வியாபாரத் துரையில் வெற்றி நடைப்போடும் கலைச்செல்வன் கோவிந்தராஜு,33 அண்மையில் ‘Autoshine Car Wash’ எனும் வாகனம் கழுவும் மையத்தைத் தொடங்கினார்.
‘ஊனம் வெற்றிக்கு ஒரு தடையில்லை’ என்ற கோட்பாட்டுடன் தனது 20 வயதில் ஏற்பட்ட விபத்தில் வலது கை துண்டிக்கப்பட்டப் போதிலும், வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற இலட்சியப் பாதையில் இருந்து விலக வில்லை என முத்துச் செய்திகள் நாளிதழுக்கு அளித்தப் பேட்டியில் கலைச்செல்வன் இவ்வாறு கூறினார்.
“தொடக்கத்தில் கை இழந்து மன வேதனைக்கு ஆளாகி, தனது அடுத்தக் கட்ட வாழ்க்கையை எப்படி வாழப் போகிறேன் என்ற மன உளைச்சலில் சிக்கித் தவித்தேன். வாழ்க்கையே இருளில் சூழ்ந்து விட்டது என்று எண்ணியத் தருணத்தில் எனது தாயார் மற்றும் மனைவியின் தூண்டுதலிலும் ஆதரவிலும் கால ஓட்டத்தில் மன வலிமை பெற்று தனது கனவுகளை நனவாக்க பல அரிய முயற்சிகளை எடுக்கத் தொடங்கினேன்,” என்றார்.
கலைச்செல்வனின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த சுயத் தொழிலில் ஈடுப்பட தனது குடும்பத்தார் ஊக்குவித்ததாகக் கூறினார். கடந்த ஆறு ஆண்டுகளாக மளிகைக் கடை வியாபாரத்தில் ஈடுப்பட்டு வெற்றிநடை போட்டு வருவதாக முத்துச் செய்திகள் நாளிதழ் நிருபர் மேற்கொண்ட நேர்காணலின் போது அகம் மகிழ கூறினார்.
“மேலும், தனது வியாபாரத்தை பிற துறைகளில் தொடங்க வேண்டும்
என்ற எண்ணத்தில் வாகனம் கழுவும் மையம் ஆரம்பிக்க எண்ணினேன். அதற்கானப் பிரதான இடத்தைத் தேடும் வேட்கையில் கம்போங் பெர்லிஸ் சாலையின் அருகில் ஓர் இடத்தை அடையாளம் கண்டதாகக் கூறினார்.
“இந்த இடத்தில் வாகனம் கழுவும் மையத்தை அமைக்க இணக்கம் கொண்டு அந்த முயற்சியில் ஈடுப்பட்டேன். மாநில அரசிற்குச் சொந்தமான இந்நிலத்தில் வாகனக் கழுவும் மையம் அமைக்க செபராங் பிறை மாநகர் கழக அனுமதிக்காக விண்ணப்பித்தேன். நான்கு ஆண்டுகளாக எனது விண்ணப்பம் பல முறை நிராகரிக்கப்பட்டு இறுதியில் பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினரின் உதவியுடன் கிடைக்கப்பெற்றேன்,” என்றார்.
பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் சத்தீஸ் முனியாண்டி மாநில அரசிற்குச் சொந்தமான இந்த இடத்தை வாடகைக்கு ஒவ்வொரு வருடமும் அதன் குத்தகையைப் புதுப்பிக்கும் பரிந்துரையின் கீழ் பெறுவதற்கு உதவிபுரிந்தார். இந்நிலத்திற்கான அனுமதி கிடைத்தப் பின்னர் ஆறு மாத காலவரையறையில் வாகனம் கழுவும் மையம் அமைப்பதற்கான மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
கடந்த மார்ச்,23 அன்று பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் சத்தீஸ் முனியான்டி ‘Autoshine Car Wash’ எனும் வாகனம் கழுவும்
மையத்தை அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தார்.
“சிறுதொழில் வியாபாரத்தில் ஈடுப்படும் என்னைப் போன்ற இளைஞருக்கு இம்மாதிரியான உடனடி உதவிகளை நல்கும் சட்டமன்ற உறுப்பினர் சத்தீஸ் அவர்களின் சேவைக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.
இம்மாதிரியான உதவிகள் வாழ்க்கையில் சாதிக்க விரும்பும் இளைஞர்களுக்குப் பெரும் தூண்டுகோலாக அமையும்,” என கலைச்செல்வன் தெரிவித்தார்.
வாகனம் கழுவும் மையத்தில் இருந்து கிடைக்கப்பெறும் இலாபத்தில் ஒரு பாதியை கலைச்செல்வன் தொற்றுவித்த ‘பட்டர்வொர்த் ரெந்ஜர்ஸ் காற்பந்து’ குழுவின் பயிற்சிகள், போட்டிகள் ஏற்று நடத்தப் பயன்படுத்துவதாக, கூறினார்.
இளைஞர்கள் தவறான பாதையில் செல்வதிலிருந்து விடுப்படவும் நேரத்தை பயனுள்ள வழிகளில் செலவிடும் நேக்கத்தில் இக்காற்பந்து குழுவை உருவாக்கியதாகக் கூறினார். தற்போது இக்குழுவில் 13 முதல் 17 வயது வரம்பு கொண்ட இடைநிலைப்பள்ளியைச் சேர்ந்த 80 மாணவர்கள் இணைந்துள்ளனர். நான்கு பயிற்சியாளரின் உதவியுடன் இந்திய சமூகத்தின் வளர்ச்சிக்கு உதவும் உன்னத எண்ணத்தில் இதனை நடத்துவதாகக் கலைச்செல்வன் சொன்னார்.
இந்திய சமூகத்தினர் விளையாட்டுத் துறையிலும் வெற்றிநடைப் போட வேண்டும் என்ற எண்ணத்தையும் பதிவு செய்தார்.
“இதனிடையே, அரசு தேர்வில் சிறப்பு தேர்ச்சி பெறாத மாணவர்கள் சிறுதொழில் ஈடுப்பட முனைப்புக் காட்ட வேண்டும். வாழ்க்கையில் வெற்றிப் பெற உதவிகள் பெறவும் கேட்கவும் தயங்கக் கூடாது. முயற்சி செய்தால் கண்டிப்பாக வெற்றி நிச்சயம்,” என கலைச்செல்வன் இளைஞர்களுக்கு வலியுறுத்தினார்.
“Autoshine Car Wash” தினமும் காலை 8.00 முதல் இரவு 8.00 வரை வாடிக்கையாளர்களுக்குத் திறந்திருக்கும். இங்கு ஒவ்வொரு சேவைக்கு ஏற்றாற்போல ரிம15 முதல் ரிம175 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த வாகனம் கழுவும் மையத்தில் பல்லின மக்களின் ஆதரவு சிறப்பாக இருப்பதை முத்துச் செய்தி நாளிதழ் மேற்கொண்ட கண்ணோட்டத்தில் அறிய முடிந்தது.