ஜார்ச்டவுன்: பினாங்கு உயர்நீதிமன்றம் கடந்த ஆண்டு டிசம்பர் 20ஆம் தேதி பிறப்பித்த உத்தரவின்படி, பினாங்கு இந்து அறப்பணி வாரியம் (PHEB) அதன் முன்னாள் நிர்வாக இயக்குநர் டத்தோ இராமச்சந்திரனுக்கு நஷ்டயீடு மற்றும் செலவினங்களுக்கான தொகையாக ரிம106,000-ஐ செலுத்தியுள்ளது.
இந்த அறப்பணி வாரியத்தின் தலைவரான ஆர்.எஸ்.என் இராயர், உயர்நீதிமன்ற நீதிபதியான ஆனந்த் பொன்னுதுரை முன்னிலையில், முழுமையான மற்றும் இறுதி தீர்வுக்கான காசோலையைச் சமர்ப்பித்தார்.
“கடந்த ஆண்டு, இந்த அறவாரியத்தின் தலைமைப் பொறுப்பேற்றதிலிருந்து, ஏறக்குறைய 318 மாணவர்களுக்கு மேற்கல்வி தொடரும் பொருட்டு கல்வி நிதியுதவி வழங்கியுள்ளோம். இத்திட்டத்தின் கீழ் நாங்கள் (PHEB) சுமார் ரிம376,250 நிதிச் செலவிட்டுள்ளோம்.
“எனவே ரிம100,000 என்பது ஒரு பெரியத் தொகையாகும். ஒவ்வொரு இந்து மாணவருக்கும் ரிம1,000 கொடுத்தால், அவர்களில் பலருக்கு மேற்கல்வியைத் தொடர உதவ முடியும். இந்நிதியானது எங்களின் பணம் அல்ல மாறாக பொது மக்களின் நன்கொடை மூலம் பெறப்பட்டது,” என ஆர்.எஸ்.என் இராயர் விளக்கமளித்தார்.
இன்று வழங்கப்பட்ட நஷ்டயீடு பணத்தைக் கொண்டு தொண்டு நோக்கங்களுக்காக இராமச்சந்திரன் பயன்படுத்த வேண்டும், என செனட்டரும் அறப்பணி வாரியத்தின் துணை தலைவருமான டாக்டர் லிங்கேஸ்வரன் கேட்டுக் கொண்டார்.
இராமச்சந்திரன் நிர்வாக இயக்குனர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட சூழ்நிலை பேரிலும், இது அனுதாபத்தின் அடிப்படையிலும் இத்தீர்ப்பை எதிர்த்து நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவில்லை என்று நிருபர் கேட்ட கேள்விக்கு இராயர் இவ்வாறு பதிலளித்தார்.
“நான் PHEB இன் ஆணையராக இருந்தபோது, இராமச்சந்திரன் தவறாக பணிநீக்கம் செய்யப்படுவதை நான் விரும்பவில்லை என்பதால், வாரியக் கூட்டங்களின் போதும் எனது ஆட்சேபனைகளையும் எழுப்பினேன் என்பதை இராமச்சந்திரன் நன்கு அறிவார்.
“மேலும், தற்போதைய PHEB (தலைமை) இந்த விஷயத்தை சுமுகமாக தீர்க்க வேண்டும் என்று விரும்புவதால், இந்த விவகாரம் குறித்து நீதிமன்றத்தில் மேல்முறையீடுச் செய்ய செய்ய நாங்கள் விரும்பவில்லை.
“இந்து அறவாரியத்தின் நிர்வாக இயக்குநராக இருந்த டத்தோ இராமச்சந்திரன் அவர்களை அநியாயமாகப் பதவி நீக்கம் செய்யப்பட்டதாக உயர் நீதிமன்றம் கண்டித்து அவருக்கு நஷ்டயீடு மற்றும் செலவினங்களுக்கான தொகையாக ரிம106,000-ஐ செலுத்துமாறுத் தீர்ப்பளிக்கப்பட்டது.