பிறை – பிறை மாநில சட்டமன்றத் தொகுதியில் குறைந்த வருமானம் பெறும் குழுவிலிருந்து (பி40) மொத்தம் 100 பெறுநர்களுக்கு உணவுக் கூடைகள் வழங்கப்பட்டன.
இந்த உணவுக் கூடைகளை பினாங்கு முத்தியாரா உணவு வங்கி திட்டத்தின் மூலம் பினாங்கு மாநில இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர்
ப.இராமசாமி, தாமான் சாய் லெங் பார்க் கம்போங் நிர்வாக செயல்முறை கழகம் மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு எடுத்து வழங்கினார்.
இத்திட்டம் முதல் முறையாக பினாங்கு மேம்பாட்டுக் கழகக் கூட்டாண்மை சமூக பொறுப்பு (CSR) திட்டத்தின் மூலம் பிறை சட்டமன்ற சேவை மையத்தின் இணை ஆதரவுடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில் சிறப்புரை வழங்கிய இரண்டாம் துணை முதல்வரும் பிறை சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர் ப.இராமசாமி பேசுகையில் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவினங்களின் சுமையைக் குறைக்க உதவும் பொருட்டு இந்த உணவுக் கூடை தேர்ந்தெடுக்கப்பட்ட பி40 சார்ந்த குடும்பங்களுக்கு வழங்கப்படுகிறது, என்றார்.
“குறைந்த வருமானம் பெறும் பி40 குழுவைச் சேர்ந்த மூவின மக்களுக்கும் இந்த உணவுக் கூடைகள் பெற தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
“சுமார் 100 உணவுக் கூடைகள் இன்று வழங்கப்படுகின்றன. இத்திட்டம் பினாங்கு மேம்பாட்டுக் கழகத்தால் பினாங்கு முழுவதும் வழங்க இணக்கம் கொள்கிறது.
“பினாங்கு மேம்பாட்டுக் கழகத்தின் இம்முயற்சியை பாராட்டுகிறேன். மேலும், பிற அரசு சாரா அமைப்புகளும் இதனை முன்னோடியாக கொள்ள வேண்டும்,” என பேராசிரியர் கேட்டுக் கொண்டார்.
இதனிடையே, அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவினத்தை கருத்தில் கொண்டு பொதுமக்கள் சிக்கனத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என பேராசிரியர் இரமாசாமி அறிவுறுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் பினாங்கு மேம்பாட்டுக் கழக தலைமை நிர்வாக அதிகாரி டத்தோ அசீஸ் பின் பாகார், அக்கழக பிரதிநிதிகள், செபராங் பிறை மாநகர் கழக கவுன்சிலர் டேவிட் மார்ஷல், தாமான் சாய் லெங் பார்க் கம்போங் நிர்வாக செயல்முறை கழக உறுப்பினர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.