ஆகஸ்ட் 29- இங்கு கொம்தார் ஐந்தாம் மாடியில் நடைபெற்ற நோன்புப் பெருநாள் விருந்துபசரிப்பில் ஊடகத்துறையாளர்கள் சந்திப்புக்கூட்டமும் ஏற்பாடு செய்யப்பட்டது. பினாங்கு மாநிலத் தலைவர்கள் தங்களது அதிகாரப்பூர்வச் சந்திப்புக் கூட்டத்தில் பகர்ந்து முடிவெடுத்த சில தீர்மானங்களை மக்களுக்குத் தெரிவிக்கும் வகையில் இந்த ஊடகத்துறையாளர்கள் சந்திப்புக் கூட்டமும் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மிக முக்கியமாக விவாதிக்கப்பட்ட விடயம் கட்சித் தாவல் தடைச் சட்டத்தைப் பற்றியதாகும். பினாங்கு மாநில முதல்வர் திரு லிம் குவான் எங் உட்பட மக்கள் கூட்டணி ஆட்சியின் கீழ்ச் செயல்படும் அனைத்து உயர்மட்டத் தலைவர்களும் பினாங்கு மாநிலத்தில் இச்சட்டம் அமலாக்கம் காண்பதை முழுமனதுடன் ஏற்றுக் கொண்டுள்ளனர்.
தொடக்கமாகப், பினாங்கு இரண்டாம் துணை முதல்வரான பேராசிரியர் ப.இராமசாமி உரையாற்றுகையில், மக்கள் கூட்டணி ஆட்சியின் கீழ்ச் செயல்பட்டுவரும் பினாங்கு மாநில அரசு இந்தக் கட்சித் தாவல் செயலைத் தீவிரக் கண்ணோட்டத்தில் பார்க்கிறது. அரசியலுக்குப் பெரும் கேடு விளைவிக்கக்கூடிய இந்த அவமானத்திற்குரியச் செயலை ஒரேயடியாக நிறுத்த வேண்டும் எனக் கூறினார். கட்சித்தாவல் என்பது அளவற்ற நம்பிக்கையோடும் எதிர்பார்ப்போடும் ஓட்டுப் போட்டு நம்மை உயர்ந்த அரியாசனத்தில் அமர வைக்கும் மக்களுக்குச் செய்யும் மன்னிக்க முடியாத நம்பிக்கைத் துரோகம் எனக் கோடி காட்டினார். மேலும், ஜனநாயக முறைப்படி இந்த நியாயமான சட்டம் மக்களால் மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்ளப்படும் எனவும் நம்பிக்கை தெரிவித்தார். எனவே, இச்சட்டத்தை அமல்படுத்தும் முதல் மாநிலமாகப் பினாங்கு உருவெடுக்கும். அதற்கான தீவிர முயற்சிகளை மக்கள் கூட்டணி அரசு எடுத்து வருகிறது என்றார். நேர்மைக்கும் கொள்கைக்கும் எதிரான இந்தச் செயலை முற்றாக ஒழிப்போம் எனப் பகர்ந்து தம் உரையை முடித்தார்.
அடுத்ததாகச், சட்டமன்ற உறுப்பினர் சலெ மான் அவர்களும் கட்சித் தாவல் தடைச்சட்டத்தை ஆதரித்துப் பேசினார். தாங்கள் தேர்ந்தெடுத்து வாக்களிக்கும் தலைவர்கள் தங்களுக்குச் சிறந்த சேவைகளை வழங்குவர் என எதிர்பார்ப்போடு காத்திருக்கும் பல்லாயிரக்கணக்கான வாக்காளர்களின் நம்பிக்கையைத் தகர்த்தெரியும் வகையில் சில பொறுப்பற்ற மக்கள் பிரதிநிதிகள் இவ்வாறான கட்சித்தாவலில் ஈடுபடுவது வேதனைக்குரிய செயல் என்று வருத்தம் தெரிவித்தார். ஆகவே, இந்தச் சட்டத்தை அமலுக்குக் கொண்டு வருவது மிகவும் முக்கியம் என வலியுறுத்தினார்.
