இந்து அறப்பணி வாரிய கலந்துரையாடல் அமர்வுகள் வழி அனைத்து தரப்பினரின் கருத்துகளுக்கும் செவி மடுக்கும் – இராயர்

 

ஜார்ச்டவுன் – பினாங்கில் உள்ள இந்து சமூக மேம்பாட்டிற்கு உதவும் வகையில் பினாங்கு இந்து அறப்பணி வாரியம் (PHEB) அதன் சேவையை தொடரும் என அதன் தலைவர் ஆர்.எஸ்.என் இராயர் தெரிவித்தார்.

தொடக்கமாக, பினாங்கு இந்து அறப்பணி வாரியம் இரண்டு கலந்துரையாடல் அமர்வுகளை கடந்த செப்டம்பர்,17 அன்று தீவு மற்றும் பெருநிலப்பகுதியிலும் இந்து சமூகத்தை ஈடுபடுத்தவும், கோயில் நிர்வாகம், கல்வி மற்றும் சுகாதாரம் போன்ற பிரச்சனைகள் குறித்து கருத்துக்களை சேகரிக்கவும் நடத்தப்பட்டது.

முதல் அமர்வு எஸ்பிளனேடில் உள்ள டவுன் ஹாலில் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து இரண்டாவது அமர்வு பட்டர்வொர்த் டிஜிட்டல் நூல்நிலையத்தில் நடைபெற்றது.

இரு இடங்களிலும் நூற்றுக்கணக்கான பங்கேற்பாளர்கள், முக்கியமாக கோவில் தலைவர்கள் மற்றும் இளைஞர்கள் திரண்டனர்.

இந்நிகழ்ச்சியில், கல்வி தொடர்பான கேள்விகளுக்குப் பதிலளித்த, PHEB துணைத் தலைவர் செனட்டர் டாக்டர் ஆர்.ஏ.லிங்கேஸ்வரன் பல்கலைக்கழகத்திற்குச் செல்லும் மாணவர்களுக்கு நிதியுதவி வழங்குவதற்காக கல்வி நிதியை அதிகரிக்க வாரியம் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

“விரைவில், பல்கலைக்கழகம் செல்லும் மாணவர்களுக்கான மானியங்கள் வழங்கும் இணையதள விண்ணப்பத்தை நாங்கள் தொடங்க உள்ளோம்.

“அனைத்து மானியங்களும் வெளிப்படையாகவும், அதன் நிதி ஒதுக்குடுகள் அனைத்தும் PHEB சமூக வலைத்தளங்களில் வெளியிடப்படும்,” என்று அவர் கூறினார்.

PHEB கோவில்களில் பிரத்தியேக வகுப்புகள் நடத்தவும் திட்டமிட்டுள்ளது, இதில் மதப் போதனைகள், தேவார வகுப்புகளும் இடம்பெறும்.

சமயம் மற்றும் கலாச்சார ஆய்வுகள் தொடர்பான அத்தியாவசிய தகவல்களை வழங்குவதிலும், மதம் மற்றும் கலாச்சாரம் தொடர்பான விஷயங்களில் ஆழமான அறிவை இந்து சமூகம் பெற்றிருப்பதை உறுதி செய்வதிலும் PHEB முக்கியப் பங்கு வகிக்கும் என பங்கேற்பாளர்கள் நம்பிக்கை கொள்கின்றனர்.

பொது மக்கள் அறப்பணி வாரியத்தின் பரிசீலனைக்காக சில ஆலோசனைகளையும் கருத்துக்களையும் தெரிவித்தனர்.

இந்தப் பரிந்துரைகளில் இந்து தம்பதிகளுக்கான திருமணத்திற்கு முன்பு பட்டறையில் பங்கேற்க ஊக்குவிப்பதும் மற்றும் அவர்கள் இந்து மத கோட்பாடுகளைக் கடைபிடிப்பதை உறுதிசெய்ய மத நிகழ்வுகளை கண்காணிக்க ஒரு சிறப்பு பணிக்குழுவை உருவாக்கும் திட்டமும் அடங்கும்.

அதுமட்டுமல்லாமல், தைப்பூசக் கொண்டாட்டத்தின் போது அருள்மிகு ஸ்ரீ முனீஸ்வரர் கோயிலில் அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்து, பக்தர்கள் தண்ணீர்மலை ஆலயத்தை நோக்கி தங்கள் நேர்த்திக்கடனை நிறைவேற்றுவதற்காக இலகுவாக செல்ல முடியும் என்றும் அவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.

தமிழ்ப்பள்ளிகளின் நல்வாழ்வு; கோயில் நிர்வாக உறுப்பினர்கள் தேர்வு மற்றும் இறுதிச் சடங்குகளை சில இறுதிச் சடங்கு நிறுவனங்கள் முறையற்ற முறையில் நிறைவேற்றுவது பற்றிய விமர்சனங்கள் ஆகியவை அன்று விவாதிக்கப்பட்டன.

இதற்கிடையில், பெரும்பாலான பெருநிலத்தில் வாழும் பொது மக்கள், PHEB இன் பராமரிப்பில் உள்ள கோயில்கள் குறித்து கேள்விகளை எழுப்பியதில், புதிய வாரியம் இனி பினாங்கில் உள்ள எந்த கோயில்களையும் கையகப்படுத்த விரும்பவில்லை, மாறாக, கல்வி மற்றும் ஆரோக்கியம் தொடர்பான இந்து சமூகத்தை மேம்படுத்துவதில் கவனம் செலுத்த விரும்புகிறது என்று இராயர் பதிலளித்தார்.

“மக்களின் கருத்துக்களைக் கேட்கவும், கடந்த காலத் தவறுகளை மீண்டும் நிகழாமல் இருக்கவும், பினாங்கில் உள்ள இந்து சமூகத்திற்கான நமது பொறுப்புகளை எவ்வாறு திறம்படச் செய்ய முடியும் என்பதைப் பார்க்கவும் நாங்கள் இங்கு கூடியுள்ளோம்.

“முக்கியமான விஷயங்களில் வாரியம் எடுக்கும் முடிவினை பொதுமக்கள் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும் என்று விரும்பும் நாட்கள் கடந்துவிட்டன.

“பினாங்கில் உள்ள ஒவ்வொரு இந்தியர்களுக்கும் பினாங்கு இந்து அறப்பணி வாரியம் சொந்தமானது என்று நாங்கள் நம்புவதால், உங்கள் அனைவரின் கோரிக்கைகளைக் கேட்கவும் மேலும் திறம்பட ஈடுபடவும் நாங்கள் இங்கு இருக்கிறோம்,” என்று இராயர் கூறினார்.

மேலும், இம்மாநிலத்தில் உள்ள கோவில்களுக்கு வாரியம் வழங்கும் நன்கொடைகளும் நிறுத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இவ்வாரியம் விரைவில் பினாங்கு மாநிலத்தில் இரண்டு டயாலிசிஸ் மையங்களை, தீவு மற்றும் பெருநிலத்தில் அமைக்க திட்டமிட்டுள்ளது.

PHEB ஆணையர் குமரன் கிருஷ்ணன் கூறுகையில், பினாங்கில் உள்ள இந்து சமூகத்தின் நலனுக்காக மிகவும் சரியான மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட முறையில் ஆட்சிச் செய்வதில் இவ்வாரியம் கவனம் செலுத்துகிறது.

“இந்த அமர்வுகளின் போது விவாதிக்கப்பட்டத் தலைப்புகள் கடந்த கால தவறுகளைச் சுற்றியே இருந்தாலும் பரவாயில்லை, ஏனென்றால் மக்கள் தங்கள் எண்ணங்களையும் அதிருப்தியையும் பகிர்ந்து கொள்ள அனைத்து உரிமையும் உள்ளது.

“நாங்கள் கேட்க இங்கு இருக்கிறோம், மேலும் பல ஆலோசனைகளைக் கேட்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம், இது எதிர்காலத்தில் புதிய விஷயங்களை எவ்வாறு கையாள வேண்டும் என்பதைப் பற்றிய சிறந்த புரிதலை எங்களுக்கு வழங்கும்,” என்று அவர் மேலும் கூறினார்.