பினாங்கு ஆரம்பப்பள்ளி மாணவர்களிடையே ஸ்தேம் கல்வியில் (அறிவியல், தொழில்நுட்பம், கணிதம் மற்றும் பொறியியல்) ஆர்வத்தை மேலோங்கவும் அதன் முக்கியத்துவத்தை உணர்த்தும் நோக்கில் புக்கிட் குளுகோரில் அமைந்துள்ள கர்பால்சிங் கற்றல் மையத்தில் இளம் ஆய்வாளர் திட்டம் 2.0 ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் விண்ணப்ப நாளன்று ஸ்ரீ டெலிமா சட்டமன்ற உறுப்பினர் செர்லினா கலந்து கொண்டு மாணவர்களுக்கு ஊக்கம் வழங்கினார்.
ஆரம்பப்பள்ளி மாணவர்களிடையே அறிவியல் மற்றும் கல்வி வழி புத்தாக்க திறனை மேலோங்க செய்ய நிறுவனங்களின் பங்களிப்பு இன்றியமையாதது என செய்தியாளர் சந்திப்பில் ஸ்ரீ டெலிமா சட்டமன்ற உறுப்பினர் செர்லினா குறிப்பிட்டார். இதனிடையே, நிறுவனங்களின் பங்களிப்பின் மூலம் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் பற்றிய அறிவாற்றலை பெருகிகொள்ள மாணவர்களுக்கு நல்ல வாய்ப்பாக அமையும் என மேலும் நம்பிக்கை தெரிவித்தார்.
பினாங்கு மாநில அரசும் பினாங்கு தேக் டோமும் இணைந்து இவ்வாண்டு 5,000 மாணவர்கள் பங்குபெறும் வகையில் பினாங்கு மாநிலம் முழுவதும் 50 இடங்களில் இளம் ஆய்வாளர் திட்டம் அமல்படுத்தப்படவுள்ளது. இத்திட்டம் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் நடத்த வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதில் பங்கேற்கவிரும்பும் மாணவர்கள் மேல்விபரங்களை அறிந்துகொள்ள அருகில் இருக்கும் சட்டமன்ற சேவை மையங்களையும் நாடாளுமன்ற உறுப்பினரின் சேவை மையத்தை அணுகி அல்லது பினாங்கு தேக் டோம் மையத்தை 04-2626663 என்ற எண்களில் தொடர்புக் கொள்ளலாம்.
பினாங்கு மாநிலத்தை அனைத்துலக மற்றும் அறிவார்ந்த நகரமாக உருமாற்றும் முயற்சியில் மாநில அரசு ரிம20 மில்லியன் செலவில் தேக் டோம் மையம், ரிம 6மில்லியன் செலவில் கர்பால் சிங் கற்றல் மையம், ரிம 20 மில்லியன் செலவில் பினாங்கு அறிவியல் காபே மற்றும் ரிம 6மில்லியன் செலவில் ஜெர்மன் இரட்டை தொழிற் பயிற்சி மையம் போன்றவைகளை உருவாக்கியுள்ளது பாராட்டக்குரியதாகும். பினாங்கு மாநில மாணவர்கள் கல்வி, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் என அனைத்திலும் புலமை பெற்று சிறந்து விளங்க வேண்டும் எனும் நோக்கில் இத்திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளது.