ஜோர்ஜ்டவுன் பெர்டானா லையன் கிலாப் ஏற்பாட்டில் ஐந்தாவது முறையாக பார்வை & ஒலி நடை 2013 (Walk For Sight & Sound) என்ற நிகழ்வு நடைபெறவுள்ளது. இந்நிகழ்வு கண் பார்வையற்றவர்களுக்கு நிதித்திரட்டும் நிகழ்வாகத் திகழும். இந்நிகழ்விற்கு பினாங்கு மாநில அரசு, பினாங்கு நகராண்மைக் கழகம் மற்றும் மாநில விளையாட்டு குழுவும் முழுமையான ஆதரவு நல்குகின்றனர். இந்நிகழ்வு 6-10-2013-ஆம் நாள் காலை மணி 7.00க்கு பினாங்கு மாநில தாமான் பெர்படானான், எனும் தளத்தில் நடைபெறும்.
இந்த சிறப்பான நிகழ்வை பினாங்கு ஆளுநர் மதிப்பிற்குரிய துன் டத்தோ ஸ்ரீ டாக்டர் ஹஜி அப்துல் ரஹ்மான் ஹஜி அபாசின் அவர்கள் தொடக்கி வைப்பார். இத்திட்டத்தை இளைஞர், விளையாட்டு, மகளிர், குடும்பம் மற்றும் சமூகப் பிரிவின் ஆட்சிக் குழு உறுப்பினர் மதிப்பிற்குரிய சோங் எங் அவர்கள் அதிகாரப்பூர்வமாகச் செய்தியாளர் சந்திப்பில் அறிவித்தார். இம்மாதிரியான நிகழ்வுகளில் மக்கள் கலந்து கொண்டு முழு ஆதரவை வழங்க வேண்டும் என்றும் உடல் ஊனமுற்றோர்களை நாம் பாதுகாத்து அவர்களும் வாழ வழி வகுக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தார்.
இத்திட்டத்தின் முதன்மை நோக்கமானது இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் இடையே கண் பார்வையற்றவர் மற்றும் காது கேளாதவரின் குறைபாடுகள் பற்றிய விழிப்புணர்வு உருவாக்குவதே ஆகும். கண் பார்வையற்றவர்கள் மற்றும் காது கேளாதவர்களுக்குக் கல்வி, உபகரணங்கள் மற்றும் பயிற்சி வழங்குவதற்கு உதவும் வகையில் நிதித்திரட்டப்படும். இந்நிகழ்வில் சுமார் 3000 பேர் கலந்து கொள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவருக்கு தலா ரி.ம15 கட்டணமாக வசூலிக்கப்படும். முதலில் பதிவுச் செய்யும் 2500 பேருக்குப் பரிசுக்கூடை வழங்கப்படும். இந்நிகழ்வின் மூலம் வசூலிக்கப்படும் நிதியானது சத்.நிகோலஸ் கருணை இல்லத்திற்கு மேற்குறிப்பிடப்பட்டிருக்கும் நோக்கங்களுக்கு பயன்படுத்தப்படும் என்று ஏற்பாட்டுக் குழுத் தலைவர் மெலிசா ஓ தெரிவித்தார். இந்நிகழ்விற்கு விண்ணப்பிக்கும் இறுதி நாள் 26-9-2013 ஆகும். கண் பார்வை அற்றவர்களுக்கு நிதித்திரட்டும் நிகழ்வின் முக்கிய ஆதரவாளர்கள் கேனன் மார்கெட்டிங், எமிகோ ஹொல்டிங், சன் குயிக், ஸ்டார் குருஸ் மற்றும் பலர்.