இலவச மனநல ஆலோசனை மையம் சமூகத்தில் மன அழுத்தத்தை நீக்கும் – குமரேசன்

Admin

பத்து உபான் – கோவிட்-19 தொற்றுநோய் பொது மக்களின் வாழ்வாதாரத்தை மட்டுமின்றி மன அழுத்ததையும் ஏற்படுத்தி பாதிப்படைய செய்கிறது.

எனவே, பத்து உபான் சட்டமன்ற உறுப்பினர் ஆ.குமரேசன் VHGLOBAL Sdn.Bhd நிறுவனத்துடன் இணைந்து
‘பத்து உபான் மனநல ஆலோசனை மையம்’ எனப்படும் இலவச ஆலோசனை சேவையை தொடக்கி வைத்தார். உள்ளூர் மக்களுக்கு உதவும் நோக்கத்தில் இந்த இலவச மையம் தொடங்கப்பட்டது.

எனவே, கடந்த ஆண்டு முதல் நீடித்திருக்கும் இந்து கோவிட்-19 தாக்கம் பொது மக்களுக்கு பொருளாதார அழுத்தம், வருமான இழப்பு, பணி நீக்கம் என பல வகைகளில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த பிரச்சினை குறித்து கலந்தாலோசிக்க பொது மக்கள் எனது சேவை மையத்தையும் நாடி வந்துள்ளனர். அவர்களின் இச்சூழ்நிலையை முழுமையாக புரிந்து கொள்ள முடிகிறது,” என கடந்த ஆகஸ்ட்,6 அன்று சுங்கை டுவா, தாமான் பெக்காகாவுக்கு அருகில் உள்ள சேவை மையத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பு கூட்டத்தில் இவ்வாறு கூறினார்.

எனவே, பொது மக்கள் மனம் மற்றும் உடல் ரீதியாகவும் சுகாதாரத்துடன் வாழ்வதை உறுதி செய்ய இந்த ஆலோசனை மையம் துணைபுரியும் என நம்பிக்கை தெரிவித்தார்.

இத்திட்டத்தில் நெறியுரைஞர்
மற்றும் மனநல தத்துவ நிபுணர்களுடன் பாதிக்கப்பட்ட தரப்பினர் பேசுவதற்கு காணொலி அழைப்பு வாயிலாக நேரடியாக பார்த்து கலந்தாலோசிக்க முடிகிறது. அதுமட்டுமின்றி, இந்த தொடர்பு சேவை மலாய், சீனம், தமிழ் மற்றும் ஆங்கிலம் என நான்கு பிரதான மொழிகளிலும் இடம்பெறுகின்றன.

பொது மக்கள் www.vhglobal.org எனும் அகப்பக்கத்தை அணுகி தேர்தெடுக்கப்பட்ட மனநல தத்துவம் நிபுணர்களுடன் சந்திப்பு நிலை பதிவு செய்து ஆலோசனை பெறலாம். மேலும், இணைய வசதி இல்லாதவர்களுக்காக பத்து உபான் சேவை மையத்தில் பிரத்தியேகமாக ஒரு தனி அறை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

“மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்பு துறையின் தகவல் படி இந்த ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் (ஜனவரி முதல் மே வரை) பினாங்கு மாநிலத்தில் 53 தற்கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.

“மேலும், ஆடம்பர அடுக்குமாடி, அடுக்குமாடி மற்றும் பிற இடங்களில் இருந்து கீழே விழ முயற்சித்ததாக 22 தற்கொலை முயற்சி வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன, என குமரேசன் கூறினார்.

இக்கூட்டத்தில், VHGLOBAL Sdn bhd தலைமை நிர்வாக அதிகாரி பேராசிரியர் எமரிடஸ் டாக்டர். ஆர்.சுரேஸ்வரன் மற்றும் இந்நிறுவன தலைமை இயக்க அதிகாரி டாக்டர். முஹம்மது அசிராஃப் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த திட்டத்தை செயல்படுத்த தொடக்க நிதியாக ரிம10,000 வழங்கியதாக குமரேசன் தெரிவித்தார்.

இந்த திட்டம் பிரத்தியேகமாக பத்து உபான் சட்டமன்ற தொகுதி குடியிருப்பாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கிறது. இருப்பினும், பிற தொகுதிகளில் வாழும் தனிநபர்கள் அவர்களின் வழக்குக்கு ஏற்ப தேர்ந்தெடுக்கப்படுவர்.

செய்தியாளர்களிடம் பேசிய சுரேஸ்வரன், அண்மையில் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்துகொண்ட தம்பதியினரின் காணொலி காட்சியைப் பார்த்த பின்பு இந்த திட்டம் செயல்படுத்த அழைக்கப்பட்டதாக தெரிவித்தார்.

“ஒரு பிரச்சினையைத் தீர்க்க தற்கொலை செய்வது தீர்வாக அமையாது. இனி, சமூகத்தில் குறுக்கு வழியில் உயிரை துறக்கக் கூடாது என்ற உயரிய நோக்கத்தில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

“இது எங்கள் நிறுவனத்தின் சமூகத்திற்கான சி.எஸ்.ஆர் (பெருநிறுவன சமூக பொறுப்பு) திட்டமாகும்.

“சில நேரங்களில் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் பிரச்சினையை குடும்பத்தாருடன் பகிர்வதற்குச் சிரமத்தை எதிர்நோக்குக்கின்றனர். மாறாக அந்நியர்களிடன் எளிதாக கூறிவிடுவர்,” என சுரேஸ்வரன் தெரிவித்தார்.

நெறியுரை அல்லது ஆலோசனை சேவை பெற விரும்பும் தரப்பினர் www.vhglobal.org எனும் அகப்பக்கத்தை அணுகலாம்;017-2770388 என்ற ஹாட்லைன் எண்ணில் அழைக்கலாம் அல்லது பத்து உபான் சேவை மையத்திற்கு நேரில் வருகை அளிக்கலாம்.