இல்லத்தரசிகள் சமூகப் பாதுகாப்புத் திட்டத்தில் பதிவு செய்ய வேண்டும்

Admin

பிறை – அண்மையில், பிறை சமூக நிர்வாக மேம்பாட்டு மன்றம்(MPKK) ஏற்பாட்டில் பிறை மகளிர் மேம்பாட்டு செயற்குழு(JPWK), பினாங்கு இளைஞர் செயற்குழு இணை ஆதரவில் இல்லத்தரசிகளுக்கான சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் (SKSSR) கீழ் பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது.

கடந்த ஆண்டு (2022) டிசம்பர் மாதம் முதல் சமூகப் பாதுகாப்பு அமைப்பு (Socso) கீழ் அறிமுகப்படுத்தப்பட்ட இல்லத்தரசிகள் சமூகப் பாதுகாப்புத் திட்டத்தில் (SKSSR) அதிகமான மகளிர் பங்கேற்க ஊக்குவிக்கப்படுகின்றனர்.

“இத்திட்டத்தின் மூலம், வீட்டு வேலைகளைச் செய்யும்போது ஏதாவது ஆபத்தைச் சந்தித்தால், சம்பந்தப்பட்டவர் பாதுகாக்கப்படுவார்கள்.

பிறை MPKK தலைவர் ஸ்ரீ சங்கர், சொக்சோ அமைப்பின் கீழ் இடம்பெறும்
பணியாளர் சமூகப் பாதுகாப்பு சட்டத்தின் வழி நன்மைகள் பெற இத்திட்டத்தில் பதிவு செய்வது அவசியம் என எடுத்துரைத்தார்.

இந்நிகழ்ச்சியில் பிறை வட்டாரத்தைச் சேர்ந்த 25 மகளிர் கலந்து கொண்டு இத்திட்டத்தில் பதிவு செய்தனர்.

“இத்திட்டம் இல்லத்தரசிகளுக்கு நிரந்தர ஊனம், மருத்துவம் மற்றும் மறுவாழ்வு நலன்கள், நோய்வாய்ப்பட்ட விடுப்பு கொடுப்பனவு, டயாலிசிஸ் உதவி, ஓய்வூதியம் மற்றும் இறப்பு ஆகியவைக்குப் பாதுகாப்பு வழங்குகிறது.

“55 வயதிற்குட்பட்ட அனைத்து இல்லத்தரசிகள் மற்றும் முழுநேர அல்லது பகுதிநேர குடும்பத்தை நிர்வகிப்பவர்கள், திருமணமானவர்கள் அல்லது தனிமையில் இருப்பவர்கள் 12 மாத காலத்திற்கு ரிம120 பங்களிப்புடன் இத்திட்டத்தில் பங்கேற்கத் தகுதியுடையவர்கள்,” என்று மத்திய செபராங் பிறை சொக்சோ அமைப்பு அதிகாரி நோர் அஸ்மிடார் அப்துல் ஹாமிட் விளக்கமளித்தார்.

“இந்தத் திட்டத்தில் பதிவு செய்த இல்லத்தரசிகள் இறக்க நேரிட்டால், அவர்களின் கணவன்மார்களுக்கு 55 வயது வரை மாதந்தோறும் ரிம300 தொகையைப் பெறுவார்கள். கணவன் இல்லை என்றால், இளைய குழந்தை 21 வயது ஆகும் வரை இந்த உதவியை பெறும். அதுமட்டுமின்றி ஈமச்சடங்கு செலவுகளுக்கு ரிம2,000 அளிக்கப்படும்” என்றார்.
பிறை வட்டாரத்தில் அதிகமான இல்லத்தரசிகள் இத்திட்டத்தில் இணைவதற்கு ஊக்கமளிக்கும் முன்னோடித் திட்டமாக இந்தப் பதிவு திட்டம் இடம்பெறுகிறது என ஸ்ரீ சங்கர் கூறினார்.

மலேசிய தமிழர் குரல் இயக்கத் தலைவரும் எம்.பி.எஸ்.பி கவுன்சிலருமான டேவிட் மார்ஷல் இந்தப் பதிவு திட்டத்தை ஏற்பாடுச் செய்த பிறை MPKK குழுவினருக்குப் பாராட்டுத் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு பிரமுகராகக் கலந்து கொண்ட மத்திய செபராங் பிறை சொக்சோ அமைப்பு அதிகாரிகளான நோர் அஸ்மிடார் அப்துல் ஹாமிட், முகமட் ரிபானா அப்துல் சாமாட், முகமட் அக்மால் சம்சுடின் ஆகியோருக்கு டேவிட் மார்ஷல் நினைவுச் சின்னம் எடுத்து வழங்கினார்.

அடுத்து, சிறு தொழில் வியாபாரிகள் சொக்சோ அமைப்பின் கீழ் பதிவு செய்ய விளக்கக்கூட்டம் அல்லது பதிவு திட்டம் ஏற்பாடு செய்ய இணக்கம் கொண்டுள்ளதாக ஶ்ரீ சங்கர் தெரிவித்தார்.