இளைய தலைமுறையினரின் போக்கு வருத்தம் அளிக்கிறது.

Admin

மக்கள் கூட்டணியில் இந்திய தலைவர்கள் பல கட்சிகளில் இருந்தாலும், இந்திய சமூகம் தொடர்பான விவகாரங்களில் ஒரு மித்த கருத்தோடே செயல்படுகிறோம்.பல்லின கட்சிகளில் அங்கத்துவம் பெற்றிருப்பதால் இந்திய சமூகத்தின் உரிமைக்கு குரல் எழுப்புவதில் நாங்கள் தயங்குவதாகச் சொல்லப் படும் குற்றச்சாட்டு அடிப்படை அற்றவை. அப்படிப்பட்ட தடையேதும் இல்லை. மலேசியாவின் பல்லின சமூகத்தில் இந்திய சமூகமும் ஓர் அங்கம் என்பதனை உணராதவர்களின் பிதற்றல் அது.

ஹிண்ராப் பேரணி ஏற்படுத்திய அரசியல், சமூக விழிப்புணர்வின் காரணமாக ஐம்பது ஆண்டுகால வரலாற்றில் இந்திய சமூகம் முதல் முறையாக 2008ல் தைரியமான முடிவை எடுத்தது. இந்த தைரியமான முடிவின் பயனாக இன்று பல புதிய வாய்ப்புகள் இந்தியர்களைத் தேடி வருகிறது என்பது உண்மை.

நாட்டின் வளர்ச்சிக்கு ஏற்ப இந்திய சமூக இளைஞர்களும் முன்னேற வேண்டும் என கட்சி பேதங்களைத் தாண்டி எல்லாத் தரப்பினரும் முழு முயற்சி எடுத்து வருகின்றனர். அந்த முயற்சிகளுக்கு ஏற்ப தங்களது வாழ்க்கைத் தரத்தை மாற்றிக்கொள்ள குறிப்பிட்ட தரப்பிலான இளைஞர்கள் முனைப்புக் காட்டி வருகின்றனர்.

ஆனால், இன்னும் சில இளைஞர்களோ நாட்டில் நடந்து கொண்டு இருக்கின்ற மாறுதல்களைப் பற்றி எல்லாம் கவலை இல்லாமல்; மற்ற இனங்களுக்கு நிகராக நாமும் முன்னேற வேண்டும் என்ற முனைப்பு ஏதும் இல்லாமல், தங்களது குடும்பத்திற்கும் சமூகத்திற்கும் தலைகுணிவை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு சமூக சீர்கேட்டு பிரச்சனைகளில் ஈடுபடுவது பெறும் வருத்தத்தை ஏற்படுத்துகிறது.

தேசிய முன்னணிக்கு நிகரான அரசியல் அமைப்பாக மக்கள் கூட்டணி உருவெடுத்திருப்பதின் வழி இந்திய சமூகத்தின் அரசியல் ரீதியான உரிமைகளை நாம் மீட்டு எடுத்துள்ளோம். வரலாற்றில் இல்லாத வகையில் இந்திய சமூகம் அரசியல் ரீதியிலான அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது. தெளிவான சிந்தனையும் முன்யோசனையுடன் கூடிய செயல் பாடும் இல்லாவிட்டால், நாம் போராடிப் பெற்ற இந்த அரசியல் உரிமைகள் அர்த்தம் அற்றதாகிவிடும் என்ற சிந்தனை தெளிவை இந்திய இளைஞர்கள் பெற வேண்டும்.

இந்த ஐந்து ஆண்டு கால மக்கள் கூட்டணி ஆட்சியில் இந்திய சமூகத்தின் எல்லாத் தேவைகளையும் நிறைவு செய்து விட்டோம் என அரசியல் பேசி காலம் கழிக்க நேரம் இல்லை. அரை நூற்றாண்டு காலம் நம் சமூகம் உரிமைக்கும் சலுகைக்குமான வேறுபாடுகளைக்கூட உணர விடாமல் முடக்கி வைக்கப்பட்டுள்ளது.

இந்த ஐம்பது ஆண்டு காலத்தில் நமக்குக் கிடைக்காத அரசியல் ரீதியிலான அங்கீகாரத்தைத் தற்போது பெற்றுள்ளோம். தன்மானமும் சுய கெளரமும் மிக்க இந்திய சமூகம் போராடிப் பெற்ற உரிமைகளைச் சில சலுகைகளுக்காக அடமானம் வைத்து விடக்கூடாது.

481276_578909692126485_1611051261_n

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

பேராசிரியர் ப இராமசாமி.

மாண்புமிகு இரண்டாம் துணை முதல்வர், பினாங்கு மாநிலம்.