ஜார்ச்டவுன் – பினாங்கில் இளைஞர்கள் மற்றும் திருமணமாகாதவர்களுக்கு ‘சிறப்பு வாடகை வீடமைப்புத் திட்டம்’ (SPSK) செயல்பாடு தற்போது ஆரம்ப நிலையில் உள்ளது. இத்திட்டம் இளைஞர்கள் மற்றும் திருமணமாகாதவர்களுக்குப் பெரிதும் பயனளிக்கும்.
மாநில வீட்டுவசதி மற்றும் சுற்றுச்சூழல் ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ ஸ்ரீ சுந்தராஜு சோமு இன்று மாநில சட்டமன்றக் கட்டிடத்தில் மாநில சட்டமன்றத்தின் போது இதனைப் பகிர்ந்து கொண்டார்.
ஊராட்சி மேம்பாட்டு அமைச்சின் கீழ் ஜெலுத்தோங்கில் நிர்மாணிக்கப்படும் மக்கள் வீட்டுவசதித் திட்டம் (PPR) பினாங்கில் உள்ள இளைஞர்கள் மற்றும் திருமணமாகாதவர்களுக்கு ‘சிறப்பு வாடகை வீடமைப்புத் திட்டத்தின்’ முன்னோடித் திட்டமாக அமையும்.
“இத்திட்டத்திற்கான ஒதுக்கீடு கிடைத்ததும் ஒப்பந்ததாரரை நியமிக்கும் பணித் தொடங்கும். ஜெலுத்தோங் பி.பி.ஆர் அடுக்குமாடி குடியிருப்பில் 500 யூனிட்களைக் கொண்டிருக்கும்.
“பினாங்கு வீட்டுவசதி வாரியம் (LPNPP) இளம் குடும்பங்களுக்கு தலா 650 சதுர அடி கொண்ட 250 யூனிட்களை ஒதுக்குமாறு ஊராட்சி மேம்பாட்டு அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளது. இதற்கிடையில், இளைஞர்கள் அல்லது திருமணமாகாதவர்களுக்கு 450 சதுர அடியில் மேலும் 250 யூனிட்களை கோரியுள்ளது,” என்று சுந்தராஜு கெபுன் பூங்கா சட்டமன்ற உறுப்பினர் லீ புன் ஹெங் துணை கேள்விக்கு இவ்வாறு பதிலளித்தார்.
அதுமட்டுமல்லாமல், சிறப்பு வீடமைப்புத் திட்டத்தின் கீழ் விற்கப்படாத வீடுகளை இளைஞர்கள் மற்றும் திருமணமாகாதவர்களுக்கு வழங்குவதற்கு வீட்டுவசதி வாரியம் ஆய்வு செய்து வருவதாகவும் சுந்தராஜு பகிர்ந்து கொண்டார்.
இத்திட்டத்தின் கீழ், தனிநபர் பிரிவில் வயதான மற்றும் திருமணமாகாத நபர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.
“மாநில அரசுக்கு சொந்தமான நிலத்தில் உருவாக்கப்பட்ட வாங்கும் சக்திக்கு உட்பட்ட வீடுகளின் யூனிட்களில் 10 சதவீதத்தை வாடகைக்கு சொந்த திட்டத்திற்காக ஒதுக்க வீட்டுவசதி வாரியம் முடிவுசெய்துள்ளது,” என்று அவர் மேலும் கூறினார்.
இந்த முயற்சியை செயல்படுத்துவதற்கான திட்டங்களில் கம்போங் உஜோங் பத்து மற்றும் கம்போங் மானிஸ் போன்ற மறுமேம்பாட்டிற்கான திட்டங்களும் அடங்கும் என்றும் அவர் பகிர்ந்து கொண்டார்.
சுந்தராஜூவின் கூற்றுப்படி, வாங்கும் சக்திக்கு உட்பட்ட வீடமைப்புத் திட்டத்தில் மூன்று முறை வங்கிக் கடன்களுக்காக நிராகரிக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள், LPNPP இன் கீழ் வாடகைக்கு வீடு வாங்கும் திட்டத்திற்காக பரிசீலிக்கப்படுவர்.