கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் பினாங்கு மாநிலத்தில் இபிடன் மின்னணுவியல் நிறுவனம் செயற்பட்டு வருகிறது. இந்நிறுவனம் தொடர்ந்து தனது வியாபாரத்துறையை மேம்படுத்தும் பொருட்டு இரண்டாவது கட்டிடத்தைக் கட்டுவதற்கு முன்வந்துள்ளது. இந்த இரண்டாவது கட்டிடம் ரிம 1.3 பில்லியன் செலவில் கட்டப்படும். அதோடு இக்கட்டிடம் 2014-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இபிடன் மின்னணுவியல் நிறுவனம் நமது மாநிலத்தில் தொடர்ந்து முதலீடு செய்வதற்குத் தனது மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்தார் மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங். நவீன உலகில் ஸ்மார்ட் தொலைபேசி மற்றும் மின்னணுவியல் பொருட்களின் கூடுதலானப் பயன்பாடு, இபிடன் மின்னணுவியல் நிறுவனம் முதலீடுச் செய்வதற்கு அடித்தளமாக அமைகிறது.
பினாங்கு அறிவியல் தாமான் பகுதியில் அமைந்திருக்கும் இந்த தொழிற்சாலை வரும் 2014-ஆம் ஆண்டில் 1500 பேருக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தித் தரும் என்பது வெள்ளிடைமலையாகும். மேலும் இந்நிருவனத்தில் பணிப்புரியும் தொழிலாளிகளுக்கு வெளிநாட்டில் பயிற்சி வாய்ப்புகளும் வழங்கப்படும்.
மலேசியாவின் முதலீட்டில் ஏறக்குறைய 50% முதலீட்டுப் பங்குதாரர்கள் இபிடன் மின்னணுவியல் நிறுவனம் என்றால் மிகையாகாது. இபிடன் மின்னணுவியல் நிறுவனத்தின் தலைமை நிர்வாக இயக்குநர் சொதாரோ ஈதோ அவர்கள் மலேசியாவில் முதலீடு செய்வதன் மூலம் அளவுக்கு அதிகமான மின்னணுவியல் பொருட்களைத் தயாரிப்பதுடன் ஏற்றுமதி செய்வதற்கு எளிமையாக இருக்கிறது என்றார்.