இல்லத்தரசிகள் சமூகப் பாதுகாப்புத் திட்டத்தில் பங்கேற்க வேண்டும்

Admin

பிறை – சமூகப் பாதுகாப்பு அமைப்பு (Socso) கீழ் அறிமுகப்படுத்தப்பட்ட இல்லத்தரசிகள் சமூகப் பாதுகாப்புத் திட்டத்தில் (SKSSR) அதிகமான மகளிர் பங்கேற்க ஊக்குவிக்கப்படுகின்றனர்.

இத்திட்டத்தின் மூலம், வீட்டு வேலைகளைச் செய்யும்போது ஏதாவது ஆபத்தைச் சந்தித்தால், சம்பந்தப்பட்டவர் பாதுகாக்கப்படுவார்கள்.

சொக்சோ விளக்கவுரையில் கலந்து கொண்ட பிறை MPKK உறுப்பினர்கள், JPWK உறுப்பினர்கள் மற்றும் பினாங்கு இளைஞர் சங்க உறுப்பினர்களுடன் இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி(நடுவில்) குழுப்படம் எடுத்துக் கொண்டார்.

பிறை MPKK தலைவர் ஸ்ரீ சங்கர்,
சொக்சோ அமைப்பின் கீழ் இடம்பெறும்
பணியாளர் சமூகப் பாதுகாப்பு சட்டத்தின் வழி பெறப்படும் நன்மைகள் குறித்த விளக்கவுரையில் கலந்து கொண்டு இவ்வாறு கூறினார்.

இந்த விளக்கவுரை பிறை சமூக நிர்வாக மேம்பாட்டுக் கழகம்(MPKK) ஏற்பாட்டில் பிறை மகளிர் மேம்பாட்டுக் கழகம்(JPWK), மலேசிய தமிழர் குரல் இணை ஆதரவில் சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்ச்சி பிறை MPKK உறுப்பினர்கள், JPWK உறுப்பினர்கள் மற்றும் பினாங்கு இளைஞர் சங்க உறுப்பினர்களுக்காக பிரத்தியேகமாக நடத்தப்பட்டது.

“இத்திட்டம் இல்லத்தரசிகளுக்கு நிரந்தர ஊனம், மருத்துவம் மற்றும் மறுவாழ்வு நலன்கள், நோய்வாய்ப்பட்ட விடுப்பு கொடுப்பனவு, டயாலிசிஸ் உதவி, ஓய்வூதியம் மற்றும் இறப்பு ஆகியவைக்குப் பாதுகாப்பு வழங்குகிறது.

“55 வயதிற்குட்பட்ட அனைத்து இல்லத்தரசிகள் மற்றும் முழுநேர அல்லது பகுதிநேர குடும்பத்தை நிர்வகிப்பவர்கள், திருமணமானவர்கள் அல்லது தனிமையில் இருப்பவர்கள் 12 மாத காலத்திற்கு ரிம120 பங்களிப்புடன் இத்திட்டத்தில் பங்கேற்கத் தகுதியுடையவர்கள்,” என்று செபராங் ஜெயா சொக்சோ அமைப்பு அதிகாரி உஷா கனககோபால் விளக்கமளித்தார்.

பிறை வட்டாரத்தில் அதிகமான இல்லத்தரசிகள் இத்திட்டத்தில் இணைவதற்கு ஊக்கமளிக்கும் முன்னோடித் திட்டமாக இந்த விளக்கவுரை இடம்பெறுகிறது என ஸ்ரீ சங்கர் கூறினார்.

இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி இந்த விளக்கவுரையை ஏற்பாடுச் செய்த பிறை MPKK குழுவினருக்குப் பாராட்டுத் தெரிவித்தார்.

பெண்களுக்கு உரிய அங்கீகாரம் வழங்குவது அவசியம் எனவும் சொக்சோ அமைப்பின் கீழ் அறிமுகம் கண்ட இத்திட்டத்தை வரவேற்பதாகவும் பேராசிரியர் கூறினார்.

பிறை MPKK தலைவர் ஸ்ரீ சங்கர், இந்நிகழ்ச்சியில் சிறப்பு பிரமுகராகக் கலந்து கொண்ட இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி, செபராங் ஜெயா சொக்சோ அமைப்பு அதிகாரி உஷா கனககோபால், டேவஷர்மா டேவராஜன் ஆகியோருக்கு நினைவுச் சின்னம் எடுத்து வழங்கினார்.