்வாதாரத்திற்கு தேவையான அடிப்படை பொருட்கள் வசந்தியின் குடும்பத்திற்கு வாங்கி தந்தார்.