பினாங்கு மாநிலத்தை மாசற்ற பசுமையான மாநிலமாக மாற்றியமைக்கும் முயற்சியில் மாநகர் கழகம் உணவுக் கழிவிலிருந்து உரமாக்கல் திட்டத்தை அண்மையில் அறிமுகப்படுத்தியது. இத்திட்டத்தின் அமலாக்கத்தை நேரில் சென்று பார்வையிட்டார் உள்ளூராட்சி, போக்குவரத்து மற்றும் வெள்ள நிவாரண ஆட்சிக்குழு உறுப்பினர் சாவ் கொன் யாவ்.
பினாங்கு மாநிலம் பசுமைக்கு முன்னுரிமை வழங்குவது இத்திட்டத்தின் வழி நிருபனமாகிறது எனச் செய்தியாளர் சந்திப்பில் கூறினார் ஆட்சிக்குழு உறுப்பினர் சாவ் கொன் யாவ். உணவுக் கழிவு உரமாக்கல் திட்டத்தின் முக்கிய நோக்கம் கழிவுப் பொருட்களை குறைத்து அதனை உரமாக மாற்றுவதே ஆகும். இம்மாதிரியான திட்டத்தின் வழி, புவி வெப்பமடைதலை குறைக்க முடியும் என்பதையும் பினாங்கு மாநிலத்தை தூய்மை, பசுமை, பாதுகாப்பு மற்றும் ஆரோக்கிய மாநிலமாக மாற்றியமைக்க முடியும் என்றார்.
இத்திட்டத்தில் புலாவ் தீக்கூஸ் சந்தை, லெபோ கெம்பல் சந்தை, பத்து லங்சாங், ஃபலிம், ஜெலுதோங், பாடாங் தெம்பாக், பாயான் பாரு சந்தைகள், கொன்வேன்ட் லைட் இடைநிலைப்பள்ளி, யுனியன் சீனப்பள்ளி, ஹெங் ஈ சீனப்பள்ளி, மெத்தடீஸ் ஆண் இடைநிலைப்பள்ளி, கொன்வேன்ட் கீரீன் லென் இடைநிலைப்பள்ளி, பிபிஆர் ஜாலான் சுங்கை அடுக்குமாடி, காட் லெபோ மெக்லம் அடுக்குமாடி குடியிருப்பாளர்கள் மற்றும் வியாபாரிகள் தத்தம் கழிவுகளை பினாங்கு மாநகர மன்றத்தின் சேவை மையத்திற்கு சேகரித்து அனுப்புவர். அதன் பின்னர், சூழல்-நட்பு அமைப்பு பயன்படுத்தி கழிவுகளில் இருந்து திரவ உரத்தை உருவாக்கப்படுகிறது.
இத்திட்டம் மறுசுழற்சி 5R (குறைத்தல், மறுபயன்பாடு, மறுசுழற்சி, மறு சிந்தனை, புதிதாக மாற்றுதல்) கொள்கையில் அமல்படுத்தப்படுகிறது. சுற்று வட்டார பொதுமக்கள், வியாபாரிகள் அனைவரின் ஒத்துழைப்பு பெருமளவில் எதிர்ப்பார்க்கப்படுகிறது. சுகாதாரமான சூழ்நிலையை உருவாக்க இத்திட்டம் பெரிதும் துணைபுரியும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.}