நவம்பர் 2008-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இரண்டாம் பினாங்குப் பாலத்தின் நிர்மாணிப்புப் பணிகள் 85% நிறைவடைந்துவிட்டது. இவ்வாண்டு இறுதிக்குள் 90% பணிகள் நிறைவடைய குறி வைத்திருப்பதாக இரண்டாம் பினாங்குப் பாலத்தின் கட்டமைப்பு இயக்குனர் திரு ஹமிசோல் ங செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார். மேலும், அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் பாலத்தின் இரு பாதிகள் ஒருங்கிணைக்கப்படும் என்றார்.
இப்பாலத்தின் ஆயுட்காலம் சுமார் 120 ஆண்டுகளாகும். அதுமட்டுமன்றி, இப்பாலம் உயர் தணிவிப்பு இரப்பர் தாங்கி (High Damping Rubber Bearing) முறையைப் பயன்படுத்தி அமைக்கப்பட்டிருப்பதால் இது 600 கிமீ தொலைவில் 7.5 ரிக்டர் அளவில் நிகழக்கூடிய நில நடுக்கத்தைத் தாங்கி பாலத்தின் அமைப்புப் பாதுகாப்பான நிலையில் இருப்பதை உறுதி செய்யும் என விளக்கமளித்தார். இரண்டாம் பினாங்குப் பாலம் முதலாம் பாலத்தைக் காட்டிலும் இரண்டு மடங்கு நீளமானதாகும். கடற்பரப்பில் இதன் நீளம் 16.4 கி.மீ ஆகும். மொத்த நீளம் சுமார் 24 கி.மீ கொண்ட பினாங்கின் இரண்டாம் பாலம் தென்கிழக்காசியாவிலேயே மிக நீளமான பாலமாகத் திகழும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், துன் டாக்டர் லிம் சொங் இயு நெடுஞ்சாலையில் இரண்டு புது பாதைகள் அமைக்க மத்திய அரசு ரிம 423 மில்லியன் ஒதுக்கீடு செய்துள்ளது என்று மாநிலப் பொதுப்பணி, போக்குவரத்து வசதி செயற்குழுத் தலைவர் திரு.லிம் ஹொக் செங் கூறினார். முதல் பாதையானது முதலாம் பாலத்தையும் இரண்டாம் பாலத்தையும் இணைக்கும். இரண்டாம் பாதையானது இரண்டாம் பாலத்தையும் பத்து மௌங் மற்றும் தெலுக் கும்பாரையும் இணைக்கும். இச்சாலை நிர்மாணிப்புப் பணி இரண்டாம் பாலம் முழுமை பெற்றதும் தொடங்கி ஓராண்டுக்குள் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுவதாகப் பாலத்தின் கட்டுமான வளர்ச்சி விளக்கக் கூட்டத்தில் லிம் கூறினார்.
பினாங்குப் பாலத்தை ஒரு நாளில் சுமார் 70,000 பேர் கடந்து செல்கின்றனர். அவர்களில் ஏறக்குறைய 20-30% ஓட்டுநர்கள் அடுத்த ஆண்டு செப்டம்பரில் நிறைவடையவிருக்கும் பினாங்கின் இரண்டாம் பாலத்தைப் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்பாலம் முதல் பாலத்தைவிட இரண்டு மடங்கு நீளம் கொண்டிருந்தாலும் மக்களின் வாழ்வுச் சுமையைக் கருத்தில் கொண்டு இதற்கான சாலைச் சாவடிக் கட்டணம் முதல் பாலத்தின் கட்டணத்தைப் போலவே விதிக்கப்படும் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. ரிம 4.5 பில்லியன் பொருட்செலவில் அமைக்கப்படும் இவ்விரண்டாம் பாலம் பினாங்கின் தலையாய சின்னமாகத் திகழும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை. இவ்விரண்டாம் பாலத்தின் வடிவமைப்பு அப்படியே முதல் பாலத்தை ஒத்திருப்பதால் உலகிலேயே மிக நீளமான இரட்டைப்பாலத்தைக் கொண்ட முதல் மாநிலமாகப் பினாங்கு மாநிலம் சரித்திர பதிவேட்டில் முத்திரை பதிக்கும் எனலாம்.