பத்து உபான் – மத்திய வேளாண்மை விற்பனை வாரியத்தின் (FAMA) ஏற்பாட்டில் முதல் முறையாக பினாங்கு மாநிலத்தில் ” பினாங்கு மத்திய வேளாண்மை விற்பனை விழா” சிறப்பாக நடைபெற்றது. இவ்விழா கடந்த அக்டோபர் மாதம் 4 முதல் 7-ஆம் தேதி வரை காம்பிளக்ஸ் புக்கிட் ஜம்புல் வளாகத்தில் இடம்பெற்றது.
“ ‘ஃபமா‘ விவசாயிகளின் உற்பத்திகளைச் சந்தைப்படுத்துவதற்கு உருமாற்றுத்திட்டம் மூலம் நவீனம், ஆற்றல் மற்றும் போட்டித்தன்மையுடன் செயல்பட பிரதானமாக அமைகிறது. இந்த வாரியம் உணவுப்பொருட்கள் தயாரிப்பை மேம்படுத்துவதோடு அதன் விளைச்சலை பொது மக்கள் சந்தையில் நியாயமான விலையில் பெற்றுக்கொள்வதை உறுதிப்படுத்துகிறது,” என ‘ பினாங்கு மத்திய வேளாண்மை விற்பனை விழா 2018′ – ஐ அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்த பத்து உபான் சட்டமன்ற உறுப்பினர் குமரேசன் இவ்வாறு செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
இவ்விழா நடத்துவதன் மூலம் விவசாயிகள் தங்களின் உற்பத்திகளை சந்தைப்படுத்துவது மட்டுமின்றி உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முகவர்களின் தொடர்புக்கிடைப்பதன் மூலம் விவசாய உற்பத்தியை மேம்படுத்தலாம் என மேலும் குமரேசன் தெரிவித்தார் .
இந்நிகழ்வில் விவசாயிகள் வேளாண்மைத் துறையில் ஈடுப்படுவதற்கு உந்துசக்தியாகத் திகழும் பொருட்டு பினாங்கு மாநில ‘ஃபமா‘ தலைமை நிர்வாக அதிகாரி ஹபிபா பிந்தி சுலய்மான் விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கினார். ‘Agrobazaar Kedai Rakyat’, ‘Geran In Kind Contribution’ மற்றும் ‘Gerai Buah-buah Segar’ எனும் மூன்று திட்டத்தின் கீழ் விவசாயம் முனைவோருக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டன.
‘ஃபமா‘ வாரியம் விவசாயத் துறையில் ஈடுப்படும் இளைஞர்கள் தங்களின் பொருட்களை சந்தைப்படுத்துவதற்கு ‘ஃபமா‘-வில் பதிவுச்செய்து கொள்ள அழைக்கப்படுகின்றனர்.