கம்போங் பாரு ஸ்ரீ காளியம்மன் கோவில் தீமிதித் திருவிழா

Admin
மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங்
மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங்

பினாங்கு மாநிலத்தின் புகழ்பெற்ற திருத்தலங்களில் ஒன்றான ஸ்ரீ காளியம்மன் கோவிலின் தீமிதி உற்சவம் கடந்த மாதம் 29ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமையன்று மிகவும் விமரிசையாக நடைபெற்று முடிந்தது. திருவிழாவை முன்னிட்டு மே 20ஆம் தேதி வெள்ளிக்கிழமையன்று கோவிலில் காப்பு கட்டி கொடியேற்றம் நடந்தது. அதனைத் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் அபிஷேகங்களும் இரவு 7.00 மணி தொடங்கி பஜனைகளும் கூட்டுப் பிரார்த்தனைகளும் அதன்பின் உபயமும் சிறப்புப் பூஜைகளும் இனிதே நடைபெற்றன. பினாங்கு மாநிலத்தின் முக்கியப் பிரமுகர்கள் மற்றும் கோவில் உறுப்பினர்கள் சார்பாக உபயங்கள் சிறப்பாக வழிநடத்தப்பட்டன.
தீமிதித் திருவிழா அன்று ஆலயம் சார்பாக முதலில் கோவில் உறுப்பினர்களால் ஆத்தாவிற்கு 21 மஞ்சள் நீர் குடங்கள் எடுக்கப்பட்டன. பிறகு அதிகாலை 1 மணி முதல் பினாங்கு வாழ் பக்த பெருமக்கள் ஸ்ரீ காளியம்மன் கோவிலுக்கு அலை அலையாகத் திரண்டனர். அவ்வேளை மழை பெய்த போதிலும் பக்த கோடிகள் பால் செம்பு, பால் குடம், காவடி, தீச்சட்டி ஏந்தியும், அடிப்பிரதட்சனை, அங்கப்பிரதட்சனை, ஆணிப்பாத நடை மேற்கொண்டும் தங்கள் நேர்த்திக் கடன்களை செவ்வனே நிறைவேற்றினர். ஆத்தாவைக் காண தூரத்தைக் கூட பொருட்படுத்தாமல் ” ஓம் சக்தி” எனும் நாமத்தை கூறிக்கொண்டு நடந்தே வந்த பல பக்தர்கள் அவளின் திருவுருவைக் கண்டதும் மெய்மறந்து பேரின்பத்தில் திளைத்தனர். அதிகாலையிலேயே ஆத்தாவின் அருளைப் பெற பக்தி பரவசத்துடன் வந்திருந்த பக்தர்களின் பசியைத் தீர்க்க ஆலயத்தில் பல நல்லுள்ளங்கள் காலை உணவை அன்னதானமாக வழங்கினர்.
காலை 6 மணியளவில் அம்மனுக்கு அபிஷேகம் முடிவடைந்ததும் கோவில் கரகப் பூசாரி பால் கரகப் பூஜை செய்தபின், விறகுக் கட்டைகளை எரித்து தீக்குழியைத் தயார் செய்ய சிறப்புப் பூஜைகளை மேற்கொண்டார். .

அன்னை ஶ்ரீ காளியம்மன்.
அன்னை ஶ்ரீ காளியம்மன்.

