உள்ளூர் சமூகத்தின் நலனுக்காக சமூகநல திட்டங்களை அதிகரிக்க வேண்டும் – முதலமைச்சர்

Admin

கெபூன் பூங்கா – உள்ளூர் சமூகத்தின் நன்மை மற்றும் தேவைகளுக்காக சமூக மற்றும் பொழுதுபோக்கு சார்ந்த நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட வேண்டும், குறிப்பாக 10,000-க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்களைக் கொண்ட பாடாங் தெம்பாக் போன்ற வசிப்பிடங்களும் இதில் அடங்கும்.

ஆரோக்கியமான மற்றும் சுறுசுறுப்பான சமூகத்தை உருவாக்க இதுபோன்ற நடவடிக்கைகள் மிகவும் அவசியம் என்று மாநில முதலமைச்சர் மேதகு சாவ் கொன் இயோவ் கூறினார்.

“இங்கு அமைந்திருக்கும் ஒன்பது அடுக்குமாடி குடியிருப்புகளில் 3,000-க்கும் மேற்பட்ட வீடுகளும் மற்றும் 10,000-க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்களும் உள்ளனர், அவர்களில் பெரும்பாலோர் குறைந்த வருமானம் பெறும் பி40 குழுவினர் மற்றும் மூத்த குடிமக்கள் ஆவர்.

“எனவே, ஒட்டுமொத்த உள்ளூர் சமூகத்தின் நன்மை மற்றும் தேவைகளுக்காக, குறிப்பாக ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்குவதற்கும், முதியோர்களுக்கு சுறுசுறுப்பான முதுமையை மேற்கொள்வதற்கும் சமூக நடவடிக்கைகள் மற்றும் பொழுதுபோக்குகள் மேலும் தீவிரப்படுத்தப்படுவது அவசியம்,” என்று
கெபுன் பூங்கா சட்டமன்ற உறுப்பினர் சேவை மையத்தின் திறப்பு விழா மற்றும்
பாடாங் தெம்பாக் அடுக்குமாடி குடியிருப்பில் தீபாவளிப் பண்டிகை விருந்தோம்பல் நிகழ்ச்சியை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்து இவ்வாறு கூறினார்.

மேலும், கெபுன் பூங்கா சட்டமன்ற உறுப்பினர், லீ பூன் ஹெங்; புலாவ் தீக்கூஸ் சட்டமன்ற உறுப்பினர், ஜோசுவா வூ சி ஷெங்; புக்கிட் தம்புன் சட்டமன்ற உறுப்பினர், கோ சூன் ஐக்; முதலமைச்சரின் அரசியல் செயலாளர், லாவ் கெங் ஈ மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

அதே நேரத்தில், நிதி, நில மேம்பாடு & பொருளாதாரம் மற்றும் தகவல்தொடர்பு ஆட்சிக்குழு உறுப்பினருமான கொன் இயோவ்,
கெபுன் பூங்கா மாநில சட்டமன்றத் தொகுதியின் (KADUN) மக்கள்தொகையை கணக்கில் எடுத்துக் கொண்ட பிறகு, மவுண்ட் எர்ஸ்க்கிரின் சேவை மையத்திற்கு அடுத்ததாக இரண்டாவது மையமாக இது திறக்கப்படுவது பாராட்டக்குரியது.

“கெபுன் பூங்கா தொகுதி 24,532 வாக்காளர்களைக் கொண்டுள்ளது, கடந்த ஆகஸ்ட் 12-ஆம் தேதி மாநிலத் தேர்தலில் (PRN) சகோதரர் பூன் ஹெங் 12,955 வாக்குகள் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

“சட்டமன்ற உறுப்பினர் பூன் ஹெங் பெரும்பான்மை வெற்றியை முன்னிட்டு இத்தொகுதி மக்களுக்கு சிறந்த சேவையை வழங்குவதன் மூலம் அந்த வெற்றியை நிலைநாட்ட முடியும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

“இவ்வாறு, மக்களையும் அரசாங்கத்தையும் மிகவும் திறம்பட இணைக்கும் இந்த சேவை மையத்தை உருவாக்குவதற்கான முன்முயற்சிக்கு நல்வாழ்த்துக்கள்,” என்று பாடாங் கோத்தா சட்டமன்ற உறுப்பினரும் பத்து காவான் நாடாளுமன்ற உறுப்பினருமான முதலமைச்சர் கூறினார்.

இதற்கிடையில், கெபுன் பூங்கா தொகுதியில் வசிப்பவர்களின் எண்ணிக்கையை கணக்கில் எடுத்துக்கொண்டு இரண்டாவது சேவை மையத்தை நிறுவியதாக பூன் ஹெங் கூறினார்.

“இந்த இரண்டாவது சேவை மையத்தை நிறுவுவதன் நோக்கம் இங்குள்ள மக்களுக்கு மிகவும் சிறந்த சேவையை வழங்குவதாகும்” என்று அவர் கூறினார்.

இந்த விருந்தோம்பல் நிகழ்ச்சியில், பாடாங் தெம்பாக் பகுதியை சேர்ந்த 100 தேர்ந்தெடுக்கப்பட்ட குடும்பங்கள் விரைவில் கொண்டாடப்படும் தீபாவளிக் கொண்டாட்டத்தை முன்னிட்டு பரிசுக் கூடைகளும் வழங்கப்பட்டன.