பினாங்கு மாநில அரசு, ஜாலான் மெகாசினில் அமையப்பெற்றுள்ள ஒக்டபஸ் பிரிட்ஜ் என்றழைக்கப்படும் சிலந்தி மீன் வகை பாதசாரிப் பாலத்தை இடிக்க முடிவெடுத்துள்ளது. ஜாலான் மெகாசினில் கடந்த 20 ஆண்டு காலமாகப் பயன்படுத்தப்பட்டு வந்த இப்பாதசாரிப் பாலத்தை இடித்துவிட்டு அங்கு போக்குவரத்து விளக்கு முறையை அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது. இதன்வழி மக்கள் படிகளில் ஏறி சிரமப்படாமல் போக்குவரத்து விளக்கைக் கொண்டு இயங்கும் சாலை கடக்கும் பாதையைப் பயன்படுத்தலாம்.
மக்கள் இப்பாலத்தை அதிகம் பயன்படுத்துவதில்லை என்பதால் அரசு இம்முடிவுக்கு வந்துள்ளது என்று அண்மையில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் மாண்புமிகு பினாங்கு முதல்வர் லிம் குவான் எங் தெரிவித்தார். அதுமட்டுமல்லாது, குறிப்பாக இரவு நேரங்களில் இப்பாலத்தைப் பயன்படுத்துவது பாதுகாப்பில்லை என மேலும் கூறினார்.
இப்பாலத்தைப் பார்வையிட வந்திருந்த முதல்வர் லிம் உடல் ஊனமுற்றவர்கள் இங்குள்ள சாலைகளைக் கடக்க வேண்டிய நிலையில் இப்பாலத்தின் படிகளில் ஏற எதிர்கொள்ளும் சிரமத்தையும் தாம் கருத்தில் கொள்வதாகத் தெரிவித்தார். ஒரு மாதக்காலக் கண்காணிப்பைத் தொடர்ந்து இது குறித்து பொது மக்களின் கருத்துகளைப் பெற்ற பின்னர் இப்பாலத்தை இடிக்கும் பணி மேற்கொள்ளப்படும் என்றார்.
பொதுமக்கள், இத்திட்டத்தைக் குறித்து rajendran @ mppp.gov.my என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் கருத்துகளை அனுப்பி வைக்கலாம் அல்லது பினாங்கு நகராண்மைக் கழகத்திற்கு நேரடியாகச் சென்றும் கருத்துத் தெரிவிக்கலாம்.