பிறை – பினாங்கின் மீது நம்பிக்கை வைத்து பல ஆண்டுகளாக இம்மாநிலத்தில் தொடர்ந்து முதலீடு செய்ததற்காக மெட்டல் (மலேசியா) தனியார் நிறுவனத்திற்கு மாநில முதல்வர் மேதகு சாவ் கொன் இயோவ் தனது மனமார்ந்த நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்தார்.
மெட்டல் (மலேசிய) சென்.பெர்ஹாட் நிறுவனம், உலகின் முன்னணி பொம்மை நிறுவனமாகவும், குழந்தை மற்றும் குடும்ப பொழுதுபோக்கு பொருட்கள் தயாரிக்கும் கிளை நிறுவினங்கள் கொண்ட வலுவான உரிமையாளராகவும் இன்று தனது 40வது ஆண்டு நிறைவு விழாவைக் கொண்டாடுகிறது.
இந்த பொம்மை நிறுவனம் 1981 இல் பிறையில் நிறுவப்பட்டு இது நமது நாட்டில் அமைக்கப்பட்ட மெட்டலின் முதல் உற்பத்தி ஆலையாகும்.
மாநில அரசு உலக ரீதியில் முதலீடு செய்யும் இந்நிறுவனம் இம்மாநிலத்தில் தொடர்ந்து முதலீடு செய்வதில் பெருமிதம் கொள்வதாக சாவ் கூறினார்.
“தொழில்துறையில் வரவேற்கத்தக்க சூழலை உருவாக்குவதற்கும், தொழில்மயமாக்கலில் இம்மாநிலத்தை முன்னணியில் நிலைநிறுத்துவதற்கும் மாநிலம் மேற்கொள்ளும் முன்முயற்சிகளின் பிரதிபலிப்பாக இது அமைகிறது.
“பல ஆண்டுகளாக பிறை தொழில்துறை மண்டலத்தில் பொம்மைத் தொழிலுக்கான செழிப்பான சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குவதில் மெட்டல் நிறுவனம் வெற்றிப் பெற்றுள்ளது, என்றார்.
“இது ‘பேக்கேஜிங்’, வர்ணம் தீட்டல், பொருட்களின் விநியோகம் மற்றும் இயந்திர வடிவமைப்பு ஆகியவற்றின் அடிப்படையில் உள்ளது.
“உள்நாட்டு நிறுவனங்களுக்கு மேட்டல் கொண்டு வந்த பங்களிப்பினையும் மாற்றங்களையும் பார்ப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
“இது ‘இன்வெஸ்ட் பினாங்கு’ மூலமாக பினாங்கு மாநிலம் தொடர்ந்து உள்ளூர் நிறுவனங்களை அங்கீகரிக்கும் உள்ளூர்மயமாக்கல் நிகழ்ச்சிக்கு இணக்கம் கொள்கிறது,” என்று பிறையில் உள்ள மெட்டல் நிறுவனத்தின் 40வது ஆண்டு விழா கொண்டாட்டத்தின் போது சாவ் தனது உரையில் கூறினார்.
மேலும், இன்வெஸ்ட் பினாங்கு தலைமைச் செயல் அதிகாரி டத்தோ லூ லீ லியான், மாநில முதல்வரின் சிறப்பு முதலீட்டு ஆலோசகர் டத்தோஸ்ரீ லீ கா சூன், செபராங் பிறை மாநகர் கழக தலைவர் மேயர் டத்தோ அசார் அர்ஷாத், மலேசியாவுக்கான அமெரிக்கத் தூதர் பிரையன் டி. மெக்ஃபீட்டர்ஸ், மெட்டல் நிறுவனத் தலைவர் மற்றும் தலைமை வணிகத் தலைவர் அதிகாரி ஸ்திவ் தொட்சிகே மற்றும் மெட்டல் மலேசியா பொது மேலாளர் சிங் சியாவ் லீ ஆகியோர் கலந்து கொண்டனர்.
மலேசியாவில் இந்நிறுவனம் அமைக்கப்பட்டு அதன் 40 ஆண்டுகள் நிறைவு விழாக் கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள அழைத்ததற்காக மெட்டல் நிறுவனத்திற்கு சாவ் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தார்.
“இந்தக் கொண்டாட்டம் மலேசியாவில், குறிப்பாக பினாங்கில் மேட்டல் நிறுவனத்தின் தனித்துவத்தைக் குறிக்கிறது. இது இம்மாநிலத்தில் நிறுவப்பட்ட உற்பத்தி வளர்ச்சியினை நன்கு பிரதிபலிக்கிறது.
“இன்வெஸ்ட் பினாங்கு மற்றும் பிற தொடர்புடைய மாநில ஏஜென்சிகள் மூலம் மாநில அரசு பன்னாட்டு நிறுவனங்கள் இம்மாநிலத்தில் முதலீடுச் செய்ய ஊக்குவிக்கும் வகையில் திறன்மிக்க மனித வளம்,
ஆதரவான உள்கட்டமைப்பு மற்றும் பல வசதிகளை ஏற்படுத்த துணைபுரிகிறது.
சிங்கின் கூற்றுப்படி, மேட்டல் 1981 இல் நிறுவப்பட்டதிலிருந்து, இந்நிறுவனம் அதன் உற்பத்தி திறனை கணிசமாக வளர்த்து கொண்டு, உள்ளூர் தொழில்துறைகளுக்குச் செழிப்பான சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்க உதவியுள்ளது.
“குழந்தைகளை விளையாடுவதற்கு ஊக்குவித்து மகிழ்விப்பதே எங்களின் நோக்கமாகும்.
“குழந்தைப் பருவத்தின் அதிசயத்தை ஆராய அடுத்த தலைமுறைக்கு நாங்கள் தொடர்ந்து அதிகாரம் அளித்து வருகிறோம். மேலும் எங்கள் பொம்மைகள் மூலம் அவர்களின் முழு திறனையும் வளர்க்க முற்படுகிறோம்,” என்று மெட்டல் பொது மேலாளர் சிங் கூறினார்.