இராமகிருஷ்ணா பாலர் பள்ளியின் பட்டமளிப்பு விழா

550301_542496695767785_549376018_n

 

 

 

 

 

 

 

 

 

 

 

நவம்பர் 3 – இங்கு இராமகிருஷ்ணா ஆசிரமத்தில் நடைபெற்ற இராமகிருஷ்ணா பாலர் பள்ளியின் பட்டமளிப்பு விழாவில் டத்தோ கெராமட் சட்டமன்ற உறுப்பினர் மதிப்பிற்குரிய திரு ஜெகதிப் சிங் டியோ அவர்கள் கலந்து சிறப்பித்தார். சுமார் 70 மாணவர்கள் திரு ஜெகதிப்பிடமிருந்து பட்டச்சான்றிதழைப் பெற்றுக் கொண்டனர். ஆண்டுதோறும் நடைபெறும் இப்பள்ளியின் பட்டமளிப்பு விழாவில்  ஒவ்வொரு ஆண்டும் தவறாது கலந்து கொள்வதாகத் திரு ஜெகதிப் சிங் தெரிவித்தார்.

இராமகிருஷ்ணா ஆசிரமம், இராமகிருஷ்ணா தமிழ்ப்பள்ளி மற்றும் இராமகிருஷ்ணா பாலர் பள்ளி இவையனைத்தும் செயற்பட்டுவரும் கட்டடங்கள் சற்றுப் பழைமையடைந்ததுடன் அதன் அடிக்கூரைகளில் நீர் வழிந்து வருவதால் அதனைப் பழுது பார்ப்பதற்காக தன்னுடைய தொகுதி நிதியிலிருந்து ரிம 5000 ஒதுக்கீடு செய்துள்ளதாகக் கூறினார். மேலும், இரண்டு ஆசிரியர்கள் பணியாற்றி வந்த இப்பாலர் பள்ளியில் தற்பொழுது ஐந்து ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். எனினும், மாணவர்களின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு அவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்த ஆசிரியர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் எனவும் கருத்துரைத்தார்.

தொடர்ந்து, தாம் இங்குள்ள ஆசிரமத்திற்கும் மிகுந்த ஆதரவு வழங்கி வருவதாகக் கூறினார். இந்த ஆசிரமத்தில் வாழும் பிள்ளைகளின் தேவையை நிறைவு செய்து அவர்களைப் பாதுகாக்க வேண்டியது அவசியம், இல்லையென்றால் இப்பிள்ளைகள் தவறான வழிகளில் சென்று தீய செயல்களில் ஈடுபடவும் வாய்ப்புகள் உண்டு என வருத்தத்துடன் தெரிவித்தார். மேலும், பள்ளி செல்லும் குழந்தைகள் குறிப்பாக அனாதைக் குழந்தைகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் இலவச பள்ளிச் சீருடைகள் வழங்கி உதவி வருவதையும் குறிப்பிட்டார்.

இப்பட்டமளிப்பு விழாவில் வண்ணமயமான பாரம்பரிய ஆடைகளை அணிந்து ஆடல் பாடல் என்று, பாலர் பள்ளி மாணவர்கள் வழங்கிய அருமையான படைப்புகள் திரு ஜெகதிப் சிங், ஆசிரியர்கள், பெற்றோர்கள் என  வந்திருந்த அனைவரையும் கவர்ந்தன.