பிறை – அழகுக்கலை நிபுணர், மசாஜ் தெரபி மற்றும் யோகா பயிற்றுவிப்பாளர் என பல தொழில்களில் வெற்றிநடைப்போடும் மீரா, நேர்மறையான சிந்தனையைத் தழுவி மற்றவர்கள் ஆரோக்கியமான வாழ்க்கை முறை வாழ உதவுவதில் அர்ப்பணிப்புடன் சேவையாற்றி வருகிறார்.
53 வயதில், வலுவான ஆளுமையைக் கொண்ட மீரா, தன்னைச் சுற்றியுள்ளவர்களுக்கு, குறிப்பாக பெண்களுக்கு, நல்வாழ்வு, தனிநபர் வளர்ச்சி மற்றும் அதிகாரம் அளிப்பதில் உறுதியாக இருக்கிறார்.
அண்மையில், மீராவின் பயணத்தை அறிய, முத்துச் செய்திகள் நாளிதழ் நிருபர்கள் அவரை நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.
மீரா தனது தாயாருடன் (மருத்துவச்சி) ஐந்து வயது முதல் பிரசவத்திற்குப் பிந்தைய பராமரிப்பு வழங்கச் செல்லும் போதெல்லாம் பின் தொடர்ந்து செல்வது வழக்கமாகும்.
“இந்த மென்மையான நேரத்தில் புதிய தாய்மார்களை அவர் எப்படி பராமரிப்பார் என்பது என்னை மிகவும் கவர்ந்தது. அதே நேரத்தில், குழந்தைகளைக் காண்பதில் நான் மிகவும் விருப்பம் கொண்டேன்.”
“என் அம்மாவின் மறைவுக்குப் பிறகு, நான் இத்துறையில் கால் தடம் பதிக்க விரும்பினேன். எனவே, மகப்பேறு மற்றும் குழந்தை பராமரிப்பு பயிற்சியை மேற்கொண்டு சான்றிதழைப் பெற்றேன். இந்தப் பயிற்சியில், பிரசவத்திற்குப் பிந்தைய தாய், சேய் பராமரிப்பு மற்றும் பாரம்பரிய வைத்திய முறைகள் கற்றுக் கொண்டேன்.
‘மீரா மொபைல் மசாஜ் மற்றும் மகப்பேறு பராமரிப்பு’ நிறுவனத்தின் உரிமையாளரான மீரா, ‘சூடான கல் மசாஜ்கள்’, ‘உடல் ஸ்க்ரப்கள்’, ‘சவ்னா’ மற்றும் மூலிகை குளியல் உள்ளிட்ட பல்வேறு பிரசவத்திற்குப் பிந்தைய பராமரிப்பு சேவைகளை வழங்குவதாகக் கூறினார்.
மீராவின் பிரசவத்திற்குப் பிந்தைய பராமரிப்பின் 30 நாட்கள் திட்டத்திற்கு ரிம4,949 கட்டணம் நிர்ணயிக்கப்படுகின்றது. மேலும், அவர் தாய் மற்றும் புதிதாகப் பிறந்த குழந்தை இருவரின் பராமரிப்புக்குத் தேவையான அனைத்து கருவிகளையும் பொருட்களையும் வழங்குகிறார்.
தொடக்க கால வியாபாரம் பற்றி குறிப்பிடுகையில், மீரா வீடு வீடாகச் சென்று, கனமான பைகளை சுமந்துகொண்டு சேவைகளை வழங்கியதாகக் கூறினார், இது தன்னை மிகவும் சோர்வடையச் செய்யும். எனவே, இறுதியில் தனக்கு மிகவும் வசதியான சூழலை ஏற்படுத்தும் வகையில் ஒரு மசாஜ் மையத்தைத் திறக்க வழிவகுத்தது.
மீராவைப் பொறுத்தவரை, நல்வாழ்வு என்பது ஒரு தொடர் பயணம், அதில் உடலும் மனமும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்பதை தாம் நம்புவதாக குறிப்பிட்டார்.
“மற்றவர்களின் நல்வாழ்வுக்கு நான் பங்களிக்கும்போது, நாமும் நலமாக வாழ்வோம் பிறரையும் நலமாக வாழ வழிவகுப்போம்.
“நான் உடல், மன மற்றும் உணர்ச்சி நல்வாழ்வுக்கு இடையிலான தொடர்பை நம்புகிறேன். சுய பாதுகாப்பு உணருவது ஒருவரின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதைப் புரிந்துகொள்வது அவசியமாகும்,” என்று அவர் கூறினார்.
ஒரு யோகா பயிற்றுவிப்பாளராக, மீரா இதை வெறும் உடல் பயிற்சியாக மட்டும் பார்க்காமல், வாழ்க்கையில் நினைவாற்றல், சுய விழிப்புணர்வு மற்றும் சமநிலையை வளர்ப்பதற்கான ஒரு வழியாக காண்கிறார்.
“யோகா உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் வலிமையாக இருக்க கற்றுக்கொடுக்கிறது,” என்று மீரா கூறினார். மேலும் அவர் யோகாவில் முதுகலைப் பட்டம் பெற்றிருப்பதாகவும் கூறினார்.
அதைத் தவிர, தொழில்முனைவோராக உருவாக வேண்டும் என எண்ணம் கொள்ளும் இளைஞர்கள், வணிகத்தைத் திறம்பட நிர்வகிக்கவும் வளர்ச்சியடையவும் கல்வி அடைத்தளமாக அமைவதாக மீரா வலியுறுத்துகிறார்.
“இளைஞர்கள் தங்கள் பட்டப்படிப்புகளை முடிக்க அறிவுறுத்துகிறேன். அதே நேரத்தில், அதிக உயரங்களை அடைய நீங்கள் திறன்களை வளர்த்து கொள்ள வேண்டும். கல்வியும் திறன்களும் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ளன.
பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதுதான் மீராவின் பணியின் மையமாக உள்ளது. பெண்கள் ஒருவருக்கொருவர் ஆதரவளித்தால், அவர்களால் பெரிய சாதனைகளைச் சாதிக்க முடியும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
“அவரது தொலைநோக்குப் பார்வையின் ஒரு பகுதியாக, தனது சமூகத்தில் உள்ள பெண்களுக்காக ஒரு சமூகநல கூடம், யோகா ஸ்டுடியோ மற்றும் உடற்பயிற்சி மையம் ஆகியவற்றை இணைத்து ஒரு மையத்தை உருவாக்க அவர் திட்டமிட்டுள்ளார்.
நேர்மறையான மனநிலை எந்த சூழ்நிலையையும் மாற்றும் என்பது மீராவின் முக்கிய நம்பிக்கைகளில் ஒன்றாகும். மக்கள் நம்பிக்கையைத் தழுவி, உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் கவனம் செலுத்தக் கற்றுக்கொள்ள வேண்டும் என அவர் ஊக்குவித்தார்.
மேல் விவரங்களுக்கு, மீராவை 014-9516 200 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும் அல்லது 20, மேடன் கிகிக் 1, தாமான் இந்திரவாசேக் என்ற முகவரியில் அமைந்துள்ள அவரது வணிக வளாகத்தை அணுகலாம்.