ஜார்ச்டவுன் – பினாங்கு மாநகர் கழகத்தின் (எம்.பி.பி.பி) புதிய செயலாளராக பொறியியல் துறையின் தலைவர் இராஜேந்திரன் நியமனம் செய்வதாக முதல்வர் மேதகு சாவ் கொன் யாவ் அறிவித்தார்.
இன்று நடைபெற்ற நடைப்பயணம்(City walk) நிகழ்ச்சியில் கலந்து கொண்டப் பின்பு செய்தியாளர் சந்திப்புக் கூட்டத்தில் இவ்வாறு அறிவித்தார்.
முன்னாள் செயலாளர் டத்தோ அட்னான் முகமது ரசாலி அவர்கள் கடந்த 34 வருடங்களாக மாநகர் கழகத்தில் ஆற்றிய சேவைக்கும் பங்களிப்புக்கும் மாநில முதல்வர் நன்றித் தெரிவித்தார். மேலும், அவர் ஒரு பொறுப்புணர்ச்சி மிக்க ஊழியர் ஆவார். மாநகர் கழத்தின் மேம்பாட்டுக்குத் தன்னால் இயன்ற சேவை வழங்கியது பாராட்டக்குரியது.
இராஜேந்திரன்,59 கடந்த 1985 ஆம் ஆண்டு முதல் பினாங்கு மாநகர் கழகத்தில் சேவையாற்றி வருகிறார். 36 வருடங்களாக இம்மாநகர் கழகத்தில் பணிபுரியும் இவர் எம்.பி.பி.பி-இன் பின்புலத்தை நன்கு அறிவார். அதுமட்டுமின்றி, எம்.பி.பி.பி வளர்ச்சிக்கு ஓர் ஆற்றல் மிக்க செயலாளராக சிறந்த சேவை வழங்குவார் என முதல்வர் நம்பிக்கைத் தெரிவித்தார்.
இன்று முதல் மாநகர் கழகத்தின் புதிய செயலாளராகப் பதவியேற்கும் இராஜேந்திரன் தாம் ஆற்றிய சேவைக்குக் கிடைத்த அங்கீகாரமாகக் கருதுவதாகக் கூறினார்.
மாநில முதல்வர், ஆட்சிக்குழு உறுப்பினர்கள், மாநகர் கழக மேயர் டத்தோ இயூ துங் சியாங் மற்றும் கவுன்சிலர்கள் தன் மீது கொண்ட நம்பிக்கையை சிறந்த சேவை வழங்கி நிலைநிறுத்துவதாக இராஜேந்திரன் நம்பிக்கைத் தெரிவித்தார்.
“மாநாகர் கழக செயலாளராக பல சவால்களை எதிர்நோக்க வேண்டியிருக்கும். எனவே, பொறுப்பு, ஆற்றல் மற்றும் விடாமுயற்சியுடன் மாநகர் கழக முன்னேற்றத்திற்குச் சேவையாற்ற இலக்கு கொண்டுள்ளதாக,” கூறினார்