இன, மத நல்லிணக்கத்தை மேம்படுத்தும் முயற்சிகள் தொடர்ந்து மேம்படுத்தப்படும் – முதலமைச்சர்

Admin
img 20240701 wa0015

 

சுங்கை பாக்காப் – அனைத்து மதம் மற்றும் இனங்களைச் சேர்ந்த பொது மக்களின் நல்லிணக்கத்தை உறுதி செய்வதற்காக, நிலப் பிரச்சனைகள் மற்றும் பல அடையாளம் காணப்பட்ட இஸ்லாம் அல்லாத வழிபாட்டு தலங்களையும் (RIBI) இடமாற்றம் செய்வது குறித்து மாநில அரசு தொடர்ந்து முயற்சிக்கும்.

பினாங்கு மாநில முதலமைச்சரும் நிதி, நில மேம்பாடு & பொருளாதாரம் மற்றும் தகவல்தொடர்புகளுக்கான ஆட்சிக்குழு உறுப்பினருமான மேதகு சாவ் கொன் இயோவ், இந்தியச் சமூகத்துடனான ஜாலான் புத்திரி குனோங் 8 இல் நடைபெற்ற சந்திப்புக் கூட்டத்தில் இவ்வாறு கூறினார்.

“பினாங்கு பல இனங்கள் மற்றும் மதங்களைச் சேர்ந்த மக்கள் வசிக்கும் மாநிலமாகத் திகழ்வதால், வழிபாட்டுத் தலங்களும் நன்கு பராமரிக்கப்பட வேண்டும்.

“மசூதிகள், கோவில்கள் மற்றும் சீனக் கோவில்கள் ஆகிய வழிபாட்டுத் தலங்களின் வளர்ச்சிக்கான ஒதுக்கீடுகள் மற்றும் நிலப் பிரச்சனைகளை எதிர்கொள்ளும் கோவில்களை வேறு இடத்திற்கு மாற்ற செய்வதற்கும் மாநில அரசு உதவிக்கரம் நீட்டி வருகிறது.

“எனவே, பல்லின மக்கள் நல்லிணக்கத்துடனும் வாழ வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். இந்த முயற்சியின் மூலம் பொது மக்களும் நல்ல வேலை வாய்ப்புகளுடன் சிறந்த வாழ்க்கையை வாழ முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்,” என்று சாவ் விளக்கமளித்தார்.

img 20240701 wa0016

முன்னதாக, பினாங்கு நம்பிக்கை கூட்டணி தலைவருமான கொன் இயோவ், சுங்கை பாக்காப் தொகுதியின் அனைத்து வாக்காளர்களுக்கும் நம்பிக்கை கூட்டணி வேட்பாளரான டாக்டர். ஜோஹாரி அரிஃபின் அவர்களை சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்க ஆதரவு நல்குமாறு கோரிக்கை விடுத்தார்.

எனவே, வருகின்ற ஜூலை 6-ஆம் தேதி நடைபெறும் சுங்கை பாக்காப்
இடைத்தேர்தலில் ஆளுங்கட்சியின் வேட்பாளர் வெற்றிப் பெற்றால், உள்ளூர் மக்களுக்குத் தேவையான சமூக மேம்பாட்டுத் திட்டங்கள் மற்றும் உள்கட்டமைப்புகளை செயல்படுத்துவது எளிதாக இருக்கும்.

“இந்த வேட்பாளர் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு முன்னதாக, அவர் பொருத்தமானவரா இல்லையா என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். மேலும், அவருடைய அனுபவமானது மக்களுக்கு உதவுவதற்கான அர்ப்பணிப்பின் அடிப்படையில் இருக்கிறதா, அதேவேளையில், அவர் எந்தக் கட்சியை பிரதிநிதிக்கிறார் என்பதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.

“ஜோஹாரி மக்கள் நீதிக் கட்சி மற்றும் நம்பிக்கை கூட்டணி ஆகியவற்றைப் பிரதிநிதிக்கிறார். இவர் மாநில மற்றும் மத்திய அரசாங்க அளவில் ஒற்றுமை கட்சியின் வேட்பாளரும் ஆவார்.

“எனவே, ஆசிரியர் ஜோஹாரி (சட்டமன்ற உறுப்பினராக) தேர்ந்தெடுக்கப்பட்டால், அவர் அரசாங்கத்தின் மக்கள் பிரதிநிதியாக இருப்பார்,” என்று அவர் விளக்கமளித்தார்.