ஜார்ச்டவுன் – பினாங்கு மாநில அரசு இம்மாநிலத்தில் உரிமம் பெறாத நெகிழி மறுசுழற்சி தொழிற்சாலைகளின் செயல்பாடுகளைக் கண்காணிக்க ‘ட்ரோன்’ மற்றும் இரகசிய கண்காணிப்பு கேமரா (சி.சி.டிவி) போன்ற தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த இலக்கு கொண்டுள்ளது.
வீடமைப்பு, உள்ளூராட்சி, நகர்ப்புற & கிராமப்புற மேம்பாட்டு திட்டமிடல் ஆட்சிக்குழு உறுப்பினர் ஜெக்டிப் சிங் டியோ கூறுகையில், கண்காணிப்பு மற்றும் அமலாக்கத்தை மேற்கொள்வதில் மாநில அரசு உறுதிபூண்டுள்ளது என்றும் சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் ‘சட்டவிரோத’ நடவடிக்கைகளை மேற்கொள்ளும் எந்தவொரு தரப்பினருடனும் மாநில அரசு சமரசம் செய்யாது, என்றார்.
“மாநில அரசு சம்பந்தப்பட்ட ஏஜென்சிகளுடன் அமலாக்க நடவடிக்கையை எவ்வாறு தரப்படுத்தவும் இலகுவாக செயல்படுத்தல் குறித்து தற்போது ஆராய்ந்து வருகிறது.
“பல ஏஜென்சிகள் பல வகையான சட்ட திட்டங்களுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. எனவே, மாநில அரசு
தற்போதுள்ள துணைக்குழு உதவியுடன்
ஒவ்வொரு ஏஜென்சிகளும் அதன் தொடர்புடைய சட்டத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தி செயல்படுத்த இணக்கம் கொண்டுள்ளது என்று 14-வது பினாங்கு மாநில சட்டமன்றத்தின் மூன்றாவது கூட்டத்தில் கூறினார்.
நெகிழி மறுசுழற்சி தொழிற்சாலைகளின் எண்ணிக்கை மற்றும் மாநிலத்தில் உரிமம் பெறாத பிளாஸ்டிக் பதப்படுத்தும் தொழிற்சாலைகளுக்கு எதிரான நடவடிக்கைகளின் நிலை குறித்து மச்சாங் புபோக் மாநில சட்டமன்ற உறுப்பினர் லீ கை லூனின் கூடுதல் வாய்வழி கேள்விகளுக்கு இவ்வாறு பதிலளித்தார்.
ஜெக்டிப்பின் கூற்றுப்படி, மாநிலத்தில் இயங்கும் மொத்தம் 102 பிளாஸ்டிக் மறுசுழற்சி தொழிற்சாலைகளை மாநில அரசு அடையாளம் கண்டுள்ளது. மேலும் அதில் 11 உரிமம் பெறாத தொழிற்சாலைகள் இடம்பெற்றுள்ளன.
இந்த பிளாஸ்டிக் மறுசுழற்சி தொழிற்சாலைகள் அனைத்தும் செபராங் பிறையில் உள்ளன. அதாவது வட செபராங் பிறையில் 34 உரிமம் பெற்ற மற்றும் உரிமம் பெறாத ஒரு தொழிற்சாலையும் உள்ளன; மத்திய செபராங் பிறையில் (36 உரிமம் பெற்ற, ஏழு உரிமம் பெறாத தொழிற்சாலைகளும்) மற்றும் தென் செபராங் பிறையில் (21 உரிமம் பெற்ற, மூன்று உரிமம் பெறாத) தொழிற்சாலைகள் உள்ளன.
“அமலாக்க நடவடிக்கைகளைப் பொறுத்தவரை, செப்டம்பர் 2020 வரை மொத்தம் 34 அமலாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. உள்ளூர் அதிகாரிகள் 16 நோட்டிஸ்களையும் 11 அபராதம் வெளியிட்டுள்ளனர்” என்று டத்தோ கெராமாட் சட்டமன்ற உறுப்பினர் ஜெக்டிப் விளக்கமளித்தார்.