பினாங்கு மாநில அரசு பசுமைக்கு முக்கியத்துவம் அளித்து கொண்டிருப்பதை உறுதிச்செய்யும் நோக்கில் “ஒரு மாணவர் ஒரு மரம்” நடும் பிரச்சாரத்தை அண்மையில் பிறை தோட்டத் தமிழ்ப்பள்ளியில் செபராங் பிறை நகராண்மைக் கழக உறுப்பினர்களான திரு.சத்தீஸ் முனியாண்டி மற்றும் திரு. டேவிட் மார்ஷல் ஆகியோர் ஏற்பாடுச் செய்திருந்தனர். இத்திட்டம் மூன்றாவது முறையாக நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கதாகும். இத்திட்டம் அமெரிக்காவின் எர்த் சாய்ல் மையத்தால் துவங்கப்பட்டு கானா, இந்தியா மற்றும் மலேசிய நாடுகள் இதனை பின்பற்றுகின்றன.
ஒரு மாணவர் ஒரு மரம் நடும் பிரச்சாரம் பழணியாண்டி தமிழ்ப்பள்ளி, பத்து காவான் தோட்டத் தமிழ்ப்பள்ளி மற்றும் தற்போது பிறை தோட்டத் தமிழ்ப்பள்ளியிலும் நடத்தப்பட்டதாக தமதுரையில் கூறினார் நகராண்மைக் கழக உறுப்பினர் திரு.டேவிட். இந்த இரண்டு ஆண்டுகளில் சுமார் 300-க்கும் மேற்பட்ட மரங்கள் மாணவர்களால் தத்தம் பள்ளி வளாகங்களில் நடப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.
உலக வெப்பமடைதலை குறைப்பதற்கும், பசுமையான சுற்றுச்சூழல் ஆரோக்கியமான வாழ்க்கையை வித்திடும் எனும் நோக்கத்திலும் இப்பிரச்சாரம் ஆரம்பிக்கப்பட்டதாக மேலும் விவரித்தார் திரு.சத்தீஸ். இத்திட்டத்தைத் தொடர்ந்து அடுத்தாண்டு பசுமைப் பள்ளி போட்டி பினாங்கு தமிழ்ப்பள்ளிகளிடையே நடத்த விருப்பம் கொண்டுள்ளதாகக் கூறினார். அடுத்தாண்டு மீண்டும் செபராங் பிறை நகராண்மைக் கழக உறுப்பினராக நியமிக்கப்பட்டால் தொடர்ந்து தமிழ்ப்பள்ளிகளின் வளர்ச்சிக்கு நல்ல திட்டங்களை அமல்படுத்தி ஊந்துகோளாக இருக்க இலக்கு கொண்டுள்ளதாகக் கூறினார்.
மாணவர்கள் எதிர்காலத்தில் தமிழ்ப்பள்ளி பருவக்காலத்தை நினைவுக்கூற இளம் வயதில் நடப்படும் மரங்கள் அழியாத
நினைவுகளை கொடுக்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. ஒவ்வொரு மாணவரால் நடப்படும் மரங்கள் அவர்களின் பாதுகாப்பில் இருக்கும் என்றும் இத்திட்டத்தில் தமிழ்ப்பள்ளிகளை தேர்வுச்செய்ததற்கு தமது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொண்டார் பிறை தோட்டத் தமிழ்ப்பள்ளியின் தலைமையாசிரியர் திரு.இராஜு. இத்திட்டத்தில் பிறை சமூக பாதுகாப்பு மற்றும் முன்னேற்ற கழகத் தலைவர் திரு ஸ்ரீ சங்கர், இரண்டாம் துணை முதல்வரின் சட்டமன்ற துணை அதிகாரி திரு.ஜெசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.