எஸ்கேப் ‘ESCAPE’ என்னும் இயற்கை சார்ந்த விளையாட்டு மையம் திறப்பு விழாக் கண்டது

67049_560289507321837_669135835_n

எஸ்கேப் விளையாட்டு மையத்தின் முற்புறத்தைப் படத்தில் காணலாம்

 

மூன்று ஆண்டுகளுக்கு முன் கட்டத் தொடங்கப்பட்ட எஸ்கேப் என்னும் சவால்மிக்க விளையாட்டுத் தளம் கடந்த 8-ஆம் திகதி மாண்புமிகு முதல்வர் லிம் குவான் எங் அவர்களால் அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது. திறப்பு விழாக் கண்ட எஸ்கேப் விளையாட்டுத் தளத்தின் ஒரு பகுதியான சாகச விளையாட்டுத் தளம் 7 ஏக்கர் நிலத்தில் ரிம18 மில்லியன் செலவில் அமைக்கப்பட்டுள்ளது. இத்தளம் இன்னும் இரண்டு பகுதிகளைக் கொண்டுள்ளது. அது, நீர் விளையாட்டுத் தளமும் மர உச்சி விடுதிகளுமாகும். ஆக மொத்தம் ரிம200 மில்லியன் பொருட்செலவில் 44 ஏக்கர் நிலத்தில் இந்த எஸ்கேப் விளையாட்டு மையம் நிர்மாணிக்கப்பட்டு வருகிறது.

இவ்விளையாட்டு மையத்தின் தலைமை நிர்வாகியான திரு சிம் சூ கெங் சிறு வயதில் தாம் பெற்ற அனுபவங்களைக் கொண்டுதான் இந்த சவால்மிக்க விளையாட்டுத் தளத்தை அமைத்திருப்பதாகக் கூறினார். இன்றைய நவீன உலகக் குழந்தைகள் குண்டுச் சட்டியில் குதிரை ஓட்டுவதுபோல் பி எஸ் திரி ‘ps3’ , ஐ ஃபோன் ‘iphone’, ஐ பேட் ‘ipad’ , கணினி ஆகியவற்றில் உள்ள தொழில்நுட்ப விளையாட்டுகளை விளையாடி ஒரே வட்டத்திற்குள் சிக்கிக் கிடக்கின்றனர். இது இவர்களின் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் கேடு விளைவிக்கக்கூடிய செயலாக அமைகிறது என்றால் அது மிகையாகாது. எனவேதான், இந்த விளையாட்டு மையம் பிள்ளைகள் இயற்கையோடு ஒன்றிணைந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள ஏதுவான வகையில் மரம் ஏறுதல், குரங்கு நடவடிக்கை, உயரத்திலிருந்து குதித்தல், பலகை வீடேறுதல், தென்னை மரம் ஏறுதல், சறுக்குப் பந்தயம் போன்ற பல ரசிகரமிக்க நடவடிக்கைகளையும் சவால்மிக்க விளையாட்டுகளையும் அமைத்துள்ளதாகத் திரு சிம் கூறினார்.

உலக மக்களை ஆரோக்கியமாக வாழ ஊக்குவிக்கவும் பசுமையை ஆதரிக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் திரு சிம்மின் சிந்தனையில் ஊற்றெடுத்த திட்டம்தான் இந்த எஸ்கேம் தீம் பார்க் ஆகும். திரு சிம் சூ கெங் உலக புகழ்மிக்க பல  ‘Theme Park’ தீம் பார்க்களைக் கட்டியவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. அண்மையில் ஜோகூரில் தொடங்கப்பட்ட லெகொ லேன் ‘LegoLand’ இவரின் ஆக்கத்தில் அமைந்த மாபெரும் விளையாட்டு மையமாகும்.

சுற்றுலாப் பயணிகளை வெகுவாகக் கவர்ந்த தெலுக் பகாங் வட்டாரத்தில் அமையப்பெற்றுள்ள இவ்விளையாட்டுத் தளம் பினாங்கின் மிகப் பெரிய சுற்றுலாத் தளமாக அமைவதுடன் உள்ளூர் மக்களுக்கு அதிக வேலை வாய்ப்பை ஈட்டித் தரும் மையமாகவும் விளங்குகிறது. தற்போது 114 பணியாளர்கள் வேலை செய்யும் இவ்விளையாட்டுத் தளத்தில் 80% மக்கள் உள்ளூர் மக்களான தெலுக் பகாங் மாவட்டத்தைச் சேர்ந்தவர்களாவர். மற்ற இரு பகுதிகளின் நிர்மாணிப்புப் பணிகளும் நிறைவடைந்ததும் சுமார் 500 பேர்களுக்கு வேலை வாய்ப்புக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முழுக்க முழுக்க அந்நிய முதலீடுகளைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ள இந்த விளையாட்டுத் தளம் நாட்டின் புகழ்பெற்ற விளையாட்டு மையமாகத் திகழும் என முதல்வர் லிம் தம் உரையில் நம்பிக்கை தெரிவித்தார். இவ்விளையாட்டு மையத்தைப் பற்றி மேல் விபரங்களுக்கு www.escape.my என்னும் இணையத் தளத்தை வலம் வாருங்கள். உடல் ரீதியிலான நடவடிக்கைகளுக்கு எஸ்கேப் பூங்காவிற்கு படையெடுங்கள்.