பினாங்கு மேம்பாட்டுக் கழக தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பு இந்தியர்களின் பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையில் அமைந்திருப்பதாக இந்நிகழ்வினை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்து தமதுரையில் குறிப்பிட்டார் பினாங்கு மாநில இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி. பினாங்கு மேம்பாட்டுக் கழக இந்தியர் கழகம் இந்நிகழ்வினை சிறப்பாக வழிநடத்தினர்.
இந்நிகழ்வில் மாநில முதல்வர் மேதகு சாவ் கொன் யாவ், பினாங்கு மேம்பாட்டுக் கழக தலைமை நிர்வாக அதிகாரி டத்தோ ரொசாலி ஜாபார், ஆட்சிக்குழு உறுப்பினர்களான அபீப் பின் பஹாருடின், டத்தோ ஹஜி அப்துல் அலிம் பின் ஹஜி உசேன், அரசு சாரா இயக்கங்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து சிறப்பித்தனர்.
‘என்ன பிரச்சனை அல்லது இன்னல்களை எதிர்நோக்கினாலும், இந்து சமயத்தை தொடர்ந்து பாதுகாக்க வேண்டும்’, என பேராசிரியர் ப.இராமசாமி தமதுரையில் கேட்டுக்கொண்டார். இந்தியர்கள் ஒற்றுமையாக சமயத்தையும் பாரம்பரியத்தையும் நிலைநாட்ட வேண்டும் எனவும் வலியுறுத்தினார். இம்மாதிரியான தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பு மூவின மக்களிடையே நல்லிணக்கத்தை உருவாக்கும் என பிறை சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர் ப.இராமசாமி கூறினார்.
பினாங்கு மேம்பாட்டுக் கழக தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பை மிருதங்கம் வாசித்து குத்து விளக்கேற்றி தொடக்கி வைத்தார் பினாங்கு மாநில இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி. பினாங்கு மேம்பாட்டுக் கழக ஊழியர்கள் இந்திய பாரம்பரிய உடையில் காட்சியளித்தது வருகையாளார்களை வெகுவாக கவர்ந்தது.
மேலும், இத்தீப திருநாள் திறந்த இல்ல உபசரிப்பை மெருகேற்றும் வகையில் பட்டர்வொர்த் ஷாமா சமூக நல கழகத்திற்கு ரிம 1500 மற்றும் தர்ம சிவாநந்தா கிளினிக்கிற்கு ரிம1000 -திற்கான காசோலையை பினாங்கு மேம்பாட்டு கழகத்தின் சார்பில் வழங்கினார் பேராசிரியர்.