ஜார்ச்டவுன் – பினாங்கு மாநில அரசு கல்வித் துறைக்கு எப்போதும் முன்னுரிமை அளித்து வருகிறது என்று மாநில வீட்டுவசதி, உள்ளாட்சி, நகர்ப்புற மற்றும் கிராமப்புற திட்டமிடல் ஆட்சிக்குழுவின் தலைவர் ஜெக்டிப் சிங் டியோ தெரிவித்தார்.
நமது தேசத்தின் எதிர்காலத்திற்கு திறவுகோலாக கல்வித் துறை திகழ்கிறது. தற்போதைய புதிய மத்திய அரசால், தகுதியானவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்குவது உட்பட, அனைத்து நிலைகளிலும் கல்வியைப் பெற மாணவர்களுக்கு அதிக வாய்ப்புகள் வழங்கப்படுகிறது என்று ஜெக்டிப் நம்பிக்கை தெரிவித்தார்.
“எனது தொகுதியில்(டத்தோ கெராமாட்) பள்ளிச் சீருடைகளை வாங்குவதற்காக மொத்தம் ரிம350,000 நிதி ஒதுக்கீடு மற்றும் பல்வேறு பள்ளிகளுக்கு இதர உதவிகளையும் வழங்கியுள்ளேன்.
“இந்த ஒதுக்கீட்டில், பள்ளிகளின் மேம்பாட்டுப் பணிக்காக வழங்கப்பட்ட நிதி சேர்க்கப்படவில்லை,” என ஜார்ச்டவுனில் உள்ள இராமகிருஷ்ண அசீரமத்தில் நடைபெற்ற பள்ளிச் சீருடை, புத்தகப்பைகள் மற்றும் காலணிகளுக்கானப் பற்றுச்சீட்டு வழங்கும் நிகழ்ச்சிவில் ஜெக்டிப் இவ்வாறு கூறினார்.
டத்தோ கெராமாட் சட்டமன்ற உறுப்பினருமான ஜெக்டிப், இராமகிருஷ்ணா ஆசிரமத்தைச் சேர்ந்த 500 மாணவர்களுக்குப் பள்ளிச் சீருடைகள், புத்தகப் பைகள், காலணிக்கான பற்றுச்சீட்டை எடுத்து வழங்கினார்.
நிகழ்ச்சியில் சிறப்புரை வழங்கிய ஆட்சிக்குழு உறுப்பினர் தொடர்ந்து அதிகரித்து வரும் வாழ்க்கை செலவினங்களால் அவதியுறும் குடும்பங்களுக்கு உதவும் வகையில் பள்ளிப் பொருட்களை தயார்ப்படுத்த இவ்வுதவி வழங்கப்படுவதாக குறிப்பிட்டார்.
மேலும், மாணவர்கள் பெற்றோர்களின் ஆலோசனைக்குச் செவிமடுத்து சிறந்த எதிர்காலத்தை உருவாக்கி கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.எஸ்.என் இராயர், பினாங்கு சீக்கியர் சங்க பிரதிநிதி மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.