பெர்மாத்தாங் பாவ் – பினாங்கு மாநிலத்தில் உள்ள ஒன்பது பொது வீடமைப்புத் திட்டங்களில் (பி.பி.ஆர்) ரிம55,000 மதிப்பிலான 1,000 உணவுக்கூடைகள் விநியோகிக்கப்பட்டன என்று
வீட்டுவசதி, உள்ளாட்சி மற்றும் நகர்ப்புற & கிராமப்புற திட்டமிடல் ஆட்சிக்குழு உறுப்பினர், ஜெக்டிப் சிங் டியோ கூறினார்.
பினாங்கு மாநில வீட்டுவசதி வாரியத்தின் (LPNPP) முன்முயற்சியில்
கோவிட்-19 தொற்றுநோய் தாக்கத்தால் பொருளாதார ரீதியில் பாதிப்புக்குள்ளான இலக்கு குழுவினருக்கு உதவும் பொருட்டு உணவுக் கூடைகள் வழங்கப்படுகின்றன, என குறிப்பிட்டார்.
“கடந்த 2021 அக்டோபர்,18 அன்று, இந்த உணவுக் கூடை வழங்கும் நிகழ்ச்சி டத்தோ கெராமாட்டில் உள்ள தாமான் பிரி ஸ்கூல் அடுக்குமாடி குடியிருப்பில் நடைபெற்றது.
“இங்குள்ள இலக்குக் குழுவினருக்கு மொத்தம் 190 உணவுக் கூடைகள் விநியோகிக்கப்பட்டன,” என்று டத்தோ கெராமாட் சட்டமன்ற உறுப்பினருமான ஜெக்டிப் இங்கு அருகிலுள்ள அம்பாங் ஜாஜார் குடியிருப்பில் உணவுக் கூடை வழங்கும் நிகழ்ச்சியில் இவ்வாறு கூறினார்.
பினாங்கு மாநில வீட்டுவசதி வாரியத்தின் பொது மேலாளர் ஐனுல் ஃபாதிலாஹ் சம்சுடி அவர்களும் கலந்து கொண்டார்.
முன்னதாக, தற்போதைய சூழ்நிலையின் காரணமாக பினாங்கு மாநில வீட்டுவசதி வாரியம் செயல்படுத்திய முன்முயற்சிக்கு ஜெக்டிப் பாராட்டுத் தெரிவித்தார்.
“பினாங்கில், அம்பாங் ஜாஜார் குடியிருப்புத் தவிர, மாநில அரசு வாடகை வீடமைப்புத் திட்டம் (ஆர்.எஸ்.கே.என்) மற்றும் மக்கள் வீடமைப்புத் திட்டம் (பி.பி.ஆர்) ஆகிய மற்ற எட்டு திட்டங்களும் உள்ளன.
“ஆர்.எஸ்.கே.என் மற்றும் பி.பி.ஆர் வீடுகளின் வாடகைக் கட்டணம் மாதத்திற்கு ரிம40 முதல் ரிம100 வரை வசூலிக்கப்படும்; அதன் பராமரிப்புக் கட்டணம் மாதத்திற்கு ரிம20 முதல் ரிம72 வரை விதிக்கப்பட்டுள்ளது.
பினாங்கு மாநிலத்தில் ஆர்.எஸ்.கே.என் மற்றும் பி.பி.ஆர் வீடுகள் வழங்குவது விடுத்து மாநில அரசு தற்போது வாடகை கொள்முதல் வீடமைப்புத் திட்டம் மூலம் வீடுகள் வழங்கவும் உத்தேசிக்கிறது.
“உதாரணமாக,
வாடகை கொள்முதல் வீடமைப்புத் திட்டத்தின் முன்னொடித் திட்டமாக டேசா வவாசான் வீடமைப்புத் திட்டம் திகழ்கிறது.
“பினாங்கு மாநில வீட்டுவசதி வாரியம் இத்திட்ட செயல்பாடு குறித்து ஆய்வு செய்து இந்த விவகாரத்தை வீட்டுவசதி மற்றும் உள்ளாட்சி அமைச்சின் (KPKT) கவனத்திற்கு கொண்டு வரும்,” என்று ஜெக்டிப் நம்பிக்கைத் தெரிவித்தார்.
முன்னதாக, பினாங்கு மாநில அரசு 2017 மற்றும் 2018ஆம் ஆண்டுகளில் இம்மாநிலத்தில் உள்ள ஐந்து மாவட்டங்களை உள்ளடக்கிய பி.பி.ஆர் வீடமைப்புத் திட்டங்கள் செயல்படுத்த முன்மொழிந்துள்ளது. சமீபத்தில், வீட்டுவசதி மற்றும் உள்ளாட்சி அமைச்சர், 12வது மலேசியத் திட்டத்தில் பினாங்கில் இரண்டு பி.பி.ஆர் திட்டங்கள் நிர்மாணிக்க உறுதிபூண்டுள்ளார். மீதமுள்ள மூன்று திட்டங்கள் எதிர்கால மேம்பாட்டுத் திட்டங்களில் பரிசீலிக்கப்படும், எனவும் அறிவித்துள்ளார்.