செபராங் பிறை – செபராங் பிறை மாநகர் கழகம் (எம்.பி.எஸ்.பி) செபராங் பிறை பகுதியில் வசிப்பவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்காக உள்ளூராட்சி அதிகாரத்தின் கீழ்
பழைய செயல்முறைகள் பின்பற்றப்படாது.
மேயர் டத்தோ ரோசாலி மொஹமட் இன்று காலையில் நடைபெற்ற எம்.பி.எஸ்.பி மாநகர தின கொண்டாட்டத்தின் முதலாம் ஆண்டு நிறைவு விழாவில் மாநில முதல்வர் சாவ் கொன் யாவ் மற்றும் ஆட்சிக்குழு உறுப்பினர் ஜெக்டிப் சிங் டியோ முன்னிலையில் இவ்வாறு உறுதிமொழி அளித்தார்.
ஒரு மாநகரமாக அங்கீகரிக்கப்பட்ட ஓராண்டு கால (16 செப்டம்பர் 2019 – 19 செப்டம்பர் 2020) நிறைவையொட்டி, காலாவதியான நடைமுறைகளை அகற்றவும், நிதி நிலையை வலுப்படுத்துவதற்கான செயல்முறைகளைச் சுருக்கவும், நகர்ப்புற பொருளாதாரத்தை உயர்த்தவும் செபராங் பிறை குடியிருப்பாளர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும் எம்.பி.எஸ்.பி ‘வணிக செயல்முறை மறுசீரமைப்பு’ திட்டத்தை அமல்படுத்தியது.
ரோசாலி கருத்துரைக்கையில், சமீபத்தில் மாநில மக்கள் கோவிட்-19 தொற்றுநோய் தாக்கத்தால் பாதிக்கப்படுவதால் எம்.பி.எஸ்.பி நிர்வாக அமைப்பை பெரிதும் மாற்றம் செய்ததாக கூறினார்.
அவற்றில், வளாக உரிமங்கள் மற்றும் விளம்பரங்களுக்கான விண்ணப்பங்களின் முழுமையான ஆவணங்களை சமர்ப்பிப்பவர்களுக்கு உடனடியாக ஒப்புதல் மற்றும் உரிமங்களை வழங்குதல் ஆகியவை அடங்கும்.
” இதனிடையே, எம்.பி.எஸ்.பி 1,000 க்கும் மேற்பட்ட வர்த்தகர்களின் நலனுக்காக குறிப்பாக குறைந்த வருமானம் பெறும் பி 40 வியாபாரிகளுக்கு 25 புதிய சாலையோர அங்காடி வியாபார இடங்களை அடையாளம் கண்டுள்ளது.
” கோவிட்-19 தொடங்குவதற்கு முன்பு 826 அங்காடி வியாபாரிகளுக்கு உரிமங்கள் வழங்கப்பட்டன,” என்று அவர் கூறினார்.
மாநில முதல்வர் மேதகு சாவ் கொன் யாவ் மாநகர் தினக் கொண்டாட்ட நிகழ்வை துவக்கி வைத்த போது, ரோசாலி தனது நிர்வாகத்தின் மூலம் தரத்தை மேம்படுத்துவதில் எடுத்த முயற்சிகளைப் பாராட்டினார்.
“பினாங்கு2030 கொள்கையின் கீழ் செபராங் பிறையை குறைந்த கார்பன் நகரமாகவும், அறிவார்ந்த நகரமாகவும் மாற்றுவதற்கு தொடங்கப்பட்டுள்ள முதன்மை திட்டங்கள்
முறையாக செயல்படுத்தபட்டு வருகிறது. குறிப்பாக இங்குள்ள மக்களுக்கு சிறப்பான மற்றும் தரமான சேவைகளை ஏற்படுத்துவதன் மூலம் வாழ்க்கை தரம் மேம்படுத்தப்படும் என்று மாநில அரசு நம்புவதாக”, என மாநில முதல்வர் தமது வரவேற்புரையில் இவ்வாறு குறிப்பிட்டார்.
இந்நிகழ்ச்சியில், மாநில முதல்வர் சாவ், ஆட்சிக்குழு உறுப்பினர் ஜெக்டிப் மற்றும் ரோசாலியுடன் சேர்ந்து பொருளாதார மேம்பாட்டு பயணத் திட்ட சுற்றறிக்கை ஆவணத்தையும் தொடங்கி வைத்தனர். இத்திட்டம் எம்.பி.எஸ்.பி- யின் ஒரு தசாப்த காலம் அதாவது 2030-ஆம் ஆண்டு வரை திடக்கழிவு நிர்வாகத்தில் எம்.பி.எஸ்.பி கொள்கையின் செயல்பாட்டை சித்தரிக்கிறது.
செய்தியாளர்களிடம் பேசிய ரோசாலி, தொடங்கப்பட்டுள்ள ‘செபராங் பிறை சுற்றறிக்கை பொருளாதார சாலை வரைபடம்’ மூன்று முதன்மை துறைகளை உள்ளடக்கும், அதாவது மக்கள் தொகை, குறிப்பாக பி 40 குழுவினர்; தொழில்நுட்பம் தொடர்பான தொழில்கள் மற்றும் பல்கலைக்கழக ஆராய்ச்சி பிரிவு ஆகியவை அடங்கும் என்றார்.
“கோவிட்-19 தொற்றுநோய் தாக்கத்தினால், மக்களின் பொருளாதாரம் மீட்டெடுக்கப்பட வேண்டும்; ஆதலால், இந்த ‘சாலை வரைபடம்’ செப்டம்பர் மாதத்திலே துரிதப்படுத்தப்படுகிறது.
“உணவுத் துறையும் விவசாயத் துறையும் மற்ற பொருளாதார அச்சுறுத்தல்களால் எளிதில் பாதிக்கப்படுவதில்லை, ஒரு நிலையான பொருளாதாரத்திற்கு பங்களிப்பாளராக மாற்றுவதன் மூலம் நாம் (எம்.பி.எஸ்.பி) ஒரு நிலையான பொருளாதாரத்தை நோக்கி செல்கிறோம், ”என்று அவர் விளக்கினார்.
2020-ஆம் ஆண்டு செபராங் பிறை மாநகர் கழக தினம் கொண்டாட்டம் அக்கழக அமலாக்க 30 உறுப்பினர்களை உள்ளடக்கிய அணிவகுப்பு நிகழ்வோடு தொடங்கியது.