இஸ்லாம் அல்லாத வழிபாட்டு தலங்கள் ரிபி நிதியத்திற்கு விண்ணப்பிக்கலாம் – ஜெக்டிப்

Admin

ஜார்ஜ்டவுன் – பினாங்கு மாநிலம் 2016-ஆம் ஆண்டு அறிமுகம் செய்த இஸ்லாம் அல்லாத வழிபாட்டு தள நிதியம்(ரிபி) ரிம50,000 வரை விண்ணப்பிக்கலாம் என சென்.போல் தேவாலயத்திற்கு வருகையளித்த போது இவ்வாறு அறிவித்தார் உள்ளூராட்சி, கிராமம், நகரம் மற்றும் வீடமைப்புத் திட்டமிடல் சேவைக் குழுவின் ஆட்சிக்குழு உறுப்பினர் மதிப்பிற்குரிய ஜெக்டிப் சிங் டியோ. இதுவரை இந்த நிதியத்தில் ரிம5 மில்லியன் 136 இஸ்லாம் அல்லாத வழிபாட்டு தலங்களுக்கு வழங்கப்பட்டதாகக் குறிப்பிட்டார்.

சென்.போல் தேவாலயத்தில் ஆட்சிக்குழு உறுப்பினர் ஜெக்டிப் சிங் டியோ உரையாற்றினார்.

சென்.போல் தேவாலயத்தில் கடந்தாண்டு நவம்பர் மாதம் ஏற்பட்ட வெள்ள பேரிடரில் மின்சாதனப் பலகை மற்றும் பொருட்கள் சேதம் அடைந்திருப்பதை நேரில் சென்று பார்வையிட்ட பின்னர் அத்தேவாலய நிர்வாகக் குழுவினரிடம் ரிம32,000 ரிபி உதவித்தொகைக்கான மாதிரி காசோலையை எடுத்து வழங்கினார்.

இதனிடையே, பினாங்கு மாநிலத்தின் இந்த ரிபி திட்டத்தை பிற மாநிலங்களும் பின்பற்ற வேண்டும் என டத்தோ கெராமாட் சட்டமன்ற உறுப்பினருமான ஜெக்டிப் கேட்டுக்கொண்டார். இன்னும் அதிகமான ரிபி நிதியம் பெறக்கோரி மத்திய அரசிடம் விரைவில் விண்ணப்பம் செய்யப்படும் எனவும் தமதுரையில் குறிப்பிட்டார். இதன்மூலம், இன்னும் அதிகமான இஸ்லாம் அல்லாத வழிபாட்டு தலங்கள் பயன்பெற முடியும் என நம்பிக்கை தெரிவித்தார்.

2016-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இஸ்லாம் அல்லாத வழிபாட்டு தல நிதியம் மூலம் 136 மேம்பாட்டுத் திட்டங்கள் அதாவது 38 இந்து ஆலயம், 6 குத்வாரா, 20 தேவாலயம் மற்றும் 72 சீனக்கோவில் ஆகிய தலங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது பாராட்டக்குரியதாகும்.

இஸ்லாம் அல்லாத வழிபாட்டு தலங்கள் தங்களின் வழிபாட்டு தள மேம்பாட்டுக்கு இன்னும் ரிம3,804,146.78 தொகை எஞ்சியுள்ள வேளையில் நிர்வாகத்தினர் விண்ணப்பங்கள் அனுப்ப அழைக்கப்படுகின்றனர். ஏற்கனவே நிதியம் வழங்கப்பட்ட வழிபாட்டு தலங்களும் மற்றொரு புதிய மேம்பாட்டுத் திட்டத்திற்காக விண்ணப்பிக்கலாம்.

இந்நிகழ்வில் கொம்தார் சட்டமன்ற உறுப்பினர் தே லாய் ஹெங், சென்.போல் தேவாலய நிர்வாக குழுவினரும் கலந்து சிறப்பித்தனர்.

இஸ்லாம் அல்லாத வழிபாட்டு தல மேம்பாட்டுத் திட்டத்திற்கு விண்ணப்பிக்க விரும்புபவர் விண்ணப்ப கடிதம், சம்மந்தப்பட்ட சட்டமன்ற உறுப்பினரின் கடிதம்,பதிவிலாகாவின் நகல், வழிபாட்டு தலங்களின் நிர்வாக உறுப்பினர் விபரம் நில உரிமையாளரின் ஒப்புதல் கடிதம், நில வரி இரசீது, வழிபாட்டு தல வரைப்படம், மேம்பாட்டுத் திட்ட விபரம் மற்றும் 3 குத்தகை விலை போன்ற ஆவணங்களை உடன் கொண்டுவர வேண்டும்.