உலகம் முழுவதும் இந்தக் கட்சித் தாவல் செயல் நிலவி வருகிறது. இது மக்களால் வழங்கப்படும் நம்பிக்கைக்கு ஊறு விளைவிக்கும் செயலாகும். மக்களால் தேர்ந்த்தெடுக்கப்படும் எந்தவொரு தலைவரும் கட்சித் தாவலில் ஈடுபடக்கூடாது என மிகவும் கண்டிப்பாக வலியுறுத்தினார் ஆட்சிக்குழு உறுப்பினர் திரு சாவ் கொன் யாவ். அரசாங்கத்தை நன்முறையில் வழிநடத்திச் செல்ல ஆற்றல்மிக்க பொறுப்புமிக்க தலைவர்களைத் தேர்ந்தெடுத்து நாட்டை ஆளும் அதிகாரத்தை வழங்குவது குடிமக்களே. ஆகவே, அந்த பொறுப்பைச் செம்மையாகச் செய்யவே அனைத்து அரசியல் தலைவர்களும் பாடுபட வேண்டும். மக்களின் உரிமைகள் மதிக்கப்பட வேண்டும். எக்காலத்திலும் அவர்களின் நம்பிக்கை பின்தள்ளப்படக்கூடாது என்றார்.
தொடர்ந்து, மாநில முதலாம் துணை முதல்வர் டத்தோ மன்சோர் ஹஜி ஒஸ்மான் அவர்களும் இந்நிகழ்வில் உரையாற்றினார். மற்ற மாநிலங்களைக் காட்டிலும் பினாங்கு மாநிலம் என்றுமே தனித்துவம் வாய்ந்ததாகத் திகழ்ந்து வருகிறது. அவ்வகையில் இந்தக் கட்சித் தாவல் தடைச் சட்டத்தைக் கொண்டுவருவதில் பினாங்கு மாநிலம் ஒரு தொடக்கப்புள்ளியாக விளங்கும் என்றார். இந்தக் கட்சித் தாவல் தடைச்சட்டத்தை அமல்படுத்துவதில் மக்கள் நீதிக் கட்சிக்கு எந்தவொரு ஆட்சேபணையும் இல்லை என்று பினாங்கு மக்கள் நீதிக் கட்சியின் தலைவருமான அவர் அறிவித்தார். ஆகவே, கட்சியின் நலன் கருதி மட்டுமன்றி மக்களின் நலன் கருதி இச்சட்டத்தைக் குறித்து நடவடிக்கைகள் எடுக்கப்படும். மிகுந்த நம்பிக்கையோடு வாக்களிக்கும் மக்களின் நலனைக் கருதாது மிக எளிதாகக் கட்சிக்குக் கட்சி தாவுதல் ஒரு பொறுப்புமிக்க தலைவர் செய்யக்கூடிய செயல் அல்ல என வலியுறுத்திக் கூறினார்.
நோன்புப் பெருநாளை முன்னிட்டு நடத்தப்பட்ட இந்த மதிய விருந்துண்ணலின் போது முதல்வர் உயர்திரு லிம் குவான் எங், மக்களுடனான தங்கள் உறவை மக்கள் கூட்டணி வலுப்படுத்தும் எனக் கூறினார். ஜனநாயக செயற்கட்சி, மக்கள் நீதிக் கட்சி மற்றும் மலேசிய இசுலாமியக் கட்சி அடங்கிய மக்கள் கூட்டணி இந்தக் கட்சித் தாவல் தடைச் சட்டத்திற்கு முழு ஆதரவு வழங்கியுள்ளது. இச்செயல் தனிப்பட்ட முக்கியத்துவத்தை மையப்படுத்தியே நடைபெற்று வருகிறது. பணத்திற்காகவோ மற்ற தேவைக்காகவோ இது போன்றவர்கள் அரசியல் தவளைகளாக மாறி வருகின்றனர். எனவே இச்செயல் ஊழலையும் பெருக்கச் செய்கிறது எனலாம். இது ஜனநாயக அரசியல் சுதந்திரத்தையும் கொள்கையினையும் அவமதிக்கும் செயலாகத் திகழ்கிறது என்றால் அது மிகையாகாது என்றார்.
அண்மையில் சபா மாநிலத்தில் தேசிய முன்னணியைச் சேர்ந்த இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள் மக்கள் கூட்டணிக் கட்சிக்குத் தாவி உள்ளனர். இது மிகவும் கண்டிக்கத் தக்கது. இந்தச் செயலைக் குறித்து பினாங்கு மாநிலத்தின் நிலைப்பாடு என்னவென்பதை நாங்கள் அமலுக்குக் கொண்டுவர விரும்பும் இச்சட்டமே பறை சாற்றும் என முதல்வர் மாண்புமிகு லிம் குவான் எங் கருத்துரைத்தார். கடந்த 2009-ஆம் ஆண்டு பேராக் மாநிலத்தில் கட்சித் தாவலினால் ஏற்பட்ட ஆட்சிக் கவிழ்ப்பை இங்கு சுட்டிக் காட்டினார். சிறந்த அரசாங்கத்தை வழி நடத்திச் செல்லக்கூடிய தலைச்சிறந்த தலைவர் என்பவர் அரசியல் பொறுப்புகளையும் ஒருமைப்பாட்டையும் நிலைநிறுத்தக்கூடிய வல்லமை கொண்டவராகத் திகழ்தல் அவசியம். அவ்வகையில், இவ்வாறான அரசியல் தவளைகளாக உருவெடுப்பது யானை தன் தலையிலே மண்ணை வாரிப் போட்டுக் கொள்வதற்குச் சமமாகக் கொள்ளலாம். நல்ல அரசியல் தலைவர்கள், தங்களின் நற்பெயரைச் சீர்குலையச் செய்யும் இவ்வாறான செயல்களில் ஈடுபடுவதைத் முற்றாகத் தவிர்க்க வேண்டும் என்பதே எங்களின் வேண்டுகோள் என மதிப்பிற்குரிய முதல்வர் அவர்கள் வலியுறுத்தினார்.
இச்சட்டத்தைப் பினாங்கு மாநிலத்தில் அமலுக்குக் கொண்டு வருவதைக் குறித்து எதிர்க்கட்சிகளிடமிருந்தும், மத்திய அரசாங்கத்திடமிருந்தும், பல்வேறு அரசியல் கட்சிகளைச் சார்ந்த அரசியல் தலைவர்களிடமிருந்தும் ஏகப்பட்ட எதிர்ப்புகளும் விமர்சனங்களும் வந்த போதிலும் முதல்வர் அவர்களும் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்களும் இச்சட்டத்தைப் பினாங்கு மாநிலத்தில் அமலுக்குக் கொண்டு வருவதில் உறுதியாக இருக்கின்றனர். அதற்கான பணியில் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றனர். 1992-இல் கிளந்தான் மாநிலம் இயற்றி நிறைவேற்றிய இச்சட்டத்தைக் கூட்டரசு நீதிமன்றம் இது சட்டவிரோதமானது என்று தீர்ப்பளித்தது இங்கு குறிப்பிடத்தக்கது. எனினும் பினாங்கு மாநில அரசு இச்சட்டத்தை அமலுக்குக் கொண்டு வருவதைக் குறித்து ஆராய்ந்து வருகிறது. அதற்கான முதல் படியாகச் சட்டப்பூர்வ அமைப்பு ஒன்று அமைக்கப்படும். இவ்வமைப்பு ஆட்சிக்குழு உறுப்பினர் உயர்திரு கர்பால் சிங் தலைமையில் கட்சித் தாவல் தடைச் சட்டத்தைக் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும். இவ்வமைப்பின் மூலம் பினாங்கு அரசியலமைப்புச் சட்டத்தைச் சீர்த்திருத்த நாட்டின் வழக்குரைஞருக்கு அறிவிக்கப்படும் என்று முதல்வர் அக்கூட்டத்தில் அறிவித்தார்.
பினாங்கு மாநிலத்தின் அரசியலமைப்புச் சட்டம் 17 முறை சீர்த்திருத்தப்பட்டிருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது. ஆனால், இம்முறை செய்யப்போகும் சீர்த்திருத்தம் அரசியல் தவளைகளைப் பூட்டி வைக்கும் பூட்டாக மட்டுமன்றி ஒரு வரலாற்றுப் பதிவாகவும் அமையும் என முதல்வர் பறை சாற்றினார். கிளந்தான் மாநிலம் இச்சட்டதைக் கொண்டு வர முயற்சி செய்து தோல்வி கண்டது. ஆனால், ‘ ஊக்கமது கைவிடேல்’ என்ற ஆத்திச் சூடிக்கு ஒப்ப இந்தச் கட்சித் தாவல் தடைச் சட்டத்தைக் கொண்டு வரும் முயற்சியைக் கைவிடாது அதற்கான நடவடிக்கைகளைச் சட்டப்பூர்வமாக எடுத்து பினாங்கு மாநிலம் அதில் வெற்றி பெறும் என நம்பிக்கை தெரிவித்தார்.