மலேசியாவிலேயே முதல் மிதிவண்டி ஒட்டும் மாநிலமாகப் பினாங்கு மாநிலத்தை உருவாக்கும் நோக்கில் பினாங்கு மக்கள் கூட்டணி அரசும் பினாங்கு நகராண்மைக் கழகமும் இணைந்து மற்றுமோர் சீரிய திட்டத்தை முன்மொழிந்துள்ளன. பினாங்கு முழுதினையும் மிதிவண்டி கொண்டே வலம் வர பினாங்குத் தீவு முழுவதும் 200கிமீ நீளமுள்ள மிதிவண்டிப் பாதைகள் அமைப்பதற்கான திட்டத்தை அரசு அறிமுகம் செய்திருந்தது நாம் அறிந்ததே. இதுவரை 120கிமீ நீளம் கொண்ட பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இதனைத் தொடர்ந்து, ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள பத்து மௌங்கிலிருந்து தெலுக் பகாங் செல்லும் கடலோர மிதிவண்டி பாதையின் ஒரு பகுதியை நிறைவு செய்யும் வகையில் முதற்கட்டமாக கொம்தாருடன் இணையும் குவின்ஸ் பேலிருந்து ஜார்ஜ் டவுன் நகரத்திற்குச் செல்லக்கூடிய 12.5கிமீ நீளமுள்ள கடலோர மிதிவண்டி பாதையை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளன. பினாங்கு நகராண்மைக் கழகம் பிற அரசாங்கத் துறைகளுடனும் IJM Land Berhad, Tropicana Ivory Sdn Bhd, GSD Land (M) Sdn Bhd, CP Landmark Sdn Bhd, Asia Green Group ஆகிய ஐந்து தனியார் மேம்பாட்டு நிறுவனங்களுடனும் இணைந்து இம்மிதிவண்டி பாதையை அமைக்கவுள்ளது.
இந்த முதற்கட்ட மிதிவண்டி பாதையை அமைக்க ஏறக்குறைய ரிம30 கோடி செலவாகும் எனவும் இப்பாதைத் தயாராக இரண்டு ஆண்டுகளாகும் எனவும் கணக்கிடப்பட்டுள்ளன. இச்செலவின் பெரும்பான்மையான பகுதியை 9.6கிமீ நீளமுள்ள கடலோர மிதிவண்டிப் பாதையை அமைக்கவுள்ள தனியார் மேம்பாட்டு நிறுவனங்கள் ஏற்றுக்கொள்ளும். மீதமுள்ள 2.9கிமீ கடலோர மிதிவண்டிப் பாதைகளைப் பினாங்கு நகராண்மைக் கழகம் சுங்கை பினாங்கிலிருந்து வெல்ட் கீ மற்றும் கொம்தார் வரை அமைக்கும். அவ்வகையில், பினாங்கு நகராண்மைக் கழகத்தின் 2013-ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுக் கணக்கில் மிதிவண்டி வசதிக்கான திட்டங்களுக்காக ரிம5.3 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது. பினாங்கு நகராண்மைக் கழகம் மேற்கொள்ளும் இந்தத் திட்டத்தில் சுங்கை பினாங் ஆற்றை மிதிவண்டி ஓட்டுனர்களும் பாதசாரிகளும் கடக்க உதவும் வகையில் ஒரு பாலம் ஒன்றும் கட்டப்படவுள்ளது. இக்கடலோர மிதிவண்டி பாதை இருவழிப் பாதைகளாக அமைக்கப்படும். மேலும், இப்பாதைகள் தோறும் விளக்குகள் பொருத்தப்படுவதுடன் பசுமையை வெளிப்படுத்தும் மரங்களும் நடப்படும். அதுமட்டுமன்றி மக்கள் ஓய்வெடுக்க ஏதுவாக அமையும் வகையில் அமர் தளங்களும் மிதிவண்டியைப் பூட்டி வைக்கும் இடங்களும் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளன.
இத்திட்டத்தையொட்டி பொது மக்கள் தங்கள் கருத்துகளைத் தெரிவிக்க ஏதுவாக அமையும் வகையில் பினாங்கு நகராண்மைக் கழகம் ஏற்பாடு செய்திருந்த கண்காட்சியை மாண்புமிகு முதல்வர் லிம் குவான் எங் அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தார். கடந்த அக்டோபர் 15-இல் தொடங்கிய இக்கருத்துப் பகிர்வு எதிர்வரும் நவம்பர் 15-இல் முடிவுறும். கொம்தார், மூன்றாம் மாடியில் அமைக்கப்பட்டிருக்கும் இக்கண்காட்சியில் பங்குபெற்று பொதுமக்கள் பின்னூட்டுப் படிவத்தை நிறைவு செய்யவும் அல்லது [email protected] என்னும் மின்னஞ்சலுக்குத் தங்கள் கருத்துகளை அனுப்பி வைக்கவும் வரவேற்கப்படுகின்றனர்.
பினாங்கு மக்கள் மட்டுமன்றி வெளிநாட்டுச் சுற்றுப்பயணிகளும் பினாங்கில் அதிகமாக மிதிவண்டியைப் பயன்படுத்துவதால் பினாங்கு மாநிலம் மலேசியாவில் ஒரு மிதிவண்டி மையமாக உருவெடுத்து உலக அரங்கில் குன்றின் மேலிட்ட விளக்காகத் திகழும் என முதல்வர் தம் உரையில் நம்பிக்கை தெரிவித்தார். மேலும், தூய்மை, பசுமை, பாதுகாப்பு, ஆரோக்கியம் நிறைந்த பினாங்கின் உருவாக்கத்திற்கு வழிவகை செய்யும் வகையில் மிதிவண்டி பயன்பாடு ஒரு நல்ல உடற்பயிற்சியாக மட்டுமன்றி சிறந்த போக்குவரத்துச் சாதனமாகவும் விளங்கும் என்பதால் மக்கள் அதனைப் பயன்படுத்த ஊக்கமளித்தார்.