எஸ்கேப் ‘Escape’ என்ற விளையாட்டு மையம் இயற்கை வளத்தை மையமாகக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. இத்தளம் பினாங்கு மாநில தெலுக் பாகாங்கில் எனும் இடத்தில் நிறுவப்பட்டுள்ளது. இத்தளத்தில் மரங்களைக் கொண்டு அமைக்கப்பட்ட விளையாட்டுகள் யாவும் ஏறுதல், குதித்தல், தாவுதல், சரக்குதல், நடத்தல் ஆகிய நடவடிக்கைகளை மையமாகக் கொண்டுள்ளன. ஏறக்குறை 10-க்கு மேற்பட்ட விளையாட்டுகள் உள்ளன. இந்த விளையாட்டு மையத்திற்குச் செல்வதற்கு 4-12 வயதுக்குட்பட்டவர்கள் ரிம 45.00 மற்றும் 13-60 வயதுக்குட்பட்டவர்கள் ரிம 60.00 நுழைவுக் கண்டனமாகச் செலுத்த வேண்டும்.
செயற்கையான விளையாட்டுத் தளங்கள் நாடு தழுவிய நிலையில் பிரசித்த வேளையில் இயற்கையைச் சார்ந்த விளையாட்டு மையம் உள்நாட்டு மட்டுமின்றி வெளிநாட்டு மக்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கப்பட்ட இந்த மையம் ஏறக்குறைய 150 000 சுற்றுப்பயணிகளை ஈர்த்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. எனினும் இத்தளத்திற்கு வருகைப் புரியும் இந்தியர்களின் எண்ணிக்கைக் குறைவாக இருப்பதைப் புள்ளி விபரங்கள் சித்தரிக்கிறது.
ஓர் ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங் அவர்கள் எஸ்கேப் ‘Escape’ தளத்திற்கு வருகையளித்தோடு புதிதாகக் கட்டவிருக்கும் நீர் விளையாட்டுத் தளம் எனும் எஸ்கேப் ‘Escape’ II-க்கான அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்டார். இந்த எஸ்கேப் ‘Escape’ II-எனும் விளையாட்டு மையத்திற்கான மேம்பாட்டுத் திட்டம் அடுத்த ஆண்டு நிறைவடையும்.
பொதுவாகவே, சுற்றுப்பயணிகளைச் சுற்றுலாத் தளங்களுக்குக் கொண்டு வரும் நடுத்தரப்பினர் பணத்தைச் சன்மானமாகக் கேட்கின்றனர். எனவே சுற்றுலாத்துறையில் ஏற்படும் இந்த ஊழலைத் தவிக்க மாநில முதல்வர் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என எஸ்கேப் ‘Escape’ தளத்தின் உரிமையாளரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான சிம் சூ கேங் கேட்டுக்கொண்டார்.
மாநில முதல்வர் ‘சுற்றுலாத்துறை ஒருமைப்பாடு உறுதிமொழி’ என்ற சான்றிதழை வழங்கி பினாங்கு மாநிலம் சுற்றுலாத்துறையில் ஊழலை அழிக்கும் முதல் மாநிலமாகத் திகழும் எனக் குறிப்பிட்டார்.