செபராங் ஜெயா – செபராங் பிறை மாநகர் கழகம் (எம்.பி.எஸ்.பி) அடுத்த ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் மற்றும் நீர்த்தேக்கங்களின் பராமரிப்புக்காக ரிம7 மில்லியன், அதேவேளையில் பம்ப் ஹவுஸ் பராமரிப்பு மற்றும் வெள்ளக் கட்டுப்பாட்டுக்காக மேலும் ரிம1.78 மில்லியன் நிதி ஒதுக்கியுள்ளது.
எம்.பி.எஸ்.பி மேயர் டத்தோ அசார் அர்ஷாட், இந்த ஒதுக்கீடு செபராங் பிறை மாநகர் கழக மேம்பாடு மற்றும் வாழ்வாதாரத்தை மேலும் அதிகரிக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
மேலும், எம்.பி.எஸ்.பி வடிகால் மேம்பாட்டு நிதியம் ஒதுக்கீட்டில் இருந்து வெள்ளக் கட்டுப்பாட்டுத் திட்டங்கள் மற்றும் பராமரிப்புக்காக ரிம7.74 மில்லியன் ஒதுக்கீட்டைப் பயன்படுத்தும், என்றார்.
“இந்த வடிகால் நிதியம் செபராங் பிறை பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பிரச்சனையைச் சமாளிக்கவும், சொத்துடைமைகளுக்கு சேதம் ஏற்படுவதைத் தவிர்க்கவும், திறனற்ற நீர்ப்பாசன முறைகளின் சிக்கலைக் குறைக்கவும் பயன்படுத்தப்படும்,” என்று அவர் எம்.பி.எஸ்.பி-இன் வரவு செலவு தாக்கல் செய்யும் போது இவ்வாறு விளக்கமளித்தார்.
அதுமட்டுமின்றி, பிறை ‘பி’ பம்ப் ஹவுஸ் மற்றும் தாமான் மங்கா பம்ப் ஹவுஸ் ஆகியவற்றில் அமைக்கப்பட்டிருக்கும் குப்பை சுத்திகரிக்கும் இயந்திரத்தை மாற்றுவதற்கு ரிம1.5 மில்லியன் ஒதுக்கப்பட்டிருப்பது, அப்பகுதியைச் சுற்றியுள்ள மக்களின் சுகாதாரம் மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
2024 ஆம் ஆண்டில், செபராங் பிறை மாநகர் கழகம் சாலை பராமரிப்பு மானியத்தில் (MARRIS) இருந்து ரிம148.98 மில்லியன் நிதியைச் சாலை சுத்தம் செய்யும் பணிகளுக்காகச் செலவிடப்படும்.
உள்ளூர் அரசாங்க (PBT) செலவின மதிப்பீட்டை முன்வைக்கும் போது, எம்.பி.எஸ்.பி மேயர் டத்தோ அசார் அர்ஷாட், அடுத்த ஆண்டு தனது நிர்வாகம் தொழிற்துறைப் பகுதி பராமரிப்புப் பணிகளுக்காக ரிம1 மில்லியனையும், புல்வெளி வெட்டும் இயந்திரங்கள் வாங்குவதற்கு ரிம75,000 கூடுதலாகவும் ஒதுக்கியுள்ளது, என்றார்.
“செபராங் பிறை வட்டாரத்தின் தூய்மையை உறுதி செய்ய புலாவ் புரோங் குப்பை கிடங்கு ‘டிப்பிங்’ கட்டணம் ; அம்பாங் ஜாஜாரில் குப்பை சேகரிப்புப் போக்குவரத்து (ரிம5.0 மில்லியன்); நிலையான திடக்கழிவு மேலாண்மை சேவைகளுக்கான கட்டணம் (ரிம0.41 மில்லியன்) மற்றும் மின்னணு கழிவுகளை அகற்றுதல் (ரிம25,000) ஆகியவை பிற செலவினங்களின் பட்டியலின் கீழ் இடம்பெறுகிறது,” என்று மேயர் மேலும் விவரித்தார்.
முன்னதாக, 2024 ஆம் ஆண்டிற்கான எம்.பி.எஸ்.பி-இன் மொத்த செலவின மதிப்பீடு ரிம38,828,700 ஆகும். இதில் ரிம378,492,350 பற்றாக்குறை நிலவும் என கணக்கிடப்படுகிறது.