செபராங் ஜெயா – செபராங் பிறை மாநகர் கழகம் (எம்.பி.எஸ்.பி) 2022 ஆம் ஆண்டின் பொருளாதார மேம்பாட்டுச் சுற்றறிக்கையில் (circular economy) கரிமக் கழிவு, உயிரியல் கழிவு மற்றும் நெகிழிக் கழிவு மீது கவனம் செலுத்தப்படும்.
எம்.பி.எஸ்.பி மேயர், டத்தோ ரோசாலி மொஹமட் செபராங் பிறை மக்களுக்குப் புதிய பொருளாதாரத்தை உருவாக்குவதைத் தவிர தற்போதைய தேவைகளின் அடிப்படையில் மூன்று வகையான கழிவுகளை நிர்வகிப்பதில் கவனம் செலுத்துவதாகக் கூறினார்.
“ஓர் ஆண்டுக்கு 45,000 மெட்ரிக் டன்கள் உற்பத்தியாகும் உயிரியல் கழிவுகளில், 4,850 மெட்ரிக் டன்கள் அல்லது 10.78 சதவிகிதம் மட்டுமே மறுசுழற்சி செய்யப்படுகிறது.
“தொழில்துறைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகளுக்காக, உற்பத்தி செய்யப்பட்ட 1,035,300 மெட்ரிக் டன்களில், மொத்தம் 682,836 மெட்ரிக் டன்கள் அல்லது 65.95 சதவீதம் ஒரு வருடத்தில் மறுசுழற்சி செய்யப்படுகின்றது.
“மேலும், 321,641மெட்ரிக் டன் ஆண்டுதோறும் உற்பத்தி செய்யப்படுவதில் 75,871
மெட்ரிக் டன் (23.59%) வீட்டுக் கழிவாகும்.
“பொருளாதார மேம்பாடு சுற்றறிக்கையின் மூலம் புதிய பொருளாதாரத்தை உருவாக்க முடியும் என்பதில் இக்கழகம் கவனம் செலுத்தும்,” என எம்.பி.எஸ்.பி வளாகத்தில் நடைபெற்ற சமூக விருது வழங்கும் விழாவில் இவ்வாறு கூறினார்.
“பொருளாதார சுற்றறிக்கை அல்லது சுழற்சிப் பொருளாதாரம் என்பது சுற்றுச்சூழலில் ஏற்படும் தவறுகளை சரிசெய்வது மட்டுமல்ல, அது தொழில்துறை, துறைகள் மற்றும் அன்றாட வாழ்வில் பெரும் வாய்ப்புகளையும் நேர்மறையான விளைவுகளையும் கொண்டு வர முடியும் என்பதற்கான ஆதாரங்களாக அமைகிறது.
“எனவே, எம்.பி.எஸ்.பி உடன் ஒன்றிணைந்து செயல்பட தொழில்துறை நிறுவனங்கள், குறிப்பாக தங்களுடைய சொந்த ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு (R&D) வசதிகளைக் கொண்டவர்கள் அழைக்கப்படுகின்றனர்.
“தொழிற்சாலை தயாரிப்புகளின் உற்பத்திகளை சம்பந்தப்பட்ட அல்லது பிற தொழில்களில் எவ்வாறு மூலப்பொருளாக மீண்டும் பயன்படுத்தலாம் என்பது பற்றிய ஆய்வை மேற்கொள்வதும் இதில் அடங்கும்.
“இதன் மூலம் 2022 ஆம் ஆண்டில், எம்.பி.எஸ்.பி, செபராங் பிறையில் உள்ள கவுன்சிலர்கள் மற்றும் மாநில சட்டமன்ற உறுப்பினர்களின் உதவியுடன் Extended Producer Responsibility(EPR) கொள்கையை உருவாக்குவதற்கான ஆய்வை மேற்கொள்ள தொழில்துறையுடன் ஒத்துழைப்பு நல்கும்.
“மேலும், சுற்றுச்சூழலுக்கு உகந்த கொள்கையை உருவாக்குவது தொழில்துறையைப் பாதிக்காது, ஆதலால் உற்பத்தி செய்யப்பட்டவை பல்வேறு வடிவங்களில் மீண்டும் வாங்கப்படும்,” என்று அவர் விளக்கமளித்தார்.
Circular Economy Community Award பொருளாதார சுற்றறிக்கை சமூக விருதளிப்புப் போட்டியில் கலந்து கொள்ள விரும்பும் சமூக அமைப்புகள் 50 வீடுகளுக்கு குறையாமல் இருக்கும் குடியிருப்புகள் கொண்டிருக்க வேண்டும், அதேவேளையில் 300-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் கொண்ட
தொழில்துறை உரிமையாளர்கள் இதில் பங்கேற்கலாம்.
மொத்தமாக பெறப்பட்ட 24 விண்ணப்பங்களில் 17 சமூக அடிப்படையிலான இயக்கங்கள் மற்றும் ஏழு தொழில்துறை நிறுவனங்கள் இடம்பெறுகின்றன.
இப்போட்டியின் வைர விருது வெற்றியாளர் பரிசு & ரிம500 ரொக்கம், பிளாட்டினம் விருது (பரிசுகளுடன் ரிம400), தங்க விருது (பரிசுகளுடன் ரிம300), வெள்ளி விருது (பரிசுகளுடன் ரிம200) மற்றும் வெண்கல விருது (பரிசுகளுடன் ரிம100) என பெற்றுக் கொண்டனர்.
வைர விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்று வெற்றியாளர்கள் கோல்டன் ஹைவே ஆட்டோசிட்டி சென் பெர்ஹாட், தாமான் பாகான் லாலாங் சுற்றுச்சூழல் வள மையம் மற்றும் பெர்மாத்தாங் நிபோங், செபராங் பிறை சுற்றுச்சூழல் கூட்டுறவு சங்கம் ஆகியோர் வாகை சூடினர்.