இந்து ஆலயங்கள் சமூகம், கல்வி மையமாக உருமாற்றம் காண இலக்கு – குமரேசன்

குளுகோர் – “இந்து ஆலயங்கள் வழிபாட்டிற்கு மட்டுமின்றி சமூகம் மற்றும் கல்வி மையமாகவும் உருமாற்றம் காண வேண்டும். இதன் மூலம், சமூகநலன் மிக்க திட்டங்கள் வழிநடத்தவும் இந்திய சமூகத்தினர் பல நன்மைகள் அடையவும் வழிவகுக்கும்.

“பொதுவாகவே, ஆலயங்கள் வழிபாடு மற்றும் சமயம் சார்ந்த நிகழ்ச்சிகள் மட்டுமே ஏற்று நடத்தும் தலமாக மட்டும் இல்லாமல் சமூகம், கல்வி மற்றும் சமுதாய முன்னேற்றத்திற்கு முன்னெடுத்துச் செல்லும் மையமாகவும் திகழ வேண்டும்.

பத்து உபான் சட்டமன்ற உறுப்பினர் குமரேசன் அத்தொகுதியில் அமைந்திருக்கும் இந்து ஆலயங்களின் நிர்வாக உறுப்பினர்கள் உடனான சந்திப்புக் கூட்டத்தில் கலந்து கொண்டு இவ்வாறு தெரிவித்தார்.

ஆலயங்கள் தகவல் மையமாக விளங்குவதன் மூலம் மாநில அரசின் Mysejahtera சமூகநலத் திட்ட நிதியுதவி; பினாங்கு மேம்பாட்டுக் கழகத்தின் கீழ் வழங்கப்படும் சிறு தொழில் வியாபாரிகளுக்கான கடனுதவித் திட்டம் மற்றும் பல திட்டங்கள் பொது மக்கள் அறிந்து கொள்வதற்கும் உரிய உதவிகள் பெறுவதற்கும் துணைபுரியும், என சட்டமன்ற உறுப்பினர் குமரேசன் கூறினார்.

மேலும், மாநில அரசு இஸ்லாம் அல்லாத வழிபாட்டு தலங்களுக்கான நிதியம் (RIBI) மூலம் ஆலயங்களின் மேம்பாடு மற்றும் பராமரிப்புப் பணிகளுக்காக ரிம50,000 வரையிலான நிதியுதவி பெற சம்பந்தப்பட்ட இஸ்லாம் அல்லாத ஆலயங்கள் விண்ணப்பிக்க வரவேற்கப்படுகின்றனர்.

ஆலயங்களில் மாணவர்களுக்கானப் பிரத்தியேக வகுப்பு, கணினி வகுப்பு, டிஜிட்டல் நூலகம் அமைப்பதன் மூலம் ஒரு கல்வி மையமாக உருமாறுவதோடு கல்வி சார் சமூகமாகத் திகழ வழிவகுக்கும்.

இந்த சந்திப்புக் கூட்டத்தில் ஐந்து ஆலயங்களான பத்து உபான் ஸ்ரீ வீர காளியம்மன் ஆலயம்; சுங்கை டுவா, ஸ்ரீ கிருஷ்ணர் ஆலயம்; சுங்கை டுவா ஸ்ரீ முனீஸ்வரர் ஆலயம்; சுங்கை டுவா ஸ்ரீ ருத்ர வீர காளிகாபரமேஸ்வரி ஆலயம் மற்றும் பிராவுன் கார்டன், ஸ்ரீ நாகக்கன்னி ஆலயம் ஆகிய வழிபாட்டு தல நிர்வாக உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இந்த சந்திப்புக் கூட்டத்தை ஏற்று நடத்திய மலேசிய இந்து சங்க குளுகோர் வட்டாரப் பேரவை ஆலய ஒருங்கிணைப்புத் தலைவர் அர்வின் பூபாலன் அவர்களுக்கு நன்றிக் கூற கடமைப்பட்டுள்ளேன். இக்கூட்டத்தில் ஏறக்குறைய 30 பேர்கள் கலந்து கொண்டனர் என குமரேசன் கூறினார்.

சட்டமன்ற உறுப்பினர், தனது தொகுதியில் உள்ள அனைத்து ஆலயங்களும் தங்களின் நிர்வாகத்தின் கீழ் எதிர்நோக்கும் பிரச்சனைகள் பற்றி விவாதிக்க ஒன்றுக்கூடல் கூட்டங்களில் கலந்து கொள்ளுமாறு வலியுறுத்தினார்.

ஏனெனில், இந்து ஆலயங்கள் எதிர்நோக்கும் சட்டப்பூர்வமான சங்க பதிவு (ROS); ஆவணப் பதிவு மற்றும் நிலப் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாட இந்தச் சந்திப்புக் கூட்டம் துணைபுரிகிறது, என்றார்.

ஆலயங்களில் சமயம் சார்ந்த வகுப்புகளான பரதநாட்டியம், தேவாரம், திருக்குறள் ஓதுதல் போன்ற வகுப்புகள் வழிநடத்த மலேசிய இந்து சங்க குளுகோர் வட்டாரப் பேரவைத் தயார் நிலையில் இருப்பதாகவும் சம்பந்தப்பட்ட ஆலய நிர்வாகத்தின் ஒத்துழைப்பைப் பெரிதும் எதிர்பார்ப்பதாகக் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் பத்து உபான் ஸ்ரீ வீர காளியம்மன் ஆலயத்திற்கு மலேசிய இந்து சங்க வாழ்நாள் உறுப்பினர் நற்சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்த சான்றிதழை கோவில் செயலாளர் திரு.முனீஸ்வரன் ராஜாமணி பெற்றுக்கொண்டார். பினாங்கு இந்திய நல்வாழ்வு சங்கம் மற்றும் பினாங்கு பத்து உபான் ஐய்யப்பன் சேவை சங்கம் ஆகியவையும் வாழ்நாள் உறுப்பினர் நற்சான்றிதழ் பெறவதற்கான விண்ணப்பத்தைப் பெற்றுக் கொண்டனர்.