உதவி காவல்துறை அதிகாரி எண்ணிக்கை அதிகரிக்கப்படும் – ஜாசானி

படம் 1:உதவி காவல்துறை அதிகாரிக்குக் காவல்துறை சின்னம் அணிவித்தார் மாநில முதல்வர்.
படம் 1:உதவி காவல்துறை அதிகாரிக்குக் காவல்துறை சின்னம் அணிவித்தார் மாநில முதல்வர்.

பினாங்கு நீர் விநியோக நிறுவனத்தின் (பிபிஎ) உதவி காவல்துறை அதிகாரிகளுக்குப் பதவி உயர்வு மற்றும் காவல்துறை சின்னம் அணிவிக்கப்பட்டன. இந்நிகழ்வு பினாங்கு நீர் விநியோக அலுவலகத்தில் கடந்த 15/1/2015-ஆம் நாள் நடைபெற்றது. 2013-ஆம் ஆண்டு இந்நிறுவனத்திற்குச் சுயமாக உதவி காவல்துறை படையை அமைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது. இந்நிகழ்விற்குச் சிறப்பு விருந்தினராகப் பினாங்கு மாநில காவல்துறை தலைமை அதிகாரி டத்தோ வீரா அப்துல் ரஹிம் பின் ஹஜி ஹனபி மற்றும் உயர் அதிகாரிகள் வருகைபுரிந்து சிறப்பித்தனர்.
இந்நிகழ்வில் 42 உதவி காவல்துறை அதிகாரிகளுக்குப் பதவி உயர்வு மற்றும் காவல்துறை சின்னம் அணிவிக்கப்பட்டது. 42 உதவி காவல்துறை அதிகாரிகளில் 8 பேர் சார்ஜன் பதவி; 24 பேர் கோப்ரல் பதவி மற்றும் 10 பேர் கான்ஸ்தபல் பதவி உயர்வுப் பெற்றனர்.
இந்த உதவி காவல்துறை அதிகாரிகளுக்கு பினாங்கு மாநில காவல்துறை தலைமை அதிகாரி டத்தோ வீரா அப்துல் ரஹிம் மற்றும் மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங் காவல்துறை சின்னத்தை அணிவித்தனர். பினாங்கு நீர் விநியோக வாரியத்தின் சேவையை மேம்படுத்தவும் அந்நிறுவனத்தின் பாதுகாப்பை மேலோங்கச் செய்யவும் இந்த உதவிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாகத் தலைவர் பொறியியலாளர் ஜாசானி மைடின்சா குறிப்பிட்டார். மேலும் இந்த உதவிப்படையில் 300 அதிகாரிகள் கூடுதலாகப் பணியில் அமர்த்தப்படவுள்ளதாகத் தெரிவித்தார்.
இப்பதவி உயர்வு நிகழ்வில் திரு கி.ராவ் பிரகாஷ் மற்றும் திரு தி.கதிரவன் ஆகிய இருவருக்கும் கான்ஸ்தபல் பதவியிலிருந்து சார்ஜன் பதவி உயர்வுப் பெற்றனர் என்றால் மிகையாகாது. பினாங்கு நீர் விநியோக நிறுவனம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்குப் பொருளுதவி வழங்கியதோடு உதவி காவல்துறை அதிகாரிகளும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிக்கரம் நீட்டியச் செயல் பாராட்டக்குறியது என மாநில முதல்வரும் இந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் குழுத்தலைவருமான மேதகு லிம் குவான் எங் தெரிவித்தார்.