சுங்கை பினாங்கு –ஜெலுத்தோங் தொகுதியின் ஏற்பாட்டில் அரசு தேர்வுகளில் அமரவிருக்கும் மாணவர்களுக்கு இலவச பிரத்தியேக வகுப்பு அதிகாரப்பூர்வமாக திறப்பு விழாக்கண்டது. இந்நிகழ்வினை இனிதே துவக்கி வைத்தார் ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.எஸ்.என் இராயர்.
இந்தப் பிரத்தியேக வகுப்பு குறிப்பாக ஆரம்பப்பள்ளி மதிப்பீடு சோதனை (யூ.பி.எஸ்.ஆர்), மூன்றாம் படிவ மதிப்பீடு சோதனை (பி.தி3) மற்றும் மலேசிய கல்வி சான்றிதழ் (எஸ்.பி.எம்) ஆகிய அரசு தேர்வுகளை எதிர்நோக்கும் மாணவர்களுக்காக ஏற்பாடுச் செய்யப்பட்டுள்ளது எனவும் இவ்வகுப்பு சுங்கை பினாங்கு, கம்போங் மக்புல் எ.பி.கே.கே அரங்கத்தில் நடைபெறும் என இராயர் தெரிவித்தார்.
“வசதி குறைந்த மாணவர்களுக்கு உதவும் நோக்கத்திலும் பெற்றோர்களின் நிதிச் சுமையைக் குறைக்க உதவும் எண்ணத்திலும் இத்திட்டம் மலர்ந்துள்ளது. கல்வியில் சிறந்து விளங்கும் மாணவர்கள் குடும்பப் பொருளாதார நெருக்கடியால் பிரத்தியேக வகுப்புக்குச் செல்ல இயலாத நிலை ஏற்படுகிறது. எனவே, இலவச பிரத்தியேக வகுப்பில் கலந்து கொள்ளும் மாணவர்கள் இந்த வாய்ப்பினை நல்வழியில் பயன்படுத்தி கல்வியில் சிறப்பு தேர்ச்சிப் பெற வேண்டும்,” என யூ.பி.எஸ்.ஆர், பி.தி3, மற்றும் எஸ்.பி.எம் பட்டறையில் கலந்து கொண்ட இராயர் இவ்வாறு தெரிவித்தார்.
இந்நிகழ்வில் பத்து லஞ்சாங் சட்டமன்ற உறுப்பினர் ஒங் அ தியோங், கம்போங் மக்பூல், கம்போங் நிர்வாக செயல்முறை கழகம் (எம்.பி.கே.கே) உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இச்சிறப்பு திட்டத்திற்காக ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் நேதாஜி இராயர் ரிம11,000 நிதி ஒதுக்கீடு வழங்கினார். இந்நிதியைப் பயன்படுத்தி இலவச பாடநூல், பயிற்சி புத்தகம், ஆசிரியர்களின் கட்டணம் செலுத்தப்படும் என மேலும் விவரித்தார் .
“ஒவ்வொரு அரசு தேர்வு (யூ.பி.எஸ்.ஆர், பிதி3, எஸ்.பி.எம்) பிரத்தியேக வகுப்பில் பயில 30 மாணவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும். இத்திட்டத்தில் 30-க்கும் கூடுதலான மாணவர்கள் பதிவுச்செய்தால் தற்போது வழங்கிய நிதி ஒதுகீடு அதிகரிக்கப்படும்,” என விவரித்தார். இந்த இலவச வகுப்பு ஒரு வாரத்தில் சனி மற்றும் ஞாயிறன்று இடம்பெறும். இத்திட்டத்தில் பதிவுச்செய்ய விரும்பும் மாணவர்கள் பத்து லஞ்சாங், சுங்கை பினாங்கு மற்றும் டத்தோ கெராமாட் சட்டமன்ற சேவை மையங்களை அனுகலாம்.