ஜார்ச்டவுன் – பினாங்கு மாநில இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி, கெடா மந்திரி பெசார் (எம்.பி) முஹம்மது சனுசி முகமது நோர் அவர்களுக்கு கடிதம் எழுதுயது யாரையும் தூண்டிவிடுவதற்கான நோக்கமல்ல மாறாக இந்து ஆலய உடைப்பு குறித்த விவகாரம் தீர்வுக்காணவே இக்கடிதம் எழுதினேன், என்றார்.
“ஆலய நிர்வாகத்தினர் பினாங்கு இந்து அறப்பணி வாரியத் தலைவர் என்ற அடிப்படையில் என்னிடம் உதவியை நாடினர். எனவே, இந்த விஷயத்தை ஒரு இணக்கமான முறையில் தீர்க்குமாறு அவருக்கு அறிவுறுத்துவதற்காகவே கெடா எம்.பி-க்கு ஒரு கடிதம் எழுதினேன்.
“நான் அவரிடம் ஆலய நிர்வாகத்துடன் கலந்து ஆலோசித்து விஷயத்தை அமைதியாக தீர்வுக்காணுமாறு கேட்டுக்கொண்டேன். அதற்கு பதிலாக, எம்.பி நான் தூண்டுதல் ஏற்படுத்துவதை ‘ஊசி குத்துதலுக்கு’ உவமையாக சாடியுள்ளார்.
“இந்த ஆலய நிர்வாகத்தினர் இந்து அறப்பணி வாரியத் தலைவர் என்ற முறையில் தான் எனது உதவியை நாடினர். எனவே, அவர்களுக்கு இந்த பிரச்சனைக்கு உதவிக்கரம் நீட்டவே முற்பட்டேன்,” என தெளிவுப்படுத்தினார்.
இந்த ஆலயத்திற்கு மாற்று இடம் வழங்கியதாக கூறப்படுவது உண்மை அல்ல,என இன்று கொம்தாரில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இவ்வாறு பதிலளித்தார்.
கடந்த ஜுலை மாதம் 9-ஆம் தேதி நள்ளிரவில் அலோர் ஸ்டார் ஊராட்சி மன்ற அதிகாரிகளால்
ஜாலான் ஸ்டேசன் லாமாவில் அமைந்துள்ள ஶ்ரீ மதுரை வீரன் ஆலயம்
உடைக்கப்பட்டது என இணைய செய்தியில் குறிப்பிடப்பட்டது.
மேலும், இந்த ஆலயம் புறம்போக்கு நிலத்தில் அனுமதியின்றி கட்டப்பட்டதாகவும் போக்குவரத்துக்கு இடையூறாக அமைவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த 12 ஆண்டுகளாக பினாங்கு மாநில அரசு எந்த மத ஆலயங்களையும் முறையான இடம்பெயர்ப்புச் செய்யாமல் உடைத்தது இல்லை. மாறாக கெடா மாநிலத்தில் நஷனல் கூட்டணி ஆட்சி அமைந்த சில மாதங்களிலே சில ஆலயங்கள் குறிப்பாக புத்தர் ஆலயமும் உடைக்கப்பட்டதாக பேராசிரியர் கருத்துரைத்தார்.
கூடிய விரைவில் சீன மத குழுவினர் வழிபாட்டு தலங்கள் உடைப்பு குறித்து மந்திரி பெசார் மற்றும் பேரரசரை சந்தித்து மகஜர் வழங்க இணக்கம் கொண்டுள்ளதாக அறியப்படுகிறது.
கெடா மந்திரி பெசார் இந்த ஆலய விவகாரம் தொடர்பாக சிறந்த தீர்வைக் காண முற்பட வேண்டும். பிற மதத்தினரின் மனதை புண்படுத்த வேண்டாம். மக்களால் தேர்தெடுக்கப்பட்ட தலைவன் என்ற முறையில் மந்திரி பெசார் மக்களின் தேவைகளை முதலில் பூர்த்திச் செய்ய வேண்டும்.
மேலும், மந்திரி பெசார் சட்டத்திட்டங்கள் பின்பற்றிதான் இந்த ஆலயத்தை உடைத்ததாக கூறியுள்ளார். இருப்பினும், சட்டத்திட்டங்கள் பின்பற்றும் தரப்பினர் நள்ளிரவில் ஆலயத்தை உடைக்க வேண்டிய அவசியமில்லை என பேராசிரியர் சாடினார்.