ஜார்ச்டவுன் – இராமகிருஷ்ணா தமிழ்ப்பள்ளியில் அதிகரித்து வரும் மாணவர் சேர்க்கை, பள்ளியின் கட்டிடத்தின் மூன்றாவது மாடியில் பயன்படுத்தப்படாத இடத்தில் இரண்டு புதிய வகுப்பறைகளைக் கட்டுவதற்கான முன்முயற்சியில் களம் இறங்கியுள்ளது.
அதிகரித்து வரும் மாணவர்களின் எண்ணிக்கையை எதிர்கொள்ளவும், மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ள மற்றும் உகந்த கற்றல் கற்பித்தல் சூழலை வழங்கவும் இத்திட்டத்தை செயல்படுத்த வேண்டியுள்ளது என்று பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் (PIBG) தலைவர் கே.குமாரதிரவியம் தெரிவித்தார்.
தற்போது இத்திட்டத்தின்
கட்டுமானப் பணிகள் மேம்பட்ட நிலையில் இருந்தாலும், அதனை விரைவில் முடிக்க அதிக நிதி தேவைப்படுகிறது, என்றார்.
இத்திட்டத்தைச் செயல்படுத்த ஆயர் ஈத்தாம், ஷாங் வூ சீனப்பள்ளி அரங்கத்தில் இராமகிருஷ்ணா தமிழ்ப்பள்ளி அறக்கட்டளை விருந்தோம்பல் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான ஆதரவாளர்கள் விருந்தோம்பலில் கலந்துகொண்டு, பள்ளிக்குத் தேவையான நிதியைத் திரட்டுவதற்கு ஆதரவு அளித்தனர்.
முன்னதாக, இந்நிகழ்ச்சியை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்த
மாநில முதலமைச்சர் மேதகு சாவ் கொன் இயோவ்
இராமகிருஷ்ணா தமிழ்ப்பள்ளிக்கு
மாநில அரசின் சார்பாக ரிம50,000 வழங்குவதாக உறுதியளித்தார்.
“நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் பல அம்சங்களில் பினாங்கு மாநிலம் முன்னணியில் இருப்பதால், கல்வித் துறைக்கு முன்னுரிமை அளிப்போம், குறிப்பாக மாநிலத்தில் உள்ள பள்ளிகளுக்கு சரியான மற்றும் பொருத்தமான உள்கட்டமைப்பை வழங்குவதில் தவறியதில்லை.
“மனித வள மேம்பாடு என்பது நமது நாட்டிற்கான நிலையான பொருளாதார வளர்ச்சியை உருவாக்குவதையும் நிலைநிறுத்துவதையும் உறுதிசெய்யும் ஒரு முக்கிய காரணியாகும். மேலும்,
இன்றைய மாணவர்கள் நமது எதிர்கால தலைவர்கள் ஆவர்.
“மாநில அரசு பொருளாதார வளர்ச்சிக்கு முன்னுரிமை அளிக்கும் வேளையில் கல்வித் துறை முன்னேற்றத்தை ஒருபோதும் ஒதுக்கியதில்லை.
ஏனென்றால், சமூக வளர்ச்சிக்கு முறையான கல்வி மிக அவசியமாகும்.
“உதாரணமாக, பினாங்கு திறன் மேம்பாட்டு மையம் (PSDC), பினாங்கு கணித மையம், பினாங்கு STEM, டெக் டோம் பினாங்கு மற்றும் பல நிறுவனங்கள், பினாங்கில் உள்ள பள்ளிகளின் வளர்ச்சிக்கு பல நடவடிக்கைகளைத் தொடர்ந்து வழிநடத்தப்படுகிறது.
“இன்றைய நிலையில், இராமகிருஷ்ணா தமிழ்ப்பள்ளி
பல ஆண்டுகளாக அடைந்துள்ள முன்னேற்றத்தை கண்டு மகிழ்ச்சியடைகிறேன். எனவே, இப்பள்ளியில் இந்த இரண்டு புதிய வகுப்பறைகளை உருவாக்கும் குறிக்கோளை கண்டு மகிழ்ச்சி அடைகிறேன்,” என்று சாவ் விருந்தோம்பலின் போது தனது உரையில் கூறினார்.
முன்னதாக, பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் (PHEB) தலைவரான ஜெலுத்தோங் தலைவரான ஆர்.எஸ்.என் இராயர், இத்திட்டத்தை செயல்படுத்த ரிம50,000 பங்களிப்பதாக உறுதியளித்தார்.
இந்நிகழ்ச்சியில், மாநில வீட்டுவசதி மற்றும் சுற்றுச்சூழல் ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோஸ்ரீ சுந்தராஜூ சோமு, பினாங்கு மாநகர் கழகம்
(எம்.பிபி.பி) மேயர் டத்தோ இராஜேந்திரன் மற்றும் இராமகிருஷ்ணா தலைமையாசிரியர் சி. ஸ்ரீதரன் ஆகியோர் உடனிருந்தனர்.