இதற்கிடையில், பினாங்கு மாநில முதல்வரும், ஆயர் பூத்தே சட்டமன்ற உறுப்பினருமான மாண்புமிகு லிம் குவாங் எங் காலை 9 மணியளவில் ஸ்ரீ காளியம்மன் கோவிலுக்குச் சிறப்பு வருகையளித்தார். அவருடன் ஆயர் ஈத்தாம் சட்டமன்ற உறுப்பினரான மதிப்பிற்குரிய வோங் ஹொன் வாய் அவர்களும் வருகையளித்திருந்தார். அவர்களைக் கொளரவிக்கும் வண்ணம் ஆலயம் சார்பில் தலையில் பட்டுத் துணி கட்டி மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டனர். மக்கள் தங்கள் மதத்தைப் பேணுவதற்கும் மதம் சார்ந்த விழாக்களைக் கொண்டாடுவதற்கும் மாநில அரசு என்றும் ஆதரவளிக்கும். அவ்வகையில் மதச் சுதந்திரம் என்பது இம்மாநிலத்தில் என்றும் காக்கப்படும் என்று முதல்வர் லிம் தம் சிறப்புரையில் வலியுறுத்தினார். மேலும், இங்கு வாழும் மூவின மக்களும் பிற மதங்களுக்கு மதிப்பளித்து ஒற்றுமையோடு வாழ வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். அதோடு, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க முதல்வர் இவ்வாண்டும் 5,000 வெள்ளி நன்கொடையாக வழங்கி ஆதரவளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
காலை 11 மணியளவில் ஸ்ரீ காளியம்மன் கோவிலிலிருந்து புறப்பட்ட இரு இரதங்களும் ஃபார்லிம், கம்போங் பிசாங், ஆயர் ஈத்தாம், ஆயர் பூத்தே, பாடாங் தெம்பாக், லும்பா கூடா, லா சாலே ஆகிய வட்டாரங்களின் வீதி வழியாக ஊர்வலம் வந்தன. தன் எல்லையில் தன்னைக் காண வரும் பக்தர்களை ஆண்டுக்கு ஒரு முறை அவர்களின் எல்லைக்குச் சென்று மகிழ்விக்க இரதத்தில் ஊர்வலம் வரும் ஆத்தாவை வரவேற்க ஆங்காங்கே பந்தல்கள் போடப்பட்டு அன்னதானங்கள் வழங்கப்பட்டன. இரதத்தில் பவனி வந்த காளியாத்தாவிற்குப் பக்த கோடிகள் தேங்காய்கள் உடைத்தும் தீபாராதனைகள் எடுத்தும் அவளின் திருவருளைப் பெற்றனர். கடந்தாண்டைவிட இவ்வாண்டு அதிக பந்தல்கள் போடப்பட்டு பக்தர்களால் அதிகமான தீபாராதனைகள் எடுக்கப்பட்டதால், ஊர்வலம் வந்த இரதங்கள் இரவு 8.40மணியளவில்தான் கோவிலை வந்தடைந்தன.
மழை விட்டு விட்டு பெய்து கொண்டிருந்த நிலையில், பக்தர்கள் பல்லாக்கில் அமர்ந்திருந்த அம்மன் முன்னிலையில் தீமிதித்தும் பால் குடங்களை ஏந்தி தீக்குழியைச் சுற்றி வந்தும் தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றினர். ஆனால் கனத்த மழை பெய்யத் தொடங்கியதால் தீமிதிக்கத் தடங்கல் ஏற்பட்டு அனைத்து பக்தர்களும் தீக்குழியைச் சுற்றிவர மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். எனினும் பக்த கோடிகள் ஆத்தாவின் அன்பு மழையில் நனைந்து கொண்டே திருவிழாவைச் சிறப்புறச் செய்தனர். அந்த அடை மழையிலும் ஆங்காங்கே ஓம் சக்தி எனும் நாமம் மட்டும் ஓங்கி ஒலித்துக் கொண்டிருந்தது. நிறைவாக, சக்தி கரகப் பூசாரி தம் தலையில் ஏந்திய கரகத்தைத் தாரை தப்பட்டையின் முழக்கத்தோடு ஆடி வந்து, கருவறையில் அமர்ந்திருக்கும் ஆத்தாவிடம் கொண்டு சேர்த்தார். பின் சிறப்புப் பூஜைகளுக்கும் அர்ச்சனைகளுக்கும் பிறகு கோவிலில் அன்னதானமும் வழங்கப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்த பெருமக்கள் கலந்து கொண்ட ஸ்ரீ காளியம்மன் கோவிலின் தீமிதித் திருவிழா மிகவும் விமரிசையாக நடைபெற்று இனிதே முடிவுற்றது.
கோவிலின் இடைக்காலத் தலைவராக விளங்கும் திரு.பன்னீர்செல்வம், செயலாளர் திரு.கணேசன், துணைச் செயலாளர் திரு.விஸ்வநாதன், பொருளாளர் திரு.ஆருமுகம் ஆகியோர், திருவிழா தங்கு தடையின்றி சுமூகமாக நடைபெற பக்கபலமாக இருந்த காவல் துறைக்கும், கோவில் தன்னார்வளர்களுக்கும் மற்றும் எல்லாவகையிலும் ஆதரவாக இருந்த பொதுமக்களுக்கும் தங்களின் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொண்டனர். மேலும், இந்தத் திருவிழாவின் வெற்றிக்கு கோவில் உறுப்பினர்களாக விளங்கும் இளைஞர்களின் பங்கு அளப்பறியது என்று வலியுறுத்தியதுடன் இன்னும் அதிகமான இளைஞர்கள் இதுபோன்ற சமூக நிகழ்ச்சிகளில் பங்குபெற்று தங்கள் சேவையை வழங்க வேண்டும் என்றும் செயலாளர் திரு கணேசன் கேட்டுக் கொண்டார்.
*பின்குறிப்பு: திருவிழாவின் காணொளி டிவிடி ரிம 20க்கு விற்பனைக்கு உள்ளது. அதனை பொதுமக்கள் ஆலத்திலிருந்து வாங்கிக் கொள்ளலாம்.