ஜார்ச்டவுன் – பினாங்கு இந்து அறப்பணி வாரிய ஏற்பாட்டில் கோவில் நிர்வாகக் குழுத் தலைவர்களுக்கு நியமனக் கடிதம் வழங்கப்பட்டது. இந்த அறப்பணி வாரியத்தின் கீழ் செயல்படும் ஆலயப் பட்டியலில் ஒன்பது ஆலயங்களுக்கு அதிகாரப்பூர்வ நியமனக் கடிதம் வழங்கப்பட்டது.

அன்றைய தினத்தன்று, லெபுக் குயின், ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில், ஆலயத் தலைவராக ஆர்.அரசு; தண்ணீர்மலை ஸ்ரீ பாலதண்டாயதுதாபனி ஆலயத் தலைவராக டத்தோ ஸ்ரீ கே.குமாரேந்திரன்; ஸ்ரீ குஞ்ச் பிஹாரி ஆலயத் தலைவராக ஆர் அனல் ஷர்மா; ஸ்ரீ சக்தி விநாயகர் கோவில் தலைவராக க.ராஜா; பட்டர்வொர்த், ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத் தலைவராக V L கணேசன்; பிறை, ஸ்ரீ செல்வ விநாயகர் கோவில் தலைவராக ஸ்ரீ விஜயநாயகம்; பாகான் அஜம், தேவி ஸ்ரீ வீரபத்ர மகா காளியம்மன் ஆலயத் தலைவராக நாகேஸ்வர ராவ்; நிபோங் திபால், தேவி ஸ்ரீ அன்னை த்ரோபதி அம்மன் ஆலயத் தலைவராக சுப்ரமணியம்; ஸ்ரீ ராமர் கோவில் தலைவராக வில்லந்தேரன் நியமிக்கப்பட்டனர். இந்து அறப்பணி வாரியத் தலைவர் ஆர்.எஸ்.என் இராயர் அனைத்து ஒன்பது ஆலயத் தலைவர்களுக்கும் நியமனக் கடிதம் எடுத்து வழங்கினார்.
“ஆலயம் என்பது மதம் மற்றும் சமயம் சார்ந்த தலமாக மட்டுமே செயல்படாமல் மாணவர்களின் கல்வி நலனுக்காக குருகுலமாக அமைக்கத் திட்டமிட வேண்டும். மேலும், சமூகத்தின் முன்னேற்றத்திற்கு வழிகாட்டும் மையமாகவும் செயல்பட வேண்டும்,” என இந்து அறப்பணி வாரியத் துணை தலைவரான செனட்டர் டாக்டர் லிங்கேஸ்வரன் வலியுறுத்தினார்.
“தேர்ந்தெடுக்கப்பட்ட ஆலயத் தலைவர்கள் ஆலய நிர்வாகத்தைத் திறன்பட வழிநடத்த வேண்டும். சமூக முன்னேற்றத்தை முன்னிறுத்தி சேவை செய்ய வேண்டும்.
“இந்து அறப்பணி தலைமைத்துவத்தின் கீழ் செயல்படும் ஆலயங்கள் சம்பந்தப்பட்ட ஆலயங்களை நிர்வகிக்கப் பல ஆக்கப்பூர்வமான திட்டங்களைச் செயல்படுத்த முனைப்புக் காட்ட வேண்டும். இதன் வழி, ஆலயத்தின் செலவுகளை அதன் நிர்வாகம் நிர்வகிக்க முடியும்.
“எனவே, இந்து அறப்பணி வாரியத்தின் நிதியைக் கொண்டு இன்னும் கூடுதலான மாணவர்களுக்குக் கல்வி நிதியுதவி மற்றும் பொது மக்களுக்கு சமூகநல திட்டங்களுக்கு உதவ முடியும்,” என்றார்.
மேலும், ஆலயத் தலைவர்கள் மற்றும் நிர்வாகத்தினர் உள்ளூர் மக்களுடன் நட்புறவு கொள்வது அவசியமாகும். இதன் மூலம், நல்லிணக்கத்தைப் பேணுவதோடு ஒற்றுமையையும் நிலைநிறுத்த முடியும் என லிங்கேஸ்வரன் கூறினார்.
நியமனம் பெற்ற அனைத்து ஒன்பது ஆலயத் தலைவர்களுக்கும் நல்வாழ்த்துகள். இந்து சமூகத்திற்கு சிறந்த சேவையை வழங்க வரவேற்கப்படுகின்றனர் என செனட்டர் கேட்டுக்கொண்டார்.
பினாங்கு இந்து அறப்பணி வாரியம் கல்வி, சுகாதாரம் & சமூகநலன் முன்னேற்றத்திற்குப் பல திட்டங்கள் செயல்படுத்துகிறது. இந்துக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதோடு வளர்ச்சியடைந்த ஒரு சமூகமாக உருமாற்றம் காண சமூகநலன் மற்றும் கல்வி கூறுகளில் கூடுதல் கவனம் செலுத்தப்படுகிறது என பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் துணைத் தலைவர் செனட்டர் டாக்டர் ஆர்.ஏ லிங்கேஸ்வரன் தெரிவித்தார